சனி, 8 ஆகஸ்ட், 2020

ஜோதிகா அரசு மருத்துவனைக்கு 25 லட்சம் அளித்தார் .. ரஜினி கமல் அஜித் விஜய் வியாபாரத்தில முதலீடு...

Kalai Selvi : JyothiKa GaVe Twenty Five Lakhs to thre Thanjavur Govt Hospital Did How many Hindutwa Sangee Actors are ready to donate for Education and Health ? 


 மின்னம்பலம் :நடிகை ஜோதிகா அகரம் அறக்கட்டளை மூலம் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு ரூ .25 லட்சம் மதிப்பிலான நன்கொடை அளித்துள்ளார். மருத்துவ உபகரணங்கள் மற்றும் படுக்கைகளுக்கு மட்டுமல்லாமல், மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் வார்டுக்கு வண்ண ஓவியங்கள் வரையவும், குழந்தைகள் பூங்காவை புனரமைப்பு செய்து அழகுபடுத்தவும் இந்த நிதியைப் பயன்படுத்தியுள்ளார் ஜோதிகா.ஜோதிகா சார்பில் இந்த உதவியை தஞ்சையைச் சேர்ந்த திரைப்பட இயக்குநரும் பத்திரிகையாளருமான இரா.சரவணன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் இன்று (ஆகஸ்டு 8) வழங்கினார். “ஜோதிகா அவர்கள் செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்று அமைச்சர் விஜயபாஸ்கர் நன்றி தெரிவித்துளார்.

அண்மையில் தஞ்சை ராஜா மிராசுதார் மருத்துவமனையையும், பெரிய கோயிலையும் ஒப்பிட்டு ஜோதிகா எப்போதோ பேசிய பேச்சு சமூக தளங்களில் கடுமையான சர்ச்சையைக் கிளப்பியது. தஞ்சை அரசு மருத்துவமனையின் மோசமான நிலை குறித்து வருத்தப்பட்ட ஜோதிகா, பெரியகோயிலுக்கு நிறைய கொடுப்பவர்கள் தஞ்சை மருத்துவனையையும் கவனிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.  ஜோதிகாவின் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. ஜோதிகா இந்து மதத்தை அவமதித்துவிட்டார் என்று சர்ச்சைகளை கிளப்பி ஜோதிகாவை சிலர் அநாகரிகமாகவும் விமர்சனம் செய்தனர். கடுமையான அதிர்வுகளைக் கிளப்பிய இந்த விவகாரத்தில் நடிகர் சூரியா தனது மனைவி சார்பாக விரிவாக ஒரு விளக்கம் அளித்திருந்தார்.

“கோவில்களைப் போலவே பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் உயர்வாக கருத வேண்டும் என்கிற கருத்தை ஜோதிகா வலியுறுத்தியதை 'சிலர்' குற்றமாக பார்க்கிறார்கள். இதே கருத்தை விவேகானந்தர் போன்ற ஆன்மீகப் பெரியவர்களே சொல்லியிருக்கிறார்கள். மக்களுக்கு உதவினால், அது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை' என்பது 'திருமூலர்' காலத்து சிந்தனை. நல்லோர் சிந்தனைகளைப் படிக்காத, காதுகொடுத்து கேட்காதவர்களுக்கு இது தெரிய வாய்ப்பில்லை.பள்ளிகளையும், மருத்துவமனைகளையும் இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும் என்கிற கருத்தை, எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் வரவேற்கவே செய்கின்றனர். கொரோனாதொற்று காரணமாக இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ள இந்த நேரத்திலும், எங்களுக்கு கிடைத்த பேராதரவு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்தது. அறிஞர்கள், ஆன்மீகப் பெரியவர்களின் எண்ணங்களைப் பின்பற்றி வெளிப்படுத்திய அந்தக் கருத்தில் நாங்கள் உறுதியாகவே இருக்கிறோம். 'மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்' என்பதையே எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லித்தர விரும்புகிறோம்” என்று கூறியிருந்தார் சூர்யா.

தன்னை மையப்படுத்திய சர்ச்சைக்கு ஜோதிகா பதில் சொல்லாமல் தன் கணவரை பதில் சொல்ல வைக்கிறாரே என்று அதற்கும் சிலர் விமர்சனம் செய்தனர். தன்னை விமர்சித்தவர்களுக்கு வார்த்தைகளால் அல்ல, செயல் ரீதியான பதிலடியாக தஞ்சை அரசு மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் ஜோதிகா.

வேந்தன்

கருத்துகள் இல்லை: