புதன், 5 மே, 2021

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பலியா?

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 11 பேர் பலியா?

minnambalam :  செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 நோயாளிகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால்தான் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில்தான் அதிகளவில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மருந்து போன்றவற்றுக்குத் தட்டுப்பாடு உள்ள நிலையில், ஆக்சிஜன் பற்றாக்குறையினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. வடமாநிலங்களில் நடந்துவந்த சம்பவம் தற்போது தமிழகத்திலும் நடந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிட்டதட்ட 500க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு (மே 4) 10 மணி முதல் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அடுத்தடுத்து 4 நோயாளிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, ஆக்சிஜன் சிலிண்டர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கு இடைப்பட்ட நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டினால்தான் நோயாளிகள் உயிரிழந்துள்ளனர் என உறவினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் ஆக்சிஜன் கையிருப்பில் இருப்பதாகவும், இந்த உயிரிழப்புகள் எதிர்பாராதவிதமாக ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என ஆட்சியர் ஜான் லூயிஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் வேலூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையினால் 7 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

வினிதா

கருத்துகள் இல்லை: