புதன், 5 ஆகஸ்ட், 2020

விடாமுயற்சி: முன்னோடிகளாக பார்வையற்ற இளைஞர்கள்!

விடாமுயற்சி: முன்னோடிகளாக  பார்வையற்ற இளைஞர்கள்!

 மின்னம்பலம் : 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், ஐஎஃப்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. 829 பதவிகளை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட தேர்வில், முதல்நிலைத் தேர்வில் 11,745 பேரும், முதன்மைத் தேர்வில் 2,304 பேரும் தேர்ச்சி பெற்றனர்.முதன்மை தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு வெளியிடப்பட்ட முடிவில் 829 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக யுபிஎஸ்சி தெரிவித்துள்ளது.2019ஐ காட்டிலும் கூடுதல் தேர்ச்சி. இந்திய அளவில் பிரதீப் சிங் என்ற மாணவர் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ் குமார் பாஸ்கர் என்ற மாணவர் தமிழக அளவில் முதலிடத்தையும், இந்திய அளவில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளார்.இதில் தமிழக மாணவர்கள் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கூடுதலாகத் தேர்ச்சி பெற்றுள்ளதாக சங்கர் ஐஏஎஸ் அகாடமி தலைவர் சந்துரு கூறியுள்ளார். கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து 45 மாணவர்கள் மட்டுமே தேர்வான நிலையில் இந்த ஆண்டு 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இந்தத் தேர்வில் 100 சதவிகிதம் கண்பார்வையற்ற இரண்டு இளைஞர்கள் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

மதுரை சிம்மக்கல் அருகே உள்ள மணி நகரம் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் முருகேசன் ஆவுடை தேவி. இவர்களது மகள் பூரண சுந்தரி(25). பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவி.

இவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது பார்வை நரம்பு சுருங்கியது. இதனால் தனது பார்வையை இழந்தார். மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்கள், பூரண சுந்தரியின் வலது கண் பார்வை முழுவதும் இழந்து விட்டதாகவும், இடது கண்ணை சரி செய்ய முயற்சிப்பதாகவும் பெற்றோரிடம் கூறியுள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சை சரியான பலனைத் தரவில்லை. படிப்படியாக அவருக்கு இரு கண்களிலும் பார்வை இழந்தது.

எனினும் தன்னம்பிக்கையும் , விடாமுயற்சியும் கொண்ட பூரண சுந்தரி தனது கனவை நோக்கி தொடர்ந்து பயணிக்கத் தொடங்கினார்.

தொடர்ந்து முதலிடம் பிடிக்கும் பூரண சுந்தரி

ஒன்றாம் வகுப்பிலிருந்தே, வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்று வந்த பூரண சுந்தரி, பத்தாம் வகுப்பில் 471 மதிப்பெண்களும், பன்னிரண்டாம் வகுப்பில் 1092 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். பின்னர் பாத்திமா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் தேர்வு செய்து பயின்றார்.

கண் பார்வை முழுவதும் இழந்த பூரண சுந்தரி, கல்வியைத் தொடர்வதில் பல்வேறு சிக்கல்களை எதிர் கொண்டுள்ளார். 2016ஆம் ஆண்டு முதல் டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு, வங்கி போட்டித் தேர்வு, குடியுரிமைப் பணி என 20க்கும் மேற்பட்ட போட்டித் தேர்வுகளை மனம் தளராமல் எதிர்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு தோல்வியும் வாழ்வின் வெற்றிப்படி என்று எண்ணி, ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற நம்பிக்கையில் பயணித்த அவர், 2018ஆம் தேர்வில் வங்கி போட்டித் தேர்வில் வெற்றி பெற்று அரசு ஊரக வளர்ச்சி வங்கியில் கிளார்க் ஆக பணிபுரிந்து வந்துள்ளார்.

எனினும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற தனது கனவை கைவிடாமல் தொடர்ந்து படித்து வந்த பூரண சுந்தரி 4ஆவது முறையாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தத் தேர்வில் கலந்து கொண்டார். இதில் வெற்றி பெற்று தேசிய அளவில் 286ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

பூரண சுந்தரியின் வெற்றிக்கு அவரது பெற்றோர்கள் இரு கண்களாக , வலிமை தூண்களாக இருந்துள்ளனர்.இவரது தாய் ஆவுடை தேவி, பாடங்களைப் படிக்க அதனைக் கேட்டு கற்று பயின்றுள்ளார் பூரண சுந்தரி

வெற்றி குறித்து அவர் கூறுகையில், “ஒரு மாற்றுத்திறனாளியாகச் சிறு வயதிலிருந்தே தான் எதிர்கொண்ட சவால்கள் தான் என்னை சாதிக்கத் தூண்டியது. எண்ணற்ற சவால்களை நான் சந்தித்திருந்தாலும், என்னுடைய பெற்றோரின் பேருதவியால்தான் இது சாத்தியமானது. அவர்கள் பாடங்களைப் படிக்கப் படிக்க அதன் நான் கற்றுக்கொள்வேன். பார்வையற்றவர் என்ற எண்ணமே எனக்கு வராத அளவுக்கு என்னை என் பெற்றோர் பார்த்துக் கொண்டனர். குடியுரிமை ஆட்சிப் பணியிலிருந்து அரசின் திட்டங்களை நேரடியாக ஏழை எளிய மக்களுக்குக் கொண்டு செல்லும் ஒரு பாலமாக இருப்பேன். என்னைப்போன்றவர்கள் சோர்வடையாமல் தொடர்ந்து போராடினால். ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று உத்வேகம் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

மேலும், சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனித நேய அறக்கட்டளையின் விடுதியில் தங்கி இலவச வகுப்புகளில் பயின்றதாகவும், அடையாறில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் அகில இந்திய சிவில் சர்வீசஸ் பயிற்சி மையத்தில் முதன்மைத் தேர்வு மற்றும் நேர்காணலுக்காகப் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளார் பூரண சுந்தரி.

சிவில் சர்வீஸ் பணியில் சேர வேண்டும் என்ற ஒரே இலக்கோடு படித்த தனது மகளுக்கு, தனக்கு தெரிந்த ஆங்கிலத்தை வைத்து பாடம் கற்றுக்கொடுத்ததாகவும், பூரண சுந்தரிக்கு அவரது நண்பர்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு அகடாமியில் இருந்து உதவி கிடைத்ததாகவும் அவரது தாய் கூறியுள்ளார்.

அந்தவகையில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருக்கும் பயிற்சி மையங்களிலும், பயின்ற பூரண சுந்தரி, கோவையில் செயல்பட்டு வரும், நல்லறம் அறக்கட்டளையின் அம்மா ஐஏஎஸ் அகாடமியிலும் பயின்றுள்ளார்.

இந்நிலையில், இதுதொடர்பாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “கோவை அம்மா #IAS அகாடமியில் பயிற்சி பெற்று #UPSC தேர்வில் இந்திய அளவில் 286ஆவது இடம் பெற்று சாதனை படைத்துள்ள மதுரையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி பூரண சுந்தரிக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.பூரண சுந்தரியைப் போல, வாய்ப்புகளைப் பயன்படுத்தி, வாழ்வில் வலிமை பெற்று, சமூகத்தில் மாற்றங்கள் புரியும் திறனாளிகளை இளைய தலைமுறையினர் எடுத்துக்காட்டாகக் கொள்ள வேண்டும்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எதிலும் 100% வெற்றி

பூரண சுந்தரியை போன்று சென்னையைச் சேர்ந்த நாகேந்திரன் என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவரும் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். தனது ஒன்பதாவது முயற்சியில் தேசிய அளவில். 659 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்பதால் இத்துடன் எல்லாம் முடிந்து விடவில்லை. இதன் பிறகு தான் போராட வேண்டியுள்ளது. என்னுடைய குறைபாடு வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத்தான் குறையாக தெரியும். ஆனால் எனக்கு இது பழகி போன ஒன்று. தற்போதைய தொழில்நுட்பங்கள் மூலம் எதிலும் என்னால், 100 சதவிகிதம் வெற்றியைப் பெற முடியும் என்று கூறியுள்ளார். பார்வையற்றவர்களுக்கு இவர்களது வெற்றி புதிய உத்வேகத்தை அளித்துள்ளது.

மற்றவர்களுக்கு முன்னோடிகளாக இருக்கும் பூரண சுந்தரி மற்றும் பால நாகேந்திரன் இருவருக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

-கவிபிரியா

கருத்துகள் இல்லை: