செவ்வாய், 22 ஜூன், 2021

போலி பட்டாவுக்கு ரூ. 200 கோடி – காஞ்சிபுர நெடுஞ்சாலைத்துறை ஊழல்

ஆ.விஜயானந்த் -      பிபிசி தமிழுக்காக  :  சென்னை – பெங்களூரு ஆறு வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தியபோது ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் முறைகேடாக பட்டா பெற்ற அரசு நிலங்களை, அரசுக்கே விற்று ரூ. 200 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாக வருவாய்த்துறை அலுவலர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து சுற்றியுள்ள 37 கிராமங்களில் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்யப்படுவதாகவும் அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
சென்னை – பெங்களூரு இடையே போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் `எக்ஸ்பிரஸ் ஹைவே’ என்ற திட்டத்தை இந்திய அரசு அறிவித்தது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் சுமார் 7,800 கோடி ரூபாய் செலவில் ஆறு வழிச்சாலை திட்டம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கான திட்டப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் கடந்த 2012 ஆம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தப் பணிகள் நிறைவடைந்தால் சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு 2.30 மணிநேரத்தில் சென்றடைய முடியும் என்று கூறப்பட்டது.

பெங்களூருவில் இருந்து கோலார், சித்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் வழியாக சென்னையை வந்தடையும் வகையில் 260 கிலோமீட்டர் தூர சாலையாக இது அமையும்.

இதில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 100 கிலோ மீட்டர் நீளத்துக்கு சாலைகள் போடப்படும். இதற்காக தமிழ்நாட்டில் மட்டும் 1,000 ஹெக்டேர் நிலங்கள் தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலைத் துறை தெரிவித்திருந்தது. இதற்கான பணிகள் மெதுவாக நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு இந்தப் பணி வேகம் பிடித்தது.
பட்டாவாக மாறிய அனாதீன நிலம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே நிலம் கையகப்படுத்தியபோது மோசடியாக அரசு நிலத்தை பட்டா செய்துகொண்ட சிலர் இந்த சாலைப் பணிக்காக நிலம் கையகப்படுத்தியபோது அந்த நிலத்தை அரசுக்கே மீண்டும் அந்த நிலத்தை விற்று ரூ.200 கோடி வரை மோசடி செய்திருப்பதாக புகார் கிளம்பியது.

இப்படி நிலம் கையகப்படுத்தும் பணியின்போது அரசு நிலத்தையே அரசுக்கு விற்றுப் பலனடைந்ததாக குற்றம்சாட்டப்படும் ஒருவர் மீது காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் 23.4.2021 அன்று ஸ்ரீபெரும்புதூர் வட்டாட்சியர் வெங்கடேசன் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த எஃப்.ஐ.ஆரில், “காஞ்சிபுரம் மாவட்டம், பீமன் தாங்கல் கிராமத்தில் புல எண் 310/1ல் உள்ள 7.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றம் செய்துள்ளனர். பீமன் தாங்கல் கிராமம் 310/1ல் உள்ள 7.5 ஏக்கர் நிலம் நிலவரித் திட்ட நிலப்பதிவேட்டில் `மேய்க்கால் நிலம்’ எனப் பதிவாகியுள்ளது.
நிலம்

பின்னர் நில உடைமை மேம்பாட்டுத் திட்ட (அ) பதிவேட்டில் `அனாதீனம்’ எனப் பதிவாகியுள்ளது.

பின்னர் பட்டா எண் : 3501-ல் புதிய உட்பிரிவு எண் : 310/37ன்படி ஆசிஷ் ஜெயின் என்பவர் பெயரில் பட்டா பதிவாகியுள்ளது.

இந்த நிலம் 1957 முதல் இந்த நிலத்தை அனுபவத்தில் வைத்திருந்த வேணுகோபால் என்பவரின் வாரிசுகளிடம் இருந்து 2004 ஆம் ஆண்டு ஆசிஷ் ஜெயின் கிரயம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது. அப்போது காஞ்சிபுரம் மாவட்டத்துக்குப் பொறுப்பு வகித்த திருவண்ணாமலை நிலவரித்திட்ட உதவி அலுவலரின் உத்தரவின்படி மேற்படி நிலம் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சிக்கிய அதிகாரிகள்

இந்நிலையில், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்தில் நில எடுப்பு இழப்பீட்டுத் தொகையாக 7.5 ஏக்கர் நிலத்துக்கு 33 கோடி ரூபாயை ஆசிஷ் ஜெயின் பெற்றுள்ளார். போலியாக ஆவணங்களை சமர்ப்பித்து மதிப்புமிக்க அரசு நிலத்தினை பட்டா மாற்றம் செய்துள்ளது, மேற்படி உத்தரவுகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் முறைகேடாக பட்டா மாற்றம் செய்த ஆசிஷ் ஜெயின், இதற்கு உதவியாக இருந்த திருவண்ணாமலை நிலவரித் திட்ட உதவி அலுவலர் (பொறுப்பு) இரா.சண்முகம், பட்டா மாற்றம் நடைபெற்ற காலத்தில் பணிபுரிந்த ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது உரிய பிரிவுகளின்கீழ் குற்ற வழக்கு பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீதும் ஆசிஷ் ஜெயின் என்பவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனாதீன நிலம் என்றால் என்ன?

வேணுகோபால் வாரிசுகளிடம் இருந்து கிரயம் பெறப்பட்டதாக ஆசிஷ் ஜெயின் தரப்பு கூறும் நிலையில், இதை அரசு நிலம் என்று அரசாங்கம் எப்படிச் சொல்கிறது? அரசு நிலத்திலும் இது அனாதீனம் என வகைப்படுத்தப்பட்ட நிலம் என்று அரசாங்கம் சொல்கிறதே, அனாதீனம் என்றால் என்ன?

அனாதீனம் என்பதற்கு அரசிடம் உள்ள உரிமை கோரப்படாத நிலம் என்று பொருள்.

ஆசிஷ் ஜெயின் முறைகேடாக பட்டா பெற்றுக்கொண்டதாக குற்றம்சாட்டப்படும் நிலம் அரசுக்கு சொந்தமாவதற்கு முன்பு தங்களுக்கு உரிமையாக இருந்தது என்றும், நில உச்சவரம்பு சட்டத்தின்கீழ் அந்த நிலம் அரசாங்கத்தால் எடுத்துக்கொள்ளப்பட்டு, அதுவே அனாதீனமாக வைக்கப்பட்டிருந்தது என்றும் கூறுகிறார் நவக்கொடி நாராயணன் என்பவர். இது இந்த சிக்கலான வழக்கின் இன்னொரு கோணம்.

“காஞ்சிபுரம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் நில புரோக்கர்களும் கூட்டணி அமைத்து முறைகேடாக பட்டாக்களை தயாரித்துள்ளனர். இதுதொடர்பாக, தமிழ்நாடு நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சாலிடம் புகார் கொடுத்துள்ளேன். அதன்பேரில் விசாரணை நடைபெற்று வருகிறது” என்கிறார் நவக்கொடி நாராயணன்.

இவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பீமன் தாங்கல் நிலம் தொடர்பாக மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார் அவர். கடந்த நூற்றாண்டில் “எங்கள் அப்பா தேவராஜ் பிள்ளைக்கு தான செட்டில்மென்ட் அடிப்படையில் பீமன் தாங்கல் தேவகி அம்மாள், வேணுகோபால் ரெட்டி ஆகியோர் 125 ஏக்கர் நிலத்தைக் கொடுத்துள்ளனர். அதில் விவசாயம் நடந்து வந்தது. 1961ஆம் ஆண்டு நில உச்சவரம்புச் சட்டத்தின்படி இந்த நிலத்தை அரசு கையகப்படுத்திவிட்டது. ஆனால், இந்த நிலங்கள் யாருக்கும் பகிர்ந்தளிக்கப்படாமல் அனாதீனமாகவே இருந்து வந்தது” என்கிறார் நவக்கொடி நாராயணன்.
சுருட்டப்பட்ட அரசு நிலங்கள்

மேலும் பேசிய அவர், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட பிறகு ஸ்ரீபெரும்புதூரில் நிலங்களுக்கு அதிக மதிப்பு ஏற்பட்டது. அரசாங்கம் பயன்படுத்தாமல் உள்ள நிலங்களுக்கு யாராவது உரிமை கோரினால் நிலவரி திட்ட அலுவலர் பட்டா கொடுக்கலாம் என்றொரு திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது. இதன் அடிப்படையில் எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொடர்ந்து பட்டா கேட்டும் மறுக்கப்பட்டது. இதன்பின்னர், 2004 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தப் பகுதியில் ஆசிஷ் ஜெயின், தினேஷ் குரானா, பிரின்ஸ் பில்டிங் உள்பட நிறைய பேர் நிலங்களை வாங்கிவிட்டனர். இந்த 125 ஏக்கரில்தான் ஆசிஷ் ஜெயின் வாங்கியதாக கூறும் 7.5 ஏக்கர் நிலமும் வருகிறது.

இதில், என் அப்பாவுக்கு தான செட்டில்மெண்ட் எழுதிக் கொடுத்த வேணுகோபாலின் வாரிசுகள்தான், இவர்களுக்கு நிலங்களை விற்றதாக சொல்கின்றனர். ஆனால், 1961ல் இது அரசாங்க நிலமாக மாறிவிட்டது” என்கிறார்.

அதாவது தேவராஜ் பிள்ளைக்கு தானசெட்டில்மெண்ட் தரப்பட்டதும், பிறகு 1961ல் அரசாங்க நிலமாக மாறியதும் மறைக்கப்பட்டு, முன்னர் இந்த நிலத்துக்கு உரிமையாளராக இருந்தவர்களின் வாரிசுகளிடம் இருந்து கிரயம் வாங்கியதாக ஆவணங்கள் உருவாக்கப்பட்டு, பட்டா மாற்றமும் பெற்றதாக குற்றம்சாட்டுகிறார் நவக்கொடி நாராயணன்.

வட்டாட்சியர் அளித்துள்ள போலீஸ் புகாரின் சாரமும் இதுதான்.

நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் மிகை நிலங்களை கையகப்படுத்திய அரசு அதை நிலமற்றவர்களுக்கும் பிரித்துக் கொடுக்கவில்லை, தானும் பயன்படுத்தவில்லை, எவரிடம் இருந்து மிகை நிலமாக எடுத்ததோ அவரது வாரிசுகள் திரும்பவும் பட்டா கேட்டும் கிடைக்கவில்லை.

ஆனால், வேறெவரோ இந்த நிலத்தை முறைகேடாக வாங்கி, பட்டா பெற்று, அதைக் கொண்டு நில வணிகத்திலும் ஈடுபட முடிந்திருக்கிறது. இதற்கு நடுவில் நெடுஞ்சாலைக்கு அந்த நிலம் தேவைப்படவே, அதை எடுத்துக்கொண்ட அரசாங்கம், அது தனக்கு உரிமையான நிலம் என்று தெரியாமலே முறைகேடாக அதை கைப்பற்றி வைத்திருந்தவருக்கு இழப்பீடும் தந்திருக்கிறது என்பதுதான் நவக்கொடி நாராயணன் கூறும் புகாரின் சாரம்.
நிலம்

“இந்த நிலங்களை எல்லாம் 2000வது ஆண்டிலேயே வாங்கிவிட்டதாக நீதிமன்றத்தில் வாதிட்டு ஆசிஷ் ஜெயின் உத்தரவு வாங்கினார். அதை தாசில்தார் அலுவலகத்தில் காட்டி பட்டாவும் பெற்றுவிட்டார். ஆனால், இந்த நிலம் 2004 ஆம் ஆண்டில்தான் பத்திரப்பதிவே செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறுகிறார் நவக்கொடி நாராயணன்.
அலட்சியப்படுத்தப்படும் அனாதீன நிலங்கள்

“வேணுகோபால் ரெட்டியாரின் மகன்கள், மகள்கள் என சிலர் கையொப்பம் போட்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வில்லங்க சான்றிதழ் பெறுவதற்கு சர்வே எண் : 310/1 எனப் போட்டால் `அனாதீனம்’ என்றுதான் வரும். இந்த விவகாரத்தில் உள்ளூர் தாசில்தார் உள்பட சில அதிகாரிகளை வைத்துக் கொண்டு 310/2 எனப் பதிவிட்டுள்ளனர். இவ்வாறு செய்தால் வில்லங்க சான்றிதழில் அனாதீனம் எனக் காட்டப் போவதில்லை. இதுபோல் திட்டமிட்டு வேலை செய்துள்ளனர். இதன்பேரில் பத்திரப் பதிவு செய்தது மிகவும் தவறானது. இதுபோல் லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அனாதீனமாக உள்ளன. எங்களிடம் இருந்து நிலத்தை அரசு கையகப்படுத்திய பிறகு அதனை முறையாகப் பாதுகாக்கவில்லை.

இதுதொடர்பாக, டி.ஆர்.ஓ நர்மதாவை நேரில் சந்தித்து, ` இந்தப் பட்டா போலியானது’ எனக் குறிப்பிட்டோம். அவரோ, `நீங்கள் நீதிமன்றத்துக்குச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்’ எனக் கூறிவிட்டார். இந்தப் பகுதியில் 6 வழிச்சாலைக்காக 175 ஏக்கர் நிலங்களை அரசு கையகப்படுத்தியுள்ளது. இதற்காக 70 பேருக்கு 200 கோடியை இழப்பீடாக வழங்கியுள்ளனர். நான் முதலில் ஆசிஷ் ஜெயின் பெயரை மட்டும்தான் புகாரில் தெரிவித்தேன். இதன்பிறகு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 70 பேருக்கு மேல் போலி பட்டாவை காட்டி இழப்பீடு பெற்றது தெரியவந்தது” என்கிறார் அவர்.
நில நிர்வாக ஆணையரின் கோபம்

மேலும், “இந்த மோசடி தொடர்பாக நில நிர்வாக ஆணையர் பங்கஜ்குமார் பன்சாலுக்கு புகார் அனுப்பினேன். அவரது அலுவலகத்தில் நடந்த விசாரணையில் நான் ஆஜரானேன். ஆனால், ஆசிஷ் ஜெயின் தரப்பில் யாரும் சரிவர ஆஜராகவில்லை. இதனால் கோபப்பட்ட நில நிர்வாக ஆணையர், இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்துள்ளார். இதுதொடர்பாக, தாசில்தார் வெங்கடேசனும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலத்தை அரசே பயன்படுத்தியிருந்தால் நாங்கள் உரிமை கோரியிருக்க மாட்டோம். அவ்வாறு இல்லாமல் தனி நபர்கள் பலனடையத் தொடங்கியதால்தான் புகார் கொடுத்தோம்.
முதல் தகவல் அறிக்கை

அனாதீனமான சொத்துக்கு முறையான பட்டா வாங்கினால் மட்டுமே பயன்படுத்த முடியும். எங்கள் நிலம் என்பது தொடர்பாக நான்கு முக்கிய ஆவணங்கள் உள்ளன. ஆசிஷ் ஜெயின் வந்த பிறகு நாங்கள் கொடுக்கும் மனுக்களை எல்லாம் அதிகாரிகள் பொருட்படுத்தவே இல்லை. அவரிடம் நிலம் வாங்கிக் குடியேறிவர்களிடமும், `இது அனாதீனமான நிலம், நாளைக்கு சிக்கல் வரும்’ எனக் கூறியபோது, எங்கள் பேச்சை அவர்கள் கேட்கவில்லை” என்கிறார் நாராயணன்.
பழையபடி மாறிய ஆவணங்கள்

பீமன் தாங்கல் கிராமத்தில் நடந்த நில மோசடி தொடர்பாக, ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் வெங்கடேசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “ அரசின் மேய்க்கால் மற்றும் அனாதீனமான நிலங்களை எல்லாம் போலி பட்டா மூலம் விற்றுள்ளனர். அந்த நிலங்களை எல்லாம் பழையபடி மேய்க்கால் மற்றும் புறம்போக்கும் நிலங்களாக மாற்றியமைத்துவிட்டோம். அரசின் ஆவணங்களில் பழையபடியே அவை குறிப்பிடப்பட்டுவிட்டன. இனிவரும் காலங்களில் பத்திரப் பதிவு செய்ய முடியாதபடி செய்துவிட்டோம்” என்கிறார்.

தொடர்ந்து பேசுகையில், “இங்குள்ள நிலங்களில் அதிகப்படியாக மோசடி செய்தது ஆசிஷ் ஜெயின் என்பவர்தான். இந்த நிலங்களை பட்டா போட்டு அவர் பொதுமக்களுக்கு விற்றுள்ளார். அங்கு சுமார் 25 குடும்பங்களுக்கு மேல் வசிக்கின்றனர். இதுதவிர ஏராளமான கடைகளும் உள்ளன. அவர்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக அரசு என்ன உத்தரவிடுகிறதோ அதன்படியே செயல்படுவோம். மேலும், நெடுஞ்சாலைத்துறையில் 200 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கும் நில நிர்வாக ஆணையர் பரிந்துரை செய்துள்ளார்.

அனாதீனமாக மாறிய நிலங்கள் எல்லாம் எப்படி பட்டாவாக மாறியது என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. வேணுகோபால் ரெட்டியாரின் வாரிசுகளிடம் இருந்து எப்படி நிலத்தை வாங்கினார்கள் என்பது தொடர்பாக விசாரித்து வருகிறோம். நிலவரித் திட்ட ஆவணங்களுக்கு (Settlement land record) முன்பு இந்த நிலங்கள் அனைத்தும் மேய்க்கால் மற்றும் அனாதீனம் என ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலத்தை முறைகேடாக பட்டா நிலமாக மாற்றியது தொடர்பாக அப்போதைய தாசில்தார், திருவண்ணாமலை நிலவரித் திட்ட உதவி அலுவலர் உள்பட அனைவர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது” என்கிறார்.
மோசடி நடந்தது எப்படி?

“1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அனாதீனமான நிலங்களை விசாரித்து பட்டா கொடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் இருந்தது. அதன் பிறகு நில நிர்வாக ஆணையருக்கு (CLA) மட்டுமே அதிகாரம் உள்ளதாக விதிகள் மாற்றப்பட்டன. பீமன் தாங்கல் நில விவகாரத்தைப் பொறுத்தவரையில் சி.எல்.ஏவின் பார்வைக்குக் கொண்டு செல்லாமல் நிலவரி திட்ட உதவி அலுவலரே பட்டா போட்டுக் கொடுத்துள்ளதை அறிய முடிகிறது” என்கிறார் வெங்கடேசன்.

அதேநேரம், ஆசிஷ் ஜெயின் மட்டுமல்லாமல் பீமன் தாங்கல் கிராமத்தில் இதேபோல் முறைகேடாக பட்டா செய்துகொண்ட 82 ஏக்கர் அரசு அரசு நிலத்தை நெடுஞ்சாலைத் திட்டத்துக்காக மத்திய அரசு நில எடுப்பு செய்துகொண்ட நிலையில், அதற்காக 70 பேருக்கு 200 கோடி ரூபாய் வரையில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது என்கிறார்கள் அதிகாரிகள்.

“பீமன் தாங்கலில் மட்டும் 70 பேருக்கு 200 கோடி வரையில் இழப்பீடு கொடுத்துள்ளனர். எந்த அடிப்படையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பணத்தைக் கொடுத்தனர் என்பது தொடர்பாக விசாரணை நடத்தத்தான் சி.பி.ஐக்கு பரிந்துரை செய்துள்ளனர். புறம்போக்கு நிலம் எப்படி பட்டாவாக மாறியது என்பது தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்கிறார் வெங்கடேசன்.

`பீமன் தாங்கல் கிராமத்தைத் தொடர்ந்து சுற்றியுள்ள 37 கிராமங்களிலும் இதேபோல் போலி பட்டா மூலம் மோசடி நடந்ததா?’ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரியவருகிறது.

முறைகேடாக நிலத்தை பதிவு செய்துகொண்டு, பட்டா மாற்றமும் பெற்றதாக குற்றம்சாட்டப்படும் ஆசிஷ் ஜெயின் தலைமறைவாக இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
காஞ்சிபுரம் எஸ்.பி சொல்வது என்ன?

“ஆசிஷ் ஜெயின் தற்போது எங்கேயிருக்கிறார்?” என்பது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் வெங்கடாச்சலத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம்.

`எங்களிடம் அளிக்கப்பட்ட மனுவில், அவரது பெயரை மட்டும்தான் குறிப்பிட்டுள்ளனர். அவரது தொடர்பு எண்கள் எதுவும் இல்லை. அவரது வீட்டு முகவரி மட்டும் உள்ளதால் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளோம். இந்தச் சம்பவத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் என்பதால் அவரோடு எங்களுக்கு எந்தவிதத் தொடர்புகளும் இல்லை. தற்போது முதல்கட்ட விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஏராளமான ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

அவற்றையெல்லாம் சரிபார்த்த பிறகு பேசுகிறேன்” என்று அவர் கூறினார்.

பீமன் தாங்கல் கிராமத்தில் நடந்த நில முறைகேடு தொடர்பாக, காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி டாக்டர்.சுதாகரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். “முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்து மாவட்ட குற்றப் பிரிவில் விசாரணை நடந்து வருகிறது. எத்தனை பேரை விசாரிக்க வேண்டும், என்னென்ன ஆவணங்கள் உள்ளன என்பது தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு நாள்களில் இதுதொடர்பான வடிவம் கிடைத்தவுடன் உங்களுடன் பேசுகிறேன்” என்றார்.

மேலும், “ ஆசிஷ் ஜெயின் தொடர்பாக வாக்குமூலங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையை விரைவில் மேற்கொள்வோம்” என்றார்.

முறைகேடாக நிலத்தை பதிவு செய்துகொண்டு, பட்டா மாற்றமும் பெற்றதாக குற்றம்சாட்டப்படும் ஆசிஷ் ஜெயினிடம் பேசுவதற்காக சென்னை அசோக் நகரில் உள்ள அவரது அலுவலக எண்ணுக்கு பிபிசி தமிழுக்காக தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்ற அலுவலக உதவியாளர் ஒருவர், “தற்போது அலுவலகத்துக்கு யாரும் வருவதில்லை. இதுதொடர்பாக விரைவில் அவர் உங்களிடம் பேசுவார்” என்றார்.

`பீமன் தாங்கல் கிராமத்தைத் தொடர்ந்து சுற்றியுள்ள 37 கிராமங்களிலும் இதேபோல் போலி பட்டா மூலம் மோசடி நடந்ததா?’ என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிய வருகிறது.

கருத்துகள் இல்லை: