ஞாயிறு, 21 ஏப்ரல், 2019

கோவை, திருப்பூர், சென்னை உள்பட 8 நகர்புற மக்களவை தொகுதிகளில் பெண்கள் வாக்குப்பதிவு குறைவு:

tamil.thehindu.com - டி.ராமகிருஷ்ணன் : மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் திருப்பூர், கோவை, சென்னை உள்பட 8 நகர்ப்புற தொகுதிகளில் பெண்கள் வந்து வாக்களிக்கும் அளவு குறைந்துள்ளது. இந்த பகுதிகளில் எல்லாம் ஆண்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகமாக இருந்தபோதிலும்கூட பெண்களின் வாக்களித்த சதவீதம் குறைவாக இருக்கிறது. திருப்பூர், கோவை, சென்னை வடக்கு, தெற்கு, மத்தியப் பகுதிகளின் பெண்களின் வாக்கு அதிமுகவுக்கு சாதகமாக இருந்து வந்த நிலையில், இந்த வாக்களிப்பு குறைவு என்ற தகவல் அந்த கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. முதல் கட்டத்தில் 91 தொகுதிகளுக்கும், 2-வது கட்டத் தேர்தல் கடந்த 18-ம் தேதி தமிழகத்தில் உள்ள 38 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களில் 95 தொகுதிகளுக்கு நடந்தது. இதில் தமிழகத்தில் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தலும் நடந்தது.

இதில், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 8 தொகுதிகளில் பெண்களின் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
இந்த 8 தொகுதிகளிலும்1.41கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில், கடந்த 18-ம் தேதி 92 லட்சம் வாக்குககள் மட்டுமே பதிவானது. இதில் ஆண் வாக்காளர்கள் 46.70 லட்சம், பெண்கள் வாக்காளர்கள் 45.35 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இந்த தொகுதகளில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம் இருந்த நிலையிலும் பெண்கள் வாக்களித்த சதவீதம் குறைந்துள்ளது.
 இந்த தகவல் அதிமுகவினர் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளும் கட்சிக்கு இந்த தொகுதிகளில் எப்போதும் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும், இதனால் வலிமையான தொகுதியாக பார்க்கப்பட்டது ஆனால், இப்போது பெண்கள் வாக்களித்த சதவீதம் குறைந்துள்ளது கவலையளித்துள்ளது.
38 மக்களவைத் தொகுதிகளில் ஏறக்குறைய 2.13 பெண் வாக்காளர்களும், 2.07 ஆண் வாக்களர்களும் தேர்தலில் வாக்களித்துள்ளனர் ஒட்டுமொத்தமாக 4.20 கோடிபேர் வாக்களித்துள்ளனர்.
இந்த குறிப்பிட்ட 8 தொகுதிகளில் மட்டும் பெண்கள் வாக்களித்த சதவீதம் குறைந்தது அதிமுகவுக்கு வருத்தத்தை அளித்தாலும், மற்ற 26 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண்கள் அதிகம் இருக்கும் நிலையில் அங்கு அதிக ஆதரவைப் பெற முடியும்.
கன்னியாகுமரி தொகுதியில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர்.
தேமுதிக தலைவர் எல்.கே. சுதீஷ் போட்டியிட்ட கள்ளக்குறிச்சி தொகுதியிலும் அதிகபட்சமாக பெண்கள் வாக்களித்துள்ளனர். ஏறக்குறை. 80 சதவீதம் 6.17 லட்சம் பெண்கள் வாக்களித்துள்ளனர். மேலும், தேனியில் 5.94 லட்சம் பெண்களும், சிதம்பரத்தில் 5.96 லட்சம் பெண்களும் அதிக அளவு வாக்களித்துள்ளனர்.
இதில் சிதம்பரம் மற்றும தேனி தொகுதியின் வேட்பாளர்கள் முக்கிய நபர்கள். சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும், தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவிந்திர நாத், காங்கிரஸ் முன்னாள் மாநிலத் தலைவர் இ.வி.கே.எஸ். இளங்கோவன், அமமுக சார்பில் தங்கம் தமிழ்செல்வன் ஆகியோரும் போட்டியிட்டனர்.
சட்டப்பேரவை-மக்களவை

 சட்டப்பேரவையைப் பொறுத்தவரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய தொகுதிகளில் பெண் வாக்களர்களைக் காட்டிலும் ஆண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். இதன் மூலம் இந்த தொகுதிகளில் உள்ள மக்கள் மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஆர்வத்துடன் வந்து வாக்களித்துள்ளனர். இடைத்தேர்தல் நடந்த 18 தொகுதிகளில் 12 தொகுதிகளில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிகம், பெண்களின் வாக்களித்த சதவீதமும் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக ஓசுர், பாப்பிரெட்டிபட்டி ஆகிய தொகுதிகளில் மட்டும் ஆண்கள் அதிக அளவு வாக்களித்துள்ளனர்.
தர்மபுரியில் உள்ள அரூர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஆண் வாக்களார்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். வடக்கு மண்டலத்தில் உள்ள மற்ற 3 தொகுதிகளான பூந்தமல்லி, பெரம்பூர், சோளிங்கர் ஆகியவற்றில் பெண் வாக்காளர்கள் அதிகம். ஆனால், இந்த தொகுதிகளில் பெண்களைக் காட்டிலும் ஆண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர்.
இதில் மூன்றாம் பாலினத்தவர்கள் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். 38 மக்களவைத் தொகுதிகளிலும் 5 ஆயிரத்து 688 மூன்றாம் பாலினத்தவர்கள் இருக்கும் நிலையில், அதில் ஆயிரத்து 66 பேர் மட்டுமே வாக்களித்தனர், அதாவது 18.7 சதவீதம்பேர் மட்டுமே ஜனநாயகக் கடமையாற்றியுள்ளனர்

கருத்துகள் இல்லை: