சனி, 8 மே, 2021

காலி சிலிண்டர் விற்பனையால் உத்தர பிரதேசத்தில் உயிரிழப்பு

 Anbarasan Gnanamani -  /tamil.oneindia.com மீரட்: உத்தரபிரதேசத்தில் காலி சிலிண்டரை பத்தாயிரம் ரூபாய்க்கு, அரசு மருத்துவமனை ஊழியர் விற்ற நிலையில், சில மணி நேரங்களில் அதை பயன்படுத்திய கொரோனா நோயாளி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆப்ரேஷன் தியேட்டர் உதவியாளராக பணிபுரியும் இந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்து வெள்ளிக்கிழமை அன்று போலீசார் கைது செய்துள்ளனர்.
பேரம் பேசிய ஊழியர் குற்றச்சாட்டின் படி, கடந்த வியாழன் அன்று, கொரோனா நோயாளி ஒருவரின் உறவினர்களிடம் ஆக்சிஜன் சிலிண்டர் கொடுக்க ரூ.50,000 கேட்ட சஞ்சய், பேரத்துக்கு பிறகு ரூ.10 ஆயிரத்துக்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து இறந்த கொரோனா நோயாளியின் மனைவி மம்தேஷ் தேவி கூறுகையில், போதுமான ஆக்சிஜன் கிடைத்திருந்தால், என் கணவரை நிச்சயம் காப்பாற்றியிருக்கலாம். ஆனால், அவர் இறந்த பிறகு சோதித்த போது, அது காலி சிலிண்டர் என்பது தெரியவந்தது" என்றார்.
இதையறிந்த உறவினர்கள், உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகத்தை வலியுறுத்தியதை அடுத்து, விரைந்து வந்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சஞ்சய் கைது செய்யப்பட்டார்



இதுகுறித்து ஷாம்லி பகுதி எஸ்.பி. சுக்ரிதி மாதவ் கூறுகையில், "உயிரிழந்த நோயாளியின் பெயர் சத்யவான் சிங். அவரது உறவினர்களிடம் சட்டவிரோதமாக ஆக்சிஜன் சிலிண்டரை பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றிருக்கிறார். எனினும், அந்த ஆக்சிஜனை பயன்படுத்திய அந்த நோயாளி உயிரிழந்துவிட்டார். இதையடுத்து நாங்கள் சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளோம்" என்றார்.

இதுபோன்று சட்டவிரோதமாக ஆக்சிஜன் வாங்குவது தவறு என்பதை மக்களும் உணர வேண்டும். உயிர் மிக மிக முக்கியம் என்றாலும், நாம் நேசிப்பவர் மூச்சுக் காற்றுக்காக துடித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், நாம் இதுபோன்று சட்டவிரோதமாக வாங்குவது தவறு தான். தவறு என்பதை விட, நிச்சயம் ஏமாற்றப்படுவோம் என்பதை உணர வேண்டும். மக்களின் தேவையை பயன்படுத்தி, கொள்ளை அடிப்பதற்காகவே சஞ்சய் சிங் போன்று பலரும் உலாவிக் கொண்டிருக்கின்றனர் என்பதே உண்மை.


கருத்துகள் இல்லை: