வெள்ளி, 26 ஏப்ரல், 2019

தெலுங்கானாவில் ஒரே வாரத்தில் 19 மாணவர்கள் தற்கொலை!

மின்னம்பலம் : தேர்வில் தோல்வியடைந்ததால் தெலங்கானாவில் ஒரே வாரத்தில் 19 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் தோல்வி என்பது வாழ்க்கையின் இறுதியல்ல என்று அம்மாநில முதல்வர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்தியா முழுவதும் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் முடிவடைந்து முடிவுகள் வெளியாகிக் கொண்டுள்ளன. தெலங்கானாவில் இடைநிலைக் கல்வி முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு (11, 12) வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 18ஆம் தேதி வெளியானது. தெலங்கானாவில் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் சிலர் தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தற்கொலை செய்து கொண்டு வருவது அம்மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசுத் தரப்பு அறிக்கைகள், பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி செய்திகளின் எண்ணிக்கைபடி கடந்த ஒரு வாரத்தில் 19 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
தோல்வியடைந்த மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால் அவர்களுக்கு உரிய மனநல ஆலோசனை வழங்க வேண்டும் எனவும் அம்மாநில அரசுக்குக் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தெலங்கானா இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் தேர்வு தோல்வியால் அதிகளவில் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டிருப்பது இந்த ஆண்டில்தான் என்றும் கண்டித்துள்ளனர்.
மேதக் மாவட்டத்தில் மட்டும் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சகலி ராஜு என்ற மாணவர் 11ஆம் வகுப்பில் மூன்றாம் ரேங்க் பெற்றுள்ளார். 12ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெற்றதால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். யாதத்ரி போங்க்ரி மாவட்டத்தைச் சேர்ந்த அகரம் மிதி என்ற 18 வயது மாணவி 12ஆம் வகுப்புத் தேர்வில் விலங்கியல் மற்றும் இயற்பியல் பாடத்தில் தோல்வியடைந்த விரக்தியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். நிசமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த சைலஜா என்ற மாணவி 1000த்துக்கு 847 மதிப்பெண் எடுத்திருந்தபோதும் அவர் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்ற கவலையால் தற்கொலை செய்துகொண்டார்.
உமேஷ் சந்த்ரா என்ற மாணவர் தேர்ச்சி பெறாததால், முடிவுகள் வெளியான மறுநாளே வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார். அவரை இன்னும் காணவில்லை. காவல் நிலையத்தில் பெற்றோர் மனு அளித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஒருவாரத்தில் 19 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தேர்ச்சி பெறாத மற்றும் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பெற்றோர் தனிமையில் விட வேண்டாம் எனவும், அவர்களிடம் பேச்சுக்கொடுத்து மன தைரியம் கொடுக்க வேண்டும் எனவும் அம்மாநில அரசும், மனநல மருத்துவர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
தெலங்கானாவில் இடைநிலைக் கல்விக்கான தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடந்தது. 9.74 லட்சம் மாணவ மாணவிகள் தேர்வு எழுதிய நிலையில் 3.28 லட்சம் மாணவ மாணவிகள் தேர்ச்சியடையாமல் தோல்வியடைந்துள்ளனர். தேர்வு தோல்வியால் மாணவர்கள் இதுபோன்ற தவறான முடிவை எடுப்பதைக் கைவிட வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார். “இடைநிலைத் தேர்வில் தோல்வி அடைந்தால், வாழ்க்கையே அத்தோடு முடிந்துவிடாது. மாணவர்களின் இதுபோன்ற தற்கொலைச் சம்பவங்களால் நான் மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளேன். மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது மிகவும் துரதிருஷ்டவசமானது.
மனித வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது. இங்கே வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. தைரியமாக எழுந்து நில்லுங்கள். நீங்கள் தற்கொலை செய்துகொள்வது உங்கள் பெற்றோருக்கு மிகப்பெரிய துயரத்தை ஏற்படுத்தும். யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று எல்லா மாணவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: