வெள்ளி, 25 ஜூன், 2021

85 நாடுகளில் டெல்டா உருமாறிய வைரஸ்; உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தக்கூடும் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

 தந்தி டிவி :இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் ஆவேச தாக்குதலுக்கு காரணமான டெல்டா உருமாறிய வைரஸ், உலகமெங்கும் 85 நாடுகளுக்கு பரவி உள்ளதாக கூறியிருக்கும் உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
கவலைக்குரிய உருமாறிய கொரோனா வைரஸ்களான ஆல்பா, பீட்டா, காமா மற்றும் டெல்டா வைரஸ்களை தீவிரமாக கண்காணிப்பதாக உலக சுகாதார அமைப்பு தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா உருமாறிய வைரஸ் 170 நாடுகளிலும்,
தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பீட்டா உருமாறிய வைரஸ் 119 நாடுகளிலும்
பிரேசிலில் காணப்பட்ட காமா உருமாறிய வைரஸ் 71 நாடுகளிலும்
இந்தியாவில் கண்டறியப்பட்ட  டெல்டா வைரஸ் 85  நாடுகளிலும் பரவியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த 2 வாரங்களில் மட்டும் டெல்டா வைரஸ் 11 நாடுகளில் தொற்றியுள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

இங்கிலாந்தில் காணப்பட்ட ஆல்பா வைரசை காட்டிலும், டெல்டா வைரஸ் வேகமாக பரவுகிறது என ஜப்பானில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும்

இதே நிலை தொடர்ந்தால் டெல்டா உருமாறிய வைரஸ் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் கொரோனாவாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

டெல்டா உருமாறிய வைரசால் பாதிக்கப்படுபவர்கள் அதிகளவு ஆக்சிஜன் தேவைப்படுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுவதாகவும், உயிரிழப்புக்கும் காரணமாவதும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்து உள்ளது எனவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.

டெல்டா வைரசுக்கு எதிராக அமெரிக்காவின் பைசர் பயோஎன்டெக் தடுப்பூசியும், கோவிஷீல்டு தடுப்பூசியும் வலுவான செயல்திறனை கொண்டுள்ளன என ஆய்வு முடிகள் காட்டுகின்றன என அவ்வமைப்பு குறிப்பிள்ளது.

கருத்துகள் இல்லை: