திங்கள், 3 மே, 2021

பிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்

பிறந்தது புதியதோர் திராவிட சகாப்தம்

minnambalam :ராஜன் குறை

நூறாண்டுகளுக்கு முன் நீதிக்கட்சி பிரிட்டிஷ் அரசின் கீழ் இரட்டையாட்சி முறையில் அன்று மெட்ராஸ் பிரசிடென்ஸி என்று அழைக்கப்பட்ட ஆட்சிப் பகுதிக்குப் பொறுப்பேற்றது. திராவிட, தமிழ் தனித்துவம் குறித்த சிந்தனை அதற்கு முன்பே பல பெரியோர்களால் முன்மொழியப்பட்டிருந்தாலும், பார்ப்பனதல்லோதார் அறிக்கையை 1917ஆம் ஆண்டு வெளியிட்ட தென்னிந்திய நல உரிமைச்சங்கம் என்ற நீதிக்கட்சி ஆட்சி பொறுப்பேற்றபோதே திராவிட அரசியல் சகாப்தம் என்பது துவங்கியது எனலாம். நூறாண்டுகளுக்குப் பிறகு 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்கும் தருணத்தை, திராவிட அரசியலின் புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றே வரலாறு குறித்துக்கொள்ளும்.

இது ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தலில் தி.மு.க பெற்றுள்ள வெற்றிதானே என்று சிலர் கேட்கலாம்; அ.இ.அ.தி.மு.க என்பதும் திராவிட கட்சிதானே என்றும் வினவலாம்; பத்தாண்டுகள் தொடர்ந்து ஆண்ட பிறகு, அதிலும் அந்தக் கட்சியின் வெகுஜன ஈர்ப்பு மிக்க தலைவியான ஜெயலலிதா மறைந்த பிறகு, அந்தக் கட்சியை தி.மு.க வென்றது என்ன அவ்வளவு முக்கியத்துவம் உடையதா என ஐயப்படலாம். எந்தெந்த தொகுதிகளில் யார் வென்றார்கள், எவ்வளவு வாக்குகள் பெறப்பட்டன என்று எவ்வளவோ விவாதங்கள் நடக்கலாம். ஆனால் ஒரு தேர்தல் வெற்றி என்பதன் குணரீதியான பரிமாணம் தனித்துவமானது.

வேறு வார்த்தைகளில் சொன்னால், தேர்தல் வெற்றி என்பது எந்த வரலாற்று சந்தர்ப்பத்தில் நிகழ்கிறது என்பதுதான் அதன் முக்கியத்துவத்தைத் தீர்மானிக்கும். அதைப் புரிந்துகொள்ள நாம் திராவிட அரசியலின் துவக்கங்களை, அதன் வரலாற்று இயங்குதிசையைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். எந்த ஆரிய பார்ப்பனீய பண்பாட்டின் எதிர்மறையாக திராவிட இயக்கம் தோன்றியதோ, அந்தப் பண்பாடு இன்று வட இந்தியாவில் வேரூன்றி, ஒன்றிய அரசைக் கைப்பற்றி, தமிழகத்தையும் விழுங்கத் துடிக்கிறது. அந்த நிலையில்தான் அ.இ.அ.தி.மு.க-வை அடிமைப்படுத்தி, தி.மு.க-வை நெருப்பென வெறுத்து, அஞ்சி அதை அணைத்து அழிக்கத் துடிக்கும் “அவர்கள்” முயற்சியை முறியடித்து தி.மு.க வென்றுள்ளது.

ஆரியமும், திராவிடமும்

திராவிடம் என்ற சொல்லின் முழுப் பொருள் அது ஆரியம் என்பதுடன் கொள்ளும் முரணில்தான் அடங்கியுள்ளது எனலாம். இந்தச் சொற்கள் இருவேறு இனத்தைச் சேர்ந்த மனிதர்களை வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் குறிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்தப் பொருள் இந்தச் சொற்களுக்கு இருந்தாலும் காலப்போக்கில் இந்தச் சொற்களுக்குப் பல்வேறு புதிய பண்பாட்டு அடையாளங்களும், அரசியல் சித்தாந்த அடிப்படைகளும் உருவாகி விட்டன. இன்றைய நிலையில் இருபத்தோராம் நூற்றாண்டில் திராவிடம் என்ற சொல்லின் அரசியல் முக்கியத்துவம் இந்திய அளவில் முற்றிலும் புதிய பரிமாணத்தை அடையக்கூடியதாக இருக்கிறது. அது இந்துத்துவம் என்ற பன்மைக்கு எதிரான ஒற்றை அடையாள பாசிசத்தை மறுதலிக்கும் முக்கியமான மாற்றுச் சிந்தனையாக உள்ளது. அந்த அடிப்படையில் திராவிடம் என்ற சித்தாந்தத்தைப் புரிந்துகொள்ளும்போதுதான் நாம் ஏன் இந்தத் தேர்தல் வெற்றியைப் புதிய சகாப்தத்தின் துவக்கமாகப் பார்க்க முடியும் என்பதையும் உணர முடியும்.

இந்தியாவை ஆளத்துவங்கிய ஆங்கிலேயர்கள் இந்திய நிலப்பகுதியை ஒரு அரசாட்சிப் பகுதியாக வரையறை செய்யும்போதே, இந்து மதம் என்பதையும் இந்தியாவின் மதம் என்று கட்டமைத்தார்கள். அந்த மதத்தின் ஆதாரமான நூல்களாக பார்ப்பனர்கள் கூறிய வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள் ஆகிய சமஸ்கிருத மொழி நூல்களை அடையாளம் கண்டார்கள். மனுதர்ம சாஸ்திரமும் இதில் அடங்கும். அதே சமயம் சமஸ்கிருத மொழிக்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இருந்த வேர்சொற்கள் சார்ந்த தொடர்பினையும் கண்டார்கள். அதன் அடிப்படையில் அவர்கள் ஆரியர்கள் என்பவர்கள் பண்டைய காலத்தில் மத்திய ஆசியாவில் வசித்தார்கள். அவர்களில் ஒரு குழுவினர் வடக்கே பயணப்பட்டு ஐரோப்பா சென்று அடைந்தார்கள். இன்னொரு பகுதியினர் தெற்கே பயணப்பட்டு கைபர், போலன் கணவாய் வழியாக சிந்து நதி, கங்கை நதி பாயும் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தார்கள் என்று கருதினார்கள். அதனால்தான் பின்னாளில் ஜெர்மனியில் ஹிட்லர் தூய ஆரிய ரத்தம் உள்ளவர்களே உண்மையான ஜெர்மானியர்கள் என்று கூறி, யூதர்களைக் கொன்றொழிக்கும் செயலில் ஈடுபட்டான்.

இந்தியாவுக்கு வந்து சேர்ந்த ஆரியர்கள் தூய ரத்தமாக இருந்தார்கள் என்று யாரும் கருதுவதில்லை. அவர்கள் இங்குள்ள மக்களுடன் ஆதி காலத்திலேயே கலந்துவிட்டார்கள் என்று பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஆனாலும் ஆரிய பண்பாடு என்பதும், ஆரிய சிந்தனை என்பதும் சமஸ்கிருத மொழியில் அமைந்த தர்ம சாஸ்திரங்களாக, இந்து மதத்தின் அடிப்படைகளாகப் பார்ப்பனர்களால் கூறப்பட்டன. ஆரிய பண்பாட்டின் தொடர்ச்சியாகப் பார்ப்பன சமூகம் தன்னை கருதிக்கொண்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வழங்கப்பட்ட தெய்வங்களெல்லாம் சமஸ்கிருத புராணங்களில் கூறப்பட்ட தெய்வங்களுடன் இணைத்து கதைகள் புனையப்பட்டன. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் முஸ்லிம்கள் அல்லாத, கிறிஸ்துவர்கள் அல்லாத, பார்சிகள் அல்லாத, சீக்கியர் அல்லாத எல்லோரும் இந்துக்கள் என்று கருதப்பட்டார்கள். அந்த இந்து மதத்தின் அடிப்படைகள் சமஸ்கிருத மொழியில் இருப்பதாகவும், அவை பார்ப்பனர்கள் என்ற பூசாரி வர்க்கத்தினரின் வழிகாட்டுதலில் நெறிப்படுத்தப்படுவதாகவும் கருதினார்கள். இப்படி இந்தியாவின், இந்து மதத்தின் அடிப்படையாக சமஸ்கிருதத்தையும், பார்ப்பனர்களையும் கட்டமைத்தார்கள். அதன் ஆதாரமாக சாதீய சமூக அமைப்பு இருந்தது. அது சமஸ்கிருத தர்ம சாஸ்திரங்களால் வரையறுக்கப்பட்டது.

ஆரிய மாயை

இப்படி சமஸ்கிருதம் சார்ந்த இந்து, இந்திய அடையாளம் கட்டமைக்கப்பட்டபோது, தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்தவர்கள் அவை சமஸ்கிருதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட தனித்துவமான வேர்களைக் கொண்டவை என்று கண்டார்கள். அந்த மொழிக்குடும்பத்துக்கு திராவிட மொழிக்குடும்பம் எனப் பெயரிட்டார்கள். இதனால் இந்தியாவின் ஆரிய, சமஸ்கிருத கலாச்சாரத்துக்கு மாற்றான ஒரு பண்பாடாக, திராவிட பண்பாட்டை கருதும் சாத்தியம் உருவானது. திராவிட மொழிகளின் ஆதி வடிவமாகத் தமிழ் மொழி கருதப்பட்டது. வட இந்தியாவில் குடியேறிய ஆரியர்களும், அவர்களது சமஸ்கிருத மொழியும் மெள்ள, மெள்ள திராவிட சமூகத்தில் ஊடுருவி அதன் தனித்தன்மையை மாற்றி, சாதீய சமூக அமைப்பை உருவாக்கியதாகக் கருதப்பட்டது. திராவிட இயக்கத்தின் தனிப்பெரும் கோட்பாட்டு நூலாகிய அறிஞர் அண்ணாவின் “ஆரிய மாயை” இந்த வரலாற்றைத் தெளிவாக வரைந்து காட்டுகிறது. அதனால் பார்ப்பனீய, சமஸ்கிருதமயப்பட்ட இந்துமதம் என்பது திராவிட பண்பாட்டுக்கு மாறானது என்பதால் அந்த அடிப்படையில் அமையும் வட இந்திய கலாச்சாரத்திலிருந்து வேறுபட்ட ஒரு நிலப்பகுதியாகத் தென்னிந்தியாவை, திராவிட நாடு என்று அழைத்தார் அண்ணா. திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம் என்பது தென்னிந்திய மாநிலங்களின் கூட்டாட்சி குடியரசை அமைப்பதாக இருந்தது. அதற்கு முக்கிய காரணம், வட இந்திய அரசியல் என்பது பார்ப்பன - பனியா மேலாதிக்கமாகவும், உருது மொழியையும், இஸ்லாமியர்களையும் தவிர்க்கும் சமஸ்கிருதமயமான இந்தி மொழியாகவும், இந்து மதமாகவும் உருவாகத் தலைப்பட்டதுதான்.

காந்தியும், நேருவும் இந்த பார்ப்பனீய - இந்து மேலாதிக்கத்தைக் கூடியவரைக் கட்டுப்படுத்தும் சக்திகளாக விளங்கினார்கள். காந்தி இந்து - முஸ்லிம் ஒற்றுமையை, சர்வ மத நல்லிணக்கத்தை வலியுறுத்தினார் என்றால், நேரு நவீன மதச்சார்பற்ற பன்மைத்துவக் குடியரசை உருவாக்க முனைந்தார். ஆனாலும் இந்து பெரும்பான்மை தேசத்தில் தங்களுக்கு உரிய இடம் கிடைக்காது என்று நினைத்த முஸ்லிம் லீக், பாகிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்கிக்கொண்டது. இந்தியக் குடியரசு இந்து குடியரசாக மாற காங்கிரஸ் அனுமதிக்கவில்லை. பாபா சாகேப் அம்பேத்கர் அத்தகைய நவீன மதசார்பற்ற இந்திய குடியரசுக்கான வரைபடத்தை அரசியல் நிர்ணய சட்டமாக வடிவமைத்துத் தந்தார்.

ஆனால் பார்ப்பனீய, இந்துத்துவ சக்திகள் தங்கள் செயல்பாட்டைத் தொடர்ந்தன. காந்தி கொலையுண்டார். இந்தி மொழியை அனைத்து இந்தியாவுக்குமான ஒற்றை ஆட்சிமொழியாக மாற்ற, தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. அந்த முயற்சிக்கு எதிராக திராவிட இயக்கம் தொடர்ந்து போராடியது. பெரியாரின் திராவிடர் கழகமும், அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகமும் தொடர்ந்து பார்ப்பனீய மேலாதிக்கத்துக்கு எதிராக, இந்தி திணிப்புக்கு எதிராக இரட்டை குழல் துப்பாக்கியாகப் போராடி வந்தன. இந்த வரலாற்றுப் போக்கின் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி ஐம்பதாண்டுகளுக்கு முன்னால் 1967ஆம் ஆண்டு தமிழகத்தில் அமைந்தது. அதிலிருந்து தங்கள் அடிப்படை நோக்கமான சுயாட்சி உரிமைகள் கொண்ட அரசாட்சிப் பகுதிகளின் கூட்டாட்சியாக இந்திய ஒன்றியம் விளங்க வேண்டும் என தி.மு.க வலியுறுத்தி வருகிறது.

இந்துத்துவத்தின் வளர்ச்சி

எந்த சவார்க்கரின் இந்து மகாசபை மதுரையில் மாநாடு கூட்டியபோது இந்து மகாசபைக்கு வைகை நதிக்கரையில், தமிழகத்தில் என்ன வேலை என்று கேட்டு அறிஞர் அண்ணா ஆரிய மாயை என்ற நூலைப் படைத்தாரோ, அந்த இந்து மகா சபை, அதன் மற்றொரு வடிவமான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை காங்கிரஸ் கட்சி பலவீனமடைய காத்திருந்தன. காங்கிரஸ், தி.மு.க ஆகியவற்றை இணைத்த சோஷலிஸ நோக்குக்கு, மக்கள் நல அரசு என்ற சிந்தனைக்கு எதிராக பெருமுதலீட்டிய நலன்களை முன்னெடுக்க தயாரானவையாக அவை இருந்தன. இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சோவியத் ரஷ்யா சிதறுண்ட பிறகு உருவான புதிய உலக முதலீட்டிய அமைப்பில் இந்தியாவும் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் உலக மயமான பொருளாதாரத்தை ஏற்றது. இந்த மாற்றங்களால் காங்கிரஸ் பலவீனமடைந்தது. காங்கிரஸ் பலவீனமடைந்தபோது ஒருபுறம் பார்ப்பனரல்லாத சோஷலிச நோக்குக்கொண்ட மாநில அரசியல் சக்திகள் வளர்ந்தன; மற்றொருபுறம் இந்துத்துவம் என்ற கருத்தியலின்பேரில் பார்ப்பன - பனியா மேலாதிக்க சக்திகள் சார்பாக இந்திய ஒன்றிய அரசில் அதிகாரங்களைக் குவிக்கும் நோக்குடன் பாரதீய ஜனதா கட்சி மேலெழுந்தது.

இந்திய அரசியலில் இந்த முரண் இன்று தீவிரமாகக் கூர்மைப்பட்டுள்ளது. அனைத்து அதிகாரங்களையும் ஒன்றிய அரசிடம் குவிக்கும் ஒற்றை அடையாளத்தை வலியுறுத்தும் பெருமுதலீட்டிய பார்ப்பனீய சக்திகளின் அரசியல் வெளிப்பாடாக பாரதீய ஜனதா கட்சி உள்ளது. அதற்கு எதிராக வெகுஜன அரசியலை, மக்கள் நலக் கோட்பாடுகளை வலியுறுத்தும் பார்ப்பனரல்லாத அரசியல் சக்திகளாக மாநில சக்திகள் ஒன்றிணைகின்றன.

இந்தியாவை திராவிட மயமாக்குதல்

ஆரியர்கள் வருகைக்கு முன்னால் செழித்திருந்த நகர நாகரிகங்களான மொஹஞ்சதாரோ, ஹரப்பா போன்றவை திராவிட நாகரிகங்கள் என்ற எண்ணம் ஆய்வாளர்கள் மத்தியில் வலுப்பெற்று வருகின்றது. இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற ஆர். பாலகிருஷ்ணன் சமீபத்தில் Journey of a Civilization: From Indus to Vaigai என்ற நூலை எழுதியுள்ளார். இதற்கு மாறாக இந்துத்துவ சக்திகள் ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகளே என்று நிறுவ பல போலி ஆய்வுகளைச் செய்து வருகின்றன. வரலாற்றுக்கு முந்தைய பண்டைய காலத்தில் நிகழ்ந்தது எதுவானாலும் இந்தியா முழுவதுமே பார்ப்பனீய நீக்கம் பெறுவது, அதாவது வர்ண - சாதி சிந்தனையை விட்டொழிப்பது என்பது வரலாற்றின் முற்போக்குப் பயணத்துக்கு இன்றியமையாததாகும். முக்கியமாக, பார்ப்பனர்களே ஆரியப் பண்பாட்டிலிருந்து வெளியேறி நவீன குடியரசின் அடிப்படைகளை முழுமையாக ஏற்க வேண்டும். அந்த வகையில் திராவிட சித்தாந்தத்தின் மையக் கருத்தாக்கங்களான சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம் ஆகிய மூன்றையும் இந்திய அரசியலின் பரவலான சித்தாந்த அடிப்படைகளாக உருவாக்கினால்தான் மாநில சுயாட்சி - மத்தியில் கூட்டாட்சி என்ற சிந்தனையும் வலுப்பெறும். ஆர்.பாலகிருஷ்ணன் கூறுவதன்படி சிந்து நதிக்கரையிலிருந்து வைகை நதிக்கரைக்குப் பயணப்பட்ட ஒரு பண்பாடு, இங்கே உருவாக்கிய திராவிட அரசியல் சித்தாந்தத்தை வட இந்திய அரசியலுக்கும் அடிப்படையாக்குவது அவசியமானது. அதன் முக்கியமான அரசியல் ஆற்றல் என்பது பார்ப்பனீய சமூக ஒழுங்கை (Brahminical Social Order), சாதீய படிநிலை அமைப்பை முற்றிலும் தகர்ப்பதுதான் என்பதைக் கூறவேண்டியதில்லை. அத்தகைய ஒரு பயணத்தை, திராவிட சித்தாந்தத்தின் அகில இந்தியப் பயணத்தைத் தொடங்கும் புதிய சகாப்தமாக இன்றைய தி.மு.க-வின் வெற்றி அமைந்திடும் என்பதே வரலாறு நமக்கு கையளிக்கும் நம்பிக்கை.

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

கருத்துகள் இல்லை: