வியாழன், 6 மே, 2021

உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாடி கட்சி முன்னிலை

உத்தரபிரதேச பஞ்சாயத்து தேர்தலில் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி முன்னிலை

தினத்தந்தி :லக்னோ,   உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 15-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை 4 கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்றது.
நான்கு மட்ட பஞ்சாயத்து நிர்வாக அமைப்புகளான கிராம பஞ்சாயத்து, கிராம் பிரதான், வட்ட பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
மொத்தம் 3.27 லட்சம் பஞ்சாயத்து பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
பொதுவாக இத்தேர்தலில் கட்சிகளின் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுவதில்லை என்றாலும், பெரும்பாலும் ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவுடன்தான் அவர்கள் போட்டியிடுகின்றனர்.


இந்நிலையில், மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர் பதவிகளுக்கு, எதிர்க்கட்சியான சமாஜ்வாடி ஆதரவு பெற்ற 742 பேர் தேர்வு பெற்றனர். ஆளும் பா.ஜ.க.வின் ஆதரவு பெற்ற 679 பேர் வெற்றி பெற்றனர். அதேநேரம், பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவளித்த 320 வேட்பாளர்களும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பெற்ற 270 வேட்பாளர்களும் வெற்றி ஈட்டியுள்ளனர்.

தாழ்த்தப்பட்டோர் தலைவர் சந்திரசேகர் ஆசாத்தால் புதிதாக தொடங்கப்பட்ட ஆசாத் சமாஜ் கட்சியும் குறிப்பிடத்தக்க இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் ஆயிரத்து 309 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ள நிலையில், மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கு அவர்கள் ஆதரவைப் பெற பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக இதில் பா.ஜ.க., சமாஜ்வாடி கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
Related Tags :

கருத்துகள் இல்லை: