திங்கள், 22 ஏப்ரல், 2019

ஓட்டு இயந்திரத்துடன் அறிவாலயம் வந்த சந்திரபாபு நாயுடு! - மோசடி குறித்த செய்முறை விளக்கம்

"ந.பொன்குமரகுருபரன்"-vikatan.com/கே.ஜெரோம் : பரபரப்பான தேர்தல் களேபரங்களுக்கு இடையே, அவசரமாக அறிவாலயம் வந்துசென்றிருக்கிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. கையில் மாதிரி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை கொண்டுவந்திருந்த சந்திரபாபு நாயுடு, அதில் பி.ஜே.பி முறைகேடு செய்ய வாய்ப்பு இருக்கிறது என்று தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகளிடம் செய்முறை விளக்கம் காட்டி எச்சரித்துவிட்டு சென்றிருக்கிறார்!
 ஏப்ரல் 16-ம் தேதி, தமிழகத்தில் பிரசாரம் முடியும் கடைசி நாளில்தான் சந்திரபாபுவின் சென்னைப் பயணம் உறுதியானது. அன்று திருவாரூர் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் செல்ல வேண்டியதிருந்ததால், சந்திரபாபுவை அவர் சந்திக்கவில்லை. தி.மு.க மாநிலங்களவை எம்.பி–க்கள் ஆர்.எஸ் பாரதி, டி.கே.எஸ் இளங்கோவன் ஆகியோர்தான் சந்திரபாபுவை வரவேற்றனர்.  சென்னையில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் அறிவாலயம் வரவழைக்கப்பட்டு, அவர்களுக்கு சந்திரபாபு வாழ்த்து தெரிவித்தார்.


சந்திரபாபுவின் அறிவாலயம் ‘விசிட்’ நோக்கமே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பி.ஜே.பி செய்யும் சித்து வேலைகளை தி.மு.க–வுக்குத் தெரியப்படுத்தத்தான் என்கிறார்கள் உடன்பிறப்புகள். அறிவாலயத்தின் உள்ளே தி.மு.க வழக்கறிஞர் பிரிவின் ‘வார் ரூம்’ செயல்படுகிறது. இந்த அறையில், தி.மு.க சட்டப்பிரிவு  நிர்வாகிகளிடம் பேசிய சந்திரபாபு, நடந்து முடிந்திருக்கிற ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தன்னை பி.ஜே.பி திட்டமிட்டுத் தோற்கடிக்க முயல்வதாக வருத்தப்பட்டிருக்கிறார்.

 இதுகுறித்து நம்மிடம் பேசிய தி.மு.க வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பி.ஜே.பி எப்படி எல்லாம் மோசடி செய்யும் என்பதைப் பற்றியே சந்திரபாபு அதிகமாகப் பேசினார். மேலும், மாதிரி வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்றையும் கையோடு கொண்டு வந்திருந்தார் அவர். அதில், ஒரு சின்னத்தில் பட்டனை அழுத்தினால், மற்றொரு சின்னத்தில் லைட் எரிவதைச் செய்து காண்பித்தார். ‘இது எப்படிச் சாத்தியமானது? இந்த தொழில்நுட்பத்தை வைத்து பி.ஜே.பி என்ன செய்கிறது?’ என்பதைப் பற்றி எல்லாம் விரிவாக விளக்கினார் சந்திரபாபு. மேலும் அவர், ‘பி.ஜே.பி–யைக் குறைத்து மதிப்பிட்டுவிடாதீர்கள். அதிகாரத்தைக் கைப்பற்ற அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். இந்தத் தேர்தலில், எங்கள் சின்னத்துக்கு விழும் வாக்குகள், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு விழுகின்றன. யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் வி.வி.பேட் இயந்திரம் ஏழு விநாடிகளுக்குப் பதிலாக மூன்று விநாடிகள் மட்டுமே காட்டுகிறது.<;"> கர்நாடகத்தின் சித்திரதுர்கா மாவட்டத்தில் பிரதமர் மோடி பிரசாரத்துக்கு வந்தபோது, அவரது ஹெலிகாப்டரில் இருந்து கருப்பு நிறப்பெட்டி ஒன்று இறக்கப்பட்டு, காரில் ஏற்றப்பட்டது. மின்னல் வேகத்தில் அந்த கார் பறந்து மறைந்தது. கடுமையான பாதுகாப்பு வளையத்தையும் மீறி, அந்த வாகனம் எப்படி பிரதமரின் ஹெலிகாப்டர் வரை வந்தது, அந்த மர்மப் பெட்டியில் என்ன இருந்தது என்பது எல்லாம் இதுவரை தெரியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்பதால், வி.வி.பேட் இயந்திரத்தில் விழுந்துள்ள வாக்குகளில் 50 சதவிகிதத்தை எண்ண வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை நாடவுள்ளோம். தி.மு.க–வும் அதற்கான ஆதரவை அளிக்க வேண்டும்’ என்று சந்திரபாபு கேட்டுக்கொண்டார். ‘இதுகுறித்து தலைமைதான் முடிவு எடுக்கவேண்டும்’ என்று அவரிடம் தெரிவித்தோம்’’ என்றனர்.

தி.மு.க சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் அன்பழகன் கூறுகையில், “சந்திரபாபு அறிவுறுத்திய படி, எங்கள் பூத் ஏஜென்டுகளை எச்சரித்துள்ளோம். வாக்காளர்களும் தாங்கள் பதிவுசெய்யும் சின்னத்துக்கு நேராக உள்ள விளக்கு எரிகிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்றார்.

- ந.பொன்குமரகுருபரன்

படம்: கே.ஜெரோம்


சந்திரபாபு நாயுடு சக்சஸ் சென்டிமென்ட்!

‘தே
ர்தல் நேரத்தில் சந்திரபாபு நாயுடு தமிழகம் வந்து எந்தக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றியடையும்’ என்கிற சென்டிமென்ட் நிலவுவதால், உடன்பிறப்புகள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். “2006 சட்டமன்றத் தேர்தலின்போது, சந்திரபாபு தி.மு.க–வுக்கு ஆதரவு தெரிவித்தார். அந்தத் தேர்தலில், தி.மு.க வென்றது. 2011 தேர்தலில், கோவை அ.தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. இதே நிலை, 2016 தேர்தலிலும் எதிரொலித்தது. தற்போது தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்து அறிவாலயம் வந்துள்ளார். சந்திரபாபு சென்டிமென்ட் தி.மு.க-வுக்குச் சாதகமாகும்” என்று உற்சாகத்தில் குதிக்கிறார்கள் பகுத்தறிவுப் பாசறையில் பயின்ற உடன்பிறப்புகள்!

கருத்துகள் இல்லை: