ஞாயிறு, 2 ஜூன், 2019

புதிய மத்திய மந்திரிகள் 22 பேர் மீது குற்ற வழக்குகள்

தினத்தந்தி : புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து மோடி, 2–வது முறையாக பிரதமராக பதவி ஏற்றார்.
அவருடன் 24 கேபினட் மந்திரிகள் உள்பட 57 மந்திரிகள் பதவி ஏற்று கொண்டனர்.
இந்த நிலையில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கான தேர்தல் கண்காணிப்பு சங்கம் என்ற ஆய்வு மையம் புதிதாக பொறுப்பேற்ற மந்திரிகள் சொத்து விவரம், படிப்பு உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டுள்ளது. புதிதாக பொறுப்பேற்றுள்ள 56 மந்திரிகளில் 51 பேர் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது.
இவர்களது சராசரி சொத்து மதிப்பு ரூ.14.72 கோடி ஆகும். உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட 5 மந்திரிகளின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.40 கோடிக்கு மேல் உள்ளது என கூறப்பட்டுள்ளது. பிரதாப் சந்திர சாரங்கி, ராமேஸ்வர் உள்ளிட்ட 5 மந்திரிகள் ரூபாய் ஒரு கோடிக்கும் குறைவான சொத்துமதிப்பையே கொண்டுள்ளனர்.
22 மந்திரிகள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 16 பேர் கொலை முயற்சி, சமூகங்களுக்கு இடையே பிரிவினையை தூண்டி விடுதல் உள்ளிட்ட கடுமையான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள். கிரிராஜ் சிங், அஸ்வினி குமார் சவுபே உள்ளிட்ட 3 மந்திரிகள் மீது கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
 8 மந்திரிகள் 10–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை படித்துள்ளனர். ஒருவர் பட்டயப்படிப்பை முடித்துள்ளார். 47 பேர் பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேல் படித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: