வியாழன், 6 ஆகஸ்ட், 2020

புதிய கல்வி கொள்கைகளால் என் தம்பி தங்கைகளின் கனவுகளை சிதைத்து விடாதீர்கள்.

Akilan Desingu : டிப்ளமோ முடித்து விட்டு ஒரு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் சேர்ந்திருந்தேன்.காரின் மேற்புற பாகங்களுக்கு ஸ்பாட் வெல்டிங் அடிப்பது தான் வேலை.எட்டு மாதங்களுக்கு பிறகு அதே நிறுவனத்தில் மற்றோர் இடத்திற்கு மாற்றினார்கள்.இதில் வெல்டிங் முடித்து வருகிற கார்களில் உள்ள சீலன்டை ஆயில் ஊற்றி துடைக்க வேண்டும். ஒன்றரை நிமிடங்களுக்கு ஒரு கார் என வரிசையாக வந்து கொண்டிருக்கும். தொடர்ச்சியாக வேலை செய்து கொண்டிருப்போம். 7.30 மணிக்கு சாப்பாடு இடைவேளை.ஏழு மணியில் இருந்தே பசிக்க துவங்கி விடும்.எனக்கு சாப்பாட்டை தவிர வேறு சிந்தனையே வராது. ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஒரு முறை மேலே உள்ள கடிகாரத்தை பார்ப்பேன்.ஒரு வழியாய் பெல் அடித்ததும் ஓடி போய் கை கழுவ கிளவுசை கழற்றினால் அதில் ஆயில் வாசம் அடிக்கும்.அந்த ஆயில் வாசனை மூக்கிற்கு ஏறி ஏறி ஒரு கட்டத்தில் சுரம் வந்து ஊருக்கு வந்து விட்டேன்.
வேலைக்கு போக பிடிக்கவில்லை.மேலே படிக்க ஆசை இருந்தது ஆனால் வசதி இல்லை.என்ன செய்வதென தெரியாமலே மறுபடியும் வேலைக்கு சேர்ந்தேன்.அப்போது சம்பளம் 7500 வந்து கொண்டிருந்தது.ஒரு யோசனையாக பணம் சேர்த்து படிக்கலாம் என தோன்றியது.வீட்டில் ஒப்பு கொள்ளவில்லை. விடாப்பிடியாக பேசி வீட்டிற்கே வராமல் இருந்து கெஞ்சி சம்மதிக்க வைத்தேன். சேமிப்பதற்கென்றே வேறொரு வங்கி கிளையில் கணக்கு துவங்கினேன்.ஒவ்வொரு மாதமும் பணம் போட்டு விட்டு மறைமலை நகர் வீதிகளில் தன்னம் தனியே நடந்து வந்து கொண்டிருப்பேன். அந்நாளில் என்னை இயக்கிய நம்பிக்கை எதுவென தெரியவில்லை.ஏதோ ஓர் வைராக்கியமாக தொடர்ந்து பணம் சேர்த்து வந்தேன்.

பதினோரு மாதங்களுக்கு பிறகு 2013 - 2014 ஆண்டிற்கான எஞ்சினியரிங் கவுன்சிலிங் ஆரம்பித்தது.நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் காரைக்குடியில் நடந்தது.அஞ்சலை அம்மாளில் இடம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி கொண்டிருந்தேன்.அது மட்டும் தான் எங்கள் ஊரில் இருந்து சைக்கிளில் போய் வருகிற தொலைவில் இருந்தது.வேறு கல்லூரி என்றால் பஸ்ஸில் போய் வர வேண்டும். அப்போதிருந்த சூழலில் தினசரி டிக்கட் வாங்குவது கூட முடியாததாய் இருந்தது.நல்ல நேரமாக அஞ்சலை அம்மாளிலேயே கிடைத்தது.

கல்லூரியில் சேர்ந்தவுடன் முதலாவதாக சென்ற இடம் வங்கி.கல்வி கடன் வாங்க வேண்டும் என்றால் பெரிய ஆளை அழைத்து கொண்டு போக வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். நான் அப்பாவை அழைத்து கொண்டு போனேன்.வங்கி மேலாளர் அவருடைய அறையில் அமர வைத்து பேசினார்.முதல் வருடம் பணம் கட்டி சேர்ந்த பிறகு தான் இந்த கல்லூரியில் படிக்கிறேன் என சான்று வாங்க முடியும்.அதை காட்டி தான் பேங்கில் லோன் கேட்கலாம்.அப்படி முதல் தவணை பணத்தை சேர்க்கவே எனக்கு பதினோரு மாதங்கள் ஆகியிருக்கிறது என்று என் கதையை சொன்னேன்.கை குலுக்கி விட்டு 'உன்னைய மாதிரி ஆள் தான்யா படிக்கணும்.அரசாங்கம் உனக்காக தான்யா கல்வி கடன் தருது 'என்றார்.அப்போதே கல்வி கடன் வாங்குவதற்குண்டான பாரம்களை கொடுத்து அனுப்பினார்.

இரண்டு ஆண்டுகள் படிப்பை விட்டு விலகி இருந்து மறுபடியும் கல்லூரிக்குள் நுழைந்த போது என்னுடைய innconce எல்லாம் போயிருந்தது.
சேர்ந்த கொஞ்ச நாட்கள் வரையில் வருகை பதிவில் ப்ரெசென்ட் சொல்ல வரவில்லை.முதன் முதலில் எழுதிய m3 சைக்கிள் டெஸ்டில் பெயில். பின் எங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர் வகுப்பை முடித்து விட்டு என் நோட்டில் எழுதி விளக்குவார். என்னை மாதிரியே புரியாதவர்கள் ஒன்று கூடி கவனிப்போம்.ஒரு கட்டத்தில் அவர் போர்டில் எழுதியதை விடவும் என் நோட்டில் அதிகம் எழுதியிருந்தார்.

பின் தேர்ச்சி அடைய தொடங்கினேன்.வீட்டில் ஒரு முறை கூட நான் தேர்ச்சி அடைந்தேனா என்பது பற்றி கேட்டது இல்லை.ஆனால் ஒவ்வொரு முறையும் பாஸ் ஆனதை சொல்வேன்.ஸ்காலர்சிப் பணத்தை கொண்டு தேர்வு கட்டணத்தை கட்ட முடிந்தது.செமஸ்டர் விடுமுறைகளில் சிறிய கட்டட வேலைகளை எடுத்து பார்க்கிற இடத்தில் சூப்பர்வைசராக வேலைக்கு போனேன்.

மூன்றாண்டுகளில் நான் கட் அடித்ததே இல்லை.பிரச்சனை என்னவென்றால் மிக நெருங்கிய ,சட்டையை மாற்றி போட்டு கொள்ளுகிற அளவிற்கு கூட தனி தனியான நண்பர்கள் கிடைத்தார்கள்.ஆனால் என்னால் எந்த குழுவிலும் இணைய முடியவில்லை.குழுவாக இணைய கட் அடிப்பது மாதிரி சில விஷயங்களை செய்ய வேண்டும்.என்னால் முடியாது.ஒரு வழியாக கல்லூரி முடித்து டிகிரியும் வாங்கினேன்.

இன்றைக்கு யோசித்து பார்க்கிறேன்.நான் படிக்க விரும்பிய போது கோட்டாவில் சீட் கிடைத்தது. வங்கியில் கல்வி கடன் தந்தார்கள்.ஸ்காலர்சிப் கிடைத்தது.நம்பிக்கை வைத்து பொறுமையோடு சொல்லி கொடுக்க ஆசிரியர்கள் இருந்தார்கள்.என் ஒருவனுடைய கனவு நிறைவேறியதில் இவ்வளவு பேருடைய பங்கு இருக்கிறது.

இன்றைக்கு 2020.நான் கல்லூரியை விட்டு வெளிவந்து நான்கு வருடங்கள் ஆகி விட்டது.
எங்கள் ஊரில் என்னுடைய சொந்த பங்காளி,மாமன் மச்சான் வகையறாவில்
இன்னும் ஒரே ஒரு ஆள் கூட இன்றைய தேதி வரையிலும் என்ஜினீயரிங் கல்லூரி வாசலில் அடி எடுத்து வைக்க வில்லை.இது தான் நிலவரம்.

எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது.இன்னமும் கூட படிக்க ஆசை இருந்து வசதி இல்லாமல் கிடைத்த வேலைக்கு போய் கொண்டிருக்கிற எத்தனையோ திறமையாளர்கள் வெளியே இருக்கிறார்கள்.நான் பார்க்கிற தம்பி தங்கைகளிடம் எல்லாம் படிக்க சொல்லி கொண்டிருக்கிறேன்.இந்த அமைப்பு அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது. உங்களின் புதிய கல்வி கொள்கைகளால் அவர்களின் கனவுகளை சிதைத்து விடாதீர்கள்.

கருத்துகள் இல்லை: