சனி, 26 ஜூன், 2021

டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு மதுரையில் ஒருவர் உயிரிழப்பு

m.dinamalar.com  சென்னை : ''தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் தொற்றால் மதுரையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பாதிப்பை கண்டறிவதற்கான ஆய்வுக் கூடம் 2.5 கோடி ரூபாய் செலவில் சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது'' என மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. டெல்டா பிளஸ் வைரசை பொறுத்தவரை நேற்று முன்தினம் வரை ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டிருந்தார். தற்போது காஞ்சிபுரம் மற்றும் மதுரையை சேர்ந்த இருவருக்கு அந்த தொற்று உறுதியாகி உள்ளது.அதாவது சென்னை கோட்டூரை சேர்ந்த நர்சுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவர் குணமடைந்துள்ளார். அதேபோல காஞ்சிபுரத்தை சேர்ந்தவரும் குணமடைந்துள்ளார்.


மதுரையை சேர்ந்தவர் தான் சிகிச்சை பலினின்றி உயிரிழந்து உள்ளார்.அதன்பின் அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பெங்களூரு மரபணு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த பரிசோதனை முடிவில் டெல்டா பிளஸ் பாதிப்பு உறுதியானது. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் மாதம்தோறும் டெல்டா பிளஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பரிசோதனை மையங்கள் நாடு முழுதும் 14 இடங்களில் மட்டுமே உள்ளன. அவையும் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே சென்னையில் டெல்டா பிளஸ் தொற்றை கண்டறிவதற்கான ஆய்வகத்தை 2.5 கோடி ரூபாய் செலவில் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த ஆய்வகத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம். 25 நாட்களில் ஆய்வகம் பயன்பாட்டுக்கு வரும். தமிழகத்தில் இதுவரை 2822 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அந்த நோய்க்கு எந்த விதமான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறை களை டாக்டர் மோகன் தலைமையிலான 12 பேர் குழு முதல்வரிடம் வழங்கி உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தான் கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு ஆளாகின்றனர். மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு 1.41 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. தட்டுப்பாடு இல்லாமல் தடுப்பூசி போடப்படுகிறது.இவ்வாறு கூறினார்.இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரசால் ஒன்பது பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: