திங்கள், 21 ஜூன், 2021

முதல்வர் வீட்டுக்குச் சென்ற ஆளுநர்: மரியாதை நிமித்தமா - அரசியலா?

முதல்வர் வீட்டுக்குச் சென்ற ஆளுநர்: மரியாதை நிமித்தமா - அரசியலா?

 minnambalam :தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரியின் பொறுப்பு துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் நேற்று (ஜூன் 20) திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

நேற்றிரவு நடைபெற்ற இந்தச் சந்திப்பை மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இரு தரப்பினருமே தெரிவித்தாலும், இதில் அரசியல் இருக்கிறது என்ற விவாதங்களும் நடைபெற்று வருகின்றன. முன்னாள் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை 2019ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திடீரென தெலங்கானா மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் அண்மையில் புதுச்சேரிக்கும் பொறுப்பு துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார்.

இந்தச் சந்திப்பு குறித்து தெலங்கானா ஆளுநருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரித்ததில், “நேற்று ஆளுநர் சென்னையில் இருந்தார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பின் ஸ்டாலினை அவர் சந்திக்கவில்லை. எனவே சந்தித்து வாழ்த்து தெரிவித்துவிடலாம் என நினைத்து சந்தித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் புள்ளி என்பதைத் தவிர இதில் வேறு ஏதும் சங்கதி இல்லை” என்கிறார்கள்.

ஆனால், தமிழக முதல்வர், பிரதமர் மோடியை ஜூன் 18ஆம் தேதி மாலை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில், இரண்டு நாட்கள் கழித்து ஆளுநர் தமிழிசை சந்தித்திருப்பது பல்வேறு யூகங்களை எழுப்பியிருக்கிறது. பொதுவாகவே ஆளுநர் தமிழிசை, அரசியல் சாசனப் பொறுப்பேற்று ஹைதராபாத்துக்குச் சென்றுவிட்டாலும் தமிழ்நாட்டு அரசியல் சூழல்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவரிடம் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழக அரசியல் சூழல் பற்றி ஆலோசனைகளைப் பிரதமர் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் பிரதமர் சந்திப்புக்கு இரு நாட்கள் கழித்து பிரதமரின் நம்பிக்கைக்குரிய ஆளுநர் தமிழிசை, தமிழக முதல்வரைச் சந்தித்திருப்பது இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்பதைத் தாண்டியதாக இருக்குமோ என்ற விவாதம் தமிழ்நாடு பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரிடமும் நடைபெற்றது.

முதல்வர் - ஆளுநர் சந்திப்பு பற்றி தமிழக பாஜகவினரும், ஆர்எஸ்எஸ்ஸினரும் நேற்று இரவே வாட்ஸ்அப் கால்களில் பேசி விவாதித்திருக்கின்றனர். தற்போதைய நாட்டின் சூழலில் அரசியல்வாதிகளுக்கு இணையாக ஆளுநர்களும் அரசியல் செய்துவரும் சூழலில், தமிழக முதல்வர் - தெலங்கானா ஆளுநர் சந்திப்பும் அரசியல் கிளப் ஹவுஸில் பல குரல்களை எழுப்பியுள்ளது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: