புதன், 23 ஜூன், 2021

காங்கிரஸ் திமுக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் களையிழந்தது!

மின்னம்பலம் : காங்கிரஸ் திமுக அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் களையிழந்தது!
வர இருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான, எதிர்க்கட்சிகளின் அணிதிரட்டலுக்கு முகாந்திரமிட்ட சரத்பவார் தலைமையிலான கூட்டம் நேற்று (ஜூன் 22) டெல்லியில் நடந்தது.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரான சரத்பவாரின் டெல்லி வீட்டில் நடந்த இந்த கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை.
கலந்துகொண்ட கட்சி சார்பிலும் இரண்டாம் கட்ட பிரதிநிதிகளே அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர்.
மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி, சமாஜ்வாடி கட்சி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட எட்டு கட்சிகள் இடம்பெற்றன. காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
எட்டு எதிர்க்கட்சிகளே இந்தக் கூட்டத்துக்கு வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியின் பொறுப்பை யஷ்வந்த் சின்ஹாவிடம் அளித்துவிட்டார்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர்,

"இந்தக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தது யஷ்வந்த் சின்ஹாதான். ஷரத் பவார் அல்ல.
இது ஒரு அரசியல் சந்திப்பும் அல்ல. இந்த சந்திப்பு காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணியை உருவாக்க நடந்ததாக பேச்சுக்கள் உள்ளன,
இது உண்மைய‌ல்ல. எதிர்க்கட்சிகளிடையே எந்தப் பாகுபாடும் இல்லை. நாங்கள் அனைவரையும் ஒத்த எண்ணம் கொண்டவர்களைதான் அழைத்தோம்.
நாங்கள் காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்தோம். நாங்கள் காங்கிரஸை அழைக்கவில்லை என்பது உண்மையல்ல "என்று கூட்டத்துக்குப் பின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான மஜீத் மேமன் தெரிவித்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் என்பது ஆரம்பத்திலேயே பிசுபிசுத்துப் போயிருக்கிறது.  -வேந்தன்

கருத்துகள் இல்லை: