திங்கள், 22 ஏப்ரல், 2019

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: திமுக!

வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினால் நடவடிக்கை: திமுக!மின்னம்பலம் : திமுக பெயரில் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடந்தபோது, சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டத்தின் பொன்பரப்பியில் விசிகவின் சின்னமான பானை உடைக்கப்பட்ட விவகாரத்தில் பாமக மற்றும் விசிக இடையே தகராறு ஏற்பட்டு சண்டையானது. இந்த சண்டையையொட்டி தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் பாமகவினர் தாக்குதல் நடத்தியதில் 20 வீடுகள் சேதமடைந்தன. வாகனங்கள் மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டன. இதில் காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களும் பொன்பரப்பி சம்பவத்தைக் கண்டித்திருந்தனர். பொன்பரப்பி தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் என்று விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திமுக சார்பில் பொன்பரப்பியில் பாதிக்கப்பட்ட வன்னியர்களைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 24ஆம் தேதி போராட்டம் நடத்தப்படவுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ”பொன்பரப்பியில் வன்னியர்கள் மீது விசிகவினர் கொலைவெறி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 25 விசிகவினர் மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று பத்திரிகையாளர் தாக்கப்பட்ட வழக்கில் விசிக நிர்வாகிகள் 6 பேர் மீது கொலை முயற்சி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட வன்னியர்களைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 24 ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரோ அல்லது தலைமைக் கழகமோ எவ்வித அறிவிப்பும் - ஆர்ப்பாட்டமும் - போராட்டமும் அறிவிக்காத நிலையில், திமுகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் , அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் அப்பில் தன்னிச்சையாக வேண்டுமென்றே பொய்ச் செய்தி ஒன்றினை சில விஷமிகள் உலவவிட்டு வருகின்றனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (ஏப்ரல் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “திமுகவின் வளர்ச்சியையும் - எழுச்சியையும் கண்டு பொறாமையின் காரணமாகவும், காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், தமிழக மக்களிடையே அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் வாட்ஸ் அப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெயரில் பொய்ச் செய்தியினை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுத்திடக் காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறு பொய்ச் செய்தியினை வதந்தியாகப் பரப்புவர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதையும் திமுக சார்பில் எச்சரிக்கிறேன்” என்றும் அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: