புதன், 24 ஏப்ரல், 2019

ஆசிரயர் வீரமணிக்கு எதிரான மனு தள்ளுபடி .. கிருஷ்ணர் பேச்சு விவகாரம்

தினகரன் : சென்னை: இந்து
கடவுள் கிருஷ்ணரை தொடர்புபடுத்தி, திராவிடர்
கழக தலைவர் கி.வீரமணி பேசியது தொடர்பாக அவரை கைது செய்யக்  கோரி தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு எதிராக,  பா.ஜ. நிர்வாகி அசோக் என்பவர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.  அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், கி.வீரமணியை கைது செய்வது உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு போலீசுக்கு  உத்தரவிடக் கோரி அசோக் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சைபர் க்ரைம் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் எஸ்.எஸ்.யுவராஜ் பதில் மனு தாக்கல் செய்தார்.  அதில், வழக்குப்பதிவு செய்த அன்றே 3 பேரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கி.வீரமணி உரையாடல் வீடியோ அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் பணியில் போலீசார் ஈடுபட்டதால், விசாரணைக்கு ஆஜராகும்படி கி.வீரமணிக்கு நோட்டீஸ் வழங்கமுடியவில்லை. தற்போது தேர்தல் பணி முடிவடைந்து விட்டதால், நோட்டீஸ் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை: