செவ்வாய், 22 ஜூன், 2021

பாஜகவுக்கு எதிராக மூன்றாவது அணி: இன்று டெல்லியில் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

மின்னம்பலம் :ஜூன் 18 ஆம் தேதி திமுக தலைவரும் தமிழ்நாடு க முதல்வருமான மு.க.ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், ராகுல் காந்தியையும் சந்தித்துவிட்டுத் திரும்பிய நிலையில்....
இந்திய அளவிலான மூன்றாவது அணிக்கான காட்சிகள் இப்போது டெல்லியில் தென்பட ஆரம்பித்துள்ளன.
ஏற்கனவே ஜூன்11 ஆம் தேதி மும்பையில் சந்தித்து சில மணி நேரங்கள் உரையாடிய தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரும் தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் பத்து நாள் இடைவெளியில் ஜூன் 21 ஆம் தேதி டெல்லியில் மீண்டும் சந்தித்து உரையாடியிருக்கிறார்கள்.
இது தேசிய அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
பிரசாந்த கிஷோர், “இது வழக்கமான சந்திப்பு”என்று கருத்து வெளியிட்டிருந்தாலும்
2024 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் இல்லாத வலிமையான மாநிலக் கட்சிகளைக் கொண்ட கூட்டணியை கட்டியெழுப்புவதற்கான கூட்டமாகவே இது பார்க்கப்படுகிறது.இந்தக் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளதையடுத்து இன்று (ஜூன் 22) டெல்லியில் பல்வேறு எதிர்கட்சித் தலைவர்களை சரத் பவார் சந்திக்கிறார்.

"பிற அரசியல் கட்சிகளின் தலைவர்களின் முக்கியமான கூட்டம் நாளை (ஜூன் 21) டெல்லியில் சரத் பவார் தலைமையில் நடைபெறும். இந்த கூட்டத்தில் என்சிபி, ஆம் ஆத்மி கட்சி, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் கலந்து கொள்வார்கள்" என்று நேற்று தேசிய வாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “இந்த கூட்டத்தில் ஃபாரூக் அப்துல்லா, யஷ்வந்த் சின்ஹா, பவன் வர்மா, சஞ்சய் சிங், டி ராஜா, சீதாராம் யெச்சூரி ஜாவேத் அக்தர், கே.டி.எஸ் துளசி, கரண் தாப்பர் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும்” என்றும் மாலிக் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு வாஜ்பாய் அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் பாஜக முக்கிய தலைவரான யஷ்வந்த் சின்ஹா தனது ராஷ்டிரிய மஞ்ச் என்ற அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்துள்ளார். இவர் இப்போது மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் இரு வருடங்கள் இருக்கும் நிலையில் எதிர்க்கட்சிகளைச் சேர்த்து ஒற்றை அணிக்கான விதை முதன் முதலாக இப்போதுதான் டெல்லியில் விழுந்துள்ளது. கலைஞர் காலம் தொட்டு காங்கிரஸின் நட்புறவு தொடர்கிறது என்று சோனியாவை சந்தித்தபோது குறிப்பிட்டிருக்கும் திமுகவின் நிலைப்பாடு இதில் என்னவாக இருக்கும் என்பது இப்போது தமிழகத்தில் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: