சனி, 27 ஏப்ரல், 2019

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் தடை! அப்போலோவின் சக்தி?

BBC : அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் இந்த ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்குரைஞர் அரிமா சுந்தரம் மருத்துவமனை சார்பில் வாதிட்டார்.
ஆணையம் சம்பந்தமில்லாத தகவல்களை கேட்பதாக கூறி மருத்துவமனை தரப்பில் தடை கோரப்பட்டது. ஆணையம், மருத்துவர்களிடம் விசாரணை நடத்திவிட்டது. இதே அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுவந்தார். அதன் பிறகு அவருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இது பற்றிய, தொடர்பில்லாத தகவல்களையெல்லாம் ஆணையம் கேட்பதாக மருத்துவமனை சார்பில் குற்றம்சாட்டப்பட்டது.

ஆணையத்தின் சார்பில் வழக்குரைஞர் கே.வி. விஸ்வநாதன் வாதிட்டார். ஆணையத்தின் விசாரணை ஏறத்தாழ முடிந்துவிட்டதாகவும், இந்த நிலையில் தடை விதிக்கவேண்டியதில்லை என்றும் அவர் கூறினார்.
இரு தரப்பையும் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு ஆணையத்தின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
நான்கு வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், ஆறுமுகசாமி ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப இந்த அமர்வு உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: