வியாழன், 24 ஜூன், 2021

சட்டமன்றத்தில் மூத்த அமைச்சரை (துரைமுருகன்) அமைச்சர் (ராஜ கண்ணப்பன்) அவமதித்தாக திமுக சலசலப்பு

சீனியர் அமைச்சரை அவமதித்த ஜூனியர் அமைச்சர்?

 மின்னம்பலம்  : தமிழ்நாடு  சட்டமன்றத்தில் சீனியர் அமைச்சரை, ஜூனியர் அமைச்சர் அவமதித்தாக திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சலசலப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரிடம் பேசினோம்.

“தமிழ்நாடு க 16வது சட்டமன்றத் கூட்டத்தொடரில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஆளுநர் உரைமீதான விவாதம் நடைபெற்றது. அன்று, கொரோன வைரஸ் தொற்று சம்பந்தமாக சுகாதாரத் துறையைப் பற்றி எதிர்கட்சித் தலைவர் ஒபிஎஸ் மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதற்கு, பதிலடி கொடுக்கும் வகையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் கண்ணப்பன் பேசினார். அவர் பேசிக் கொண்டிருந்தபோதே அவை முன்னவரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன், எழுந்து பேச்சை நிறுத்துமாறு கண்ணப்பனை நோக்கி கையால் சைகை காட்டியிருக்கிறார்.

அமைச்சர் கண்ணப்பன் காட்டமாக, ‘இருங்கண்ணா’ என்று சொல்லிவிட்டு தொடர்ந்து பேசியபோது மைக் கட் செய்யப்பட்டது. இதனால் ராஜகண்ணப்பனும் டென்ஷன் ஆனார். துரைமுருகனும் இந்த சம்பவத்தில் வருத்தம் அடைந்திருக்கிறார்.

சீனியர் அமைச்சர் துரைமுருகனின் பேச்சை கேட்காமல் அமைச்சர் கண்ணப்பன் பேசியதற்குப் பின்னால் இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு, ‘அதிமுக ஆட்சியிலும் அமைச்சர் பதவி திமுக ஆட்சியிலும் அமைச்சர் பதவி அனுபவிக்கிறாங்க...ராசிக்காரங்க’ என தனது வழக்கமான பாணியில் நகைச்சுவையாக துரைமுருகன் தனது நட்பு வட்டாரத்தில் பேசியுள்ளார். அதை சிலர் கண்ணப்பனிடம் சொல்லி, ‘உங்களைத்தான் துரைமுருகன் சொல்லுகிறார்’என்று உசுப்பேற்றியுள்ளனர். அந்த கோபத்தில் இருந்த அமைச்சர் கண்ணப்பன் நேரம் பார்த்து சீனியர் அமைச்சர் துரைமுருகனை மூக்குடைப்பது போல் பேசிவிட்டாரோ என்னவோ?”என்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள்.

இந்த சம்பவம் அமைச்சர் துரைமுருகனை மனதளவில் பாதித்திருப்பதாக சொல்கிறார்கள் அவரைச் சுற்றி இருப்பவர்கள்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: