செவ்வாய், 23 ஏப்ரல், 2019

பிரிந்து போன வாக்குகள் நிலை என்னவாகும்?.. கவலையில் அதிமுக-

Hemavandhana : சென்னை: எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிற கவலையில்
இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டுள்ளது.. அது நடந்து முடிந்த தேர்தலை பற்றியும், நடக்க போகிற 4 இடைத்தேர்தலை பற்றியும்தான்!
எம்பி மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அதிமுக படு சுறுசுறுப்பாக வேலையை ஆரம்பித்தது. இதில் எல்லா தொகுதிகளிலும், பிரதான கட்சிகள் பணத்தை வாரி இறைத்தாகவும் சொல்லப்பட்டது. அதிமுக குறைந்தது 1500 ரூபாயாம், இதற்கு அடுத்து திமுகவாம், இதற்கு அடுத்துதான் அமமுக பணம் செலவு செய்ததாம். ஆக மொத்தம் இருக்கும் 3 கட்சிகளில் அதிகமாக பணத்தை இறக்கியது அதிமுகதான் என்ற தகவல் வந்தது.
இதற்கு காரணம், மானப்பிரச்சனை, கவுரவ பிரச்சனை, இருக்கும் 2 வருட ஆட்சியை விட்டுவிட கூடாதே என்ற கவலை போன்றவைதான்!
; ஆனால் சில இடங்களில் ஓட்டுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை மக்களுக்கு சரியாக பிரித்து தரப்படவில்லை என்றும், பொறுப்பில் உள்ளவர்களே அந்த பணத்தை சரியாக விநியோகிக்காமல் அமுக்கி விட்டதாகவும் புகார்களும் எழுந்தன. இப்போது விஷயம் என்னவென்றால், பணத்தை கொட்டியும் நல்லபடியான பாசிட்டிவ் தகவல் அதிமுக தலைமைக்கு போய் சேரவில்லை என்பதுதான்.


 அதாவது அதிமுகவுக்கு ஓட்டு வங்கி குறைவாகத்தான் இருக்கும் என்று ஒரு தகவல் வருகிறது. இதற்கு காரணம் அமமுகதான். அதிமுக இரண்டாக உடைந்ததுதான் முக்கிய பலவீனமே. அதனால்தான் அதிமுகவின் தீவிர தொண்டர்கள், அக்கட்சியின் ஆதரவாளர்களும் இரண்டு பிரிவாக பிரிந்து கிடக்கின்றனர். இதனால் அதிமுகவுக்கு ஒரு குரூப்பும், அமமுகவுக்கு ஒரு குரூப்பும் என வாக்கு சிதறி விட்டது.
அதிலும் தினகரனுக்கு இதில் கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஆதரவு கிடைக்கும் போல தெரிகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாகத்தான் உசிலம்பட்டியைச் சேர்ந்த பாக்கியம் என்ற பெண்ணின் வீடியோ உள்ளது. ஓட்டுக்கு அதிமுக கொடுத்த பணம் என்பதும், ஓட்டு போடவில்லை என்றதும் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கி கொள்வதும் என இரண்டு விஷயத்தையுமே பாக்கியம் போட்டு உடைத்துவிட்டார்.

அது மட்டுமில்லை, அமமுக மீது என்னத்தையாவது ஒரு பழியை போட வேண்டும் என்ற பேரில், அதிமுக பண பட்டுவாடா என்ற பெயரில் ஒரு சம்பவத்தை அரங்கேற்றி அதில் துப்பாக்கி சூடு வரை சென்று கொஞ்சம் ஓவர் ஆகிவிட்டது. கடைசியில் இது அமமுகவுக்கு அனுதாபத்தையே தேடிவந்து அக்கட்சிக்கு மேலும் பிளஸ் ஆகிவிட்டதுதான் மிச்சம்!

 அதனால் வரப்போகிற அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் என்ற 4 இடைத்தேர்தலிலாவது வெற்றியை பிடிக்க வேண்டும் என்று அடுத்த மும்முரத்தில் அதிமுக இறங்கி உள்ளது. அப்படியானால் பணம் பாதாளம் வரைக்கும் பாய போகிறது என்று அர்த்தம். இல்லையென்றால், ஆட்சி ஆட்டம் கண்டுவிடுமோ என்ற பீதி இப்போதே கிளம்பிவிட்டதாம்!

/tamil.oneindia.com/

கருத்துகள் இல்லை: