சனி, 27 ஏப்ரல், 2019

ஸ்டாலின் ;சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் - .எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுத்தால்

மாலைமலர் : அதிமுக எம் எல் ஏக்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சபாநாயகர் மீது தி.மு.க. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரும் என்று
மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை: தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மே 23-ந் தேதி 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கி இருக்கும் நிலையில், சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், அரசு கொறடா ராஜேந்திரன் ஆகியோர் சபாநாயகரை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி பிரபு, அறந்தாங்கி ரத்தினசபாபதி, விருத்தாசலம் கலைச்செல்வன் ஆகிய மூவர் மீதும் கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்திருப்பதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு 18 சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த பிறகு மைனாரிட்டி அரசாகவே செயல்பட்டது. அந்த வழக்கை முடிந்த வரை காலதாமதம் செய்து, 18 மாதங்களுக்கு மேல் தேர்தலே நடத்தாமல் அ.தி.மு.க. ஆட்சி தொடர மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசும், மாநிலத்தில் உள்ள கவர்னரும் சட்டவிரோதமாக அனுமதித்தனர்.
அதன் பலன் பா.ஜ.க.வுக்கு அ.தி.மு.க. வுடன் தேர்தல் கூட்டணி அமைந்தது. ஆனால் தமிழக மக்கள் ஒரு மோசமான அரசின் நிர்வாக சீரழிவுகளை தினந்தோறும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். பிறகு பல சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் ஒரு மைனாரிட்டி ஆட்சியாகவே இந்த மக்களவைத் தேர்தலை சந்தித்தது.

இந்நிலையில் 17-வது மக்களவை தேர்தலுடன் முதலில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் முடிவுற்று, பிறகு சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டதால் வருகின்ற மே 19-ந் தேதி மீதியுள்ள 4 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த 22 தொகுதிகளிலும் அ.தி.மு.க. படுதோல்வி அடையும் என்பதை தெரிந்து கொண்டதால் சட்ட அமைச்சரும், அரசு கொறடாவும் தங்களது பதவியை அதிகார துஷ்பிரயோகம் செய்து சபாநாயகரை சந்தித்து இந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு கொடுத்திருக்கிறார்கள். 22 தொகுதிகளிலும் தோல்வி அடையும் அ.தி.மு.க. அரசுக்கு இருக்கின்ற மைனாரிட்டி அந்தஸ்தும் பறிபோய், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நிகழ்வு மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் நரேந்திரமோடிக்கு வாழ்த்துச் சொல்ல துணை முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் வாரணாசி சென்று சந்தித்த தினத்தில் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க. தலைமையில் ஒரு ஊழல் ஆட்சியை மக்கள் விரோத ஆட்சியை எப்படியாவது தக்கவைத்துவிட வேண்டும் என்பதில் அ.தி.மு.க.வை விட பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலத்தில் இருக்கும் கவர்னரும் தொடர்ந்து செயல்படுவது “கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்பதை வெளிப்படுத்துகிறது.

சட்டமன்றத்தின் பேரவைத் தலைவரை பொறுத்தவரை கட்சி சார்பற்றவர். அந்த பதவிக்கு வந்த பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலைவராக இருப்பவர். “பாரபட்சமற்ற முறையில் சபாநாயகரின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடாது” என்று பல்வேறு தீர்ப்புகள் வாயிலாக சுப்ரீம் கோர்ட்டு சபாநாயகர்களை எச்சரித்துள்ளது.

கட்சி தாவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ள மனு மீது சபாநாயகர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது.



ஓ.பன்னீர்செல்வமும், அவருடன் முதல்-அமைச்சருடன் ஐக்கியமான சட்டமன்ற உறுப்பினர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்துவிட்டு பதவியில் தொடருவதை அனுமதித்திருக்கும் சபாநாயகர் இதில் அவசரம் காட்டி மைனாரிட்டி அரசுக்கு “கொல்லைப்புற வழியாக” மெஜாரிட்டி தேடித்தர முயலக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

ஒருவேளை நடுநிலைமை தவறி, அரசியல் சட்டத்தின் கடமைகளை மறந்து, சபாநாயகர் அந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர் மீது தி.மு.க. சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: