சனி, 8 மே, 2021

சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் இனி மதுரை, கோவையிலும்... முதல்வர் உடனடி நடவடிக்கை!

மதுரை, கோவையில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியுள்ளது.
சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் இனி மதுரை, கோவையிலும்... முதல்வர் உத்தரவால் உடனடி நடவடிக்கை!

kalangar seithikal :தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. மேலும் தினசரி கொரோனா தொற்று 26 ஆயிரத்தைக் கடந்து பதிவாகியுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்து பலன் கொடுப்பதால் இந்த மருந்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்தை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வாங்கி சென்று வருகின்றனர்.

சென்னையில் மட்டுமே கிடைத்து வந்த ரெம்டெசிவர் மருந்து மற்ற மாவட்டங்களில் கிடைக்காத சூழ்நிலை இருந்துவந்தது. இந்நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிற நகரங்களிலும் ரெம்டெசிவிர் மருந்து கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது, சென்னையைத் தொடர்ந்து கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கும் ரெம்டெசிவர் மருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை தொடங்கியது. இதேபோல் கோவை பீளமேட்டில் உள்ள அரசு மருத்துவமனையிலும் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

மருத்துவர்களின் பரிந்துரை கடிதம், மருத்து வாங்குபவர் மற்றும் நோயாளியின் ஆதார் அட்டை, சி.டி.ஸ்கேன், ஆர்டி.பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் உள்ளிட்டவற்றைக் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: