வெள்ளி, 7 மே, 2021

முதல்வர் ஸ்டாலினுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து : உங்களின் ஓய்வறியா உழைப்பால் இன்று மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்து கலைஞரின் கனவு நிறைவேறியுள்ளது!

தமிழக முதலமைச்சருக்கு அமைச்சர் டக்ளஸ்   தேவானந்தா   வாழ்த்து!
தமிழகத்தின் முதலமைச்சராக இன்று(07.05.2021) பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா  வாழ்த்து செய்தியை அனுப்பி  உள்ளார்.
‘காலம் ஒரு செங்கோலை எம் கையில் தரும். இது மறைந்தும் மறையாத தமிழகத்தின் ஔிச் சூரியன் கலைஞரின் இலட்சிய நம்பிக்கை.
ஓய்வறியா உங்கள் உழைப்பால் தமிழகத்தில் மீண்டும்  தி.மு.க. ஆட்சி மலர்ந்து கலைஞரின் கனவு நிறைவேறியுள்ளது.
தமிழக மக்களின் மனங்களில் மட்டுமன்றி, அவர்களின் கனவுகளை வெல்லும் ஆட்சிப் பீடத்திலும் உங்களுக்கு சிம்மாசனம் கிடைத்துள்ளது.
ஈழத் தமிழர்களின் நீதியான உரிமைப் போராட்ட காலத்தில் அரசியல் ஏதிலிகளாக தமிழகம் வந்த எமது மக்களை அன்பால் அரவணைத்து வரவேற்றவர்கள் தமிழக மக்கள்.
எமது நன்றிக் கடனுக்கு உரித்தான தமிழக நீடித்த மகிழ்வுடன் வாழ்வாங்கு வாழும் நீதி ஆட்சி மறுபடியும் மலர வேண்டும். சமன் செய்து சீர்தூக்கும் செங்கோல் ஆட்சியென அது நிலவ வேண்டும்.
எமதும், உங்களதும், தமிழக மக்களினதும் ஆழ்மன விருப்பங்களே இன்று நிறைவேறியிருக்கின்றது.
முதல்முறையாக ஆட்சிப் பீடமேறும் உங்களுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது


கருத்துகள் இல்லை: