புதன், 24 ஏப்ரல், 2019

மேல் மட்டத்தில் அனைவரும் தெரிந்திருந்தார்கள் அடிமட்ட அப்பாவிகள் எவரும் தெரியாதிருந்தார்கள்

Jeevan Prasad : கொள்ளிவாய் பிசாசுகள் ......
மேல் மட்ட அனைவரும் தெரிந்திருந்தார்கள்
அடிமட்ட அப்பாவி மக்கள் எவரும் தெரியாதிருந்தார்கள்
கடந்த ஏப்ரல் 21ம் திகதியான உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விடயம் திடீர் தாக்குதல் அல்ல. இந்த தாக்குதலை தொடுத்த தேசிய தவ்கீத் ஜமாத் (National Thowheeth Jama'ath) அமைப்பு 2016க்கு பின் பலம் பெற்றதாக தெரிந்தாலும் , 2000ம் ஆண்டுகளிலேயே தமது பரப்புரைகளை தொடங்கியுள்ளது. இதன் நிறுவனராகவும் தலைமை தாங்கியவராகவும் மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த சகரான் ஹசீம் இருந்துள்ளார்.
இவர்களை மகிந்த காலத்து முன்னைய அரசு தமது தேவைகளுக்காக ஏதோ ஒரு வழியில் பயன்படுத்தி நீரூற்றி வளர்த்து வந்துள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது. இலங்கையில் பல அமைப்புகளை தமது அரசியல் தேவைகளுக்காக புலனாய்வு துறைகள் பாவிப்பதுண்டு. அப்படி பௌத்த அமைப்புகள் சிலவற்றைப் போலவே தேசிய தவ்கீத் ஜமாத் அமைப்பினரையும் வளர்த்து விட்டுள்ளார்கள். இஸ்லாமிய அரசியல்வாதிகள் காலத்துக்கு காலம் மாறும் அரசியல் கட்சிகளுக்கு தாவுவது வழக்கமான ஒன்றுதான். அன்றைய மகிந்த அரசில் இருந்த இஸ்லாமிய அரசியல்வாதிகள் இன்று ரணில் மற்றும் மைத்ரி கட்சிகளிலும் அங்கம் வகிக்கிறார்கள். மகிந்தவோடும் சிலர் இருக்கிறார்கள்.
சர்வதேச ரீதியாகவே தீவிரவாத அமைப்புகளை வைத்து சில விடயங்களை அரசுகள் சாதிக்கும். அந்த வகையில் இலங்கையில் பல பௌத்த அமைப்புகள் போல இந்த இஸ்லாமிய அமைப்புக்கும் முன்னைய அரசு திரை மறைவில் தீனி போட்டு வளர்த்துள்ளது என்பதை யாரும் மறுப்பதாக இன்று இல்லை. காரணம் அதற்கான ஒளி - ஒலி - புகைப்பட சான்றுகள் உள்ளன. மனச் சாட்சி உள்ள மக்களுக்கு அது தெரியும்.

ஆனால் பொதுவாக இலங்கை முஸ்லீம்கள் ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பாக மாறுவார்கள் என இலங்கையில் எவரும் எதிர்பார்த்ததே இல்லை. காரணம் இலங்கை முஸ்லீம்கள் தங்கள் பகுதிக்கு ஆபத்து வந்த போது கூட பெரிதாக தாக்குதல்களில் ஈடுபடாதவர்களாகவே இருந்துள்ளார்கள். தவிர அவர்களது பகுதிக்குள் கூட அரசுக்கு எதிராக ஒரு தாக்குதலை தொடுத்தவர்களாக அறியப்பட்டதில்லை. சில குழு மோதல்களில் மட்டுமே ஈடுபட்டுள்ளார்கள். அரசுகளோடு இணைந்தே பயணித்து வந்துள்ளார்கள். எனவே முஸ்லீம்கள் இப்படி ஒரு தாக்குதல் குழுவாக மாறுவார்கள் என இலங்கை மக்கள் எவருமே ஒருபோதுமே எதிர்பார்த்ததில்லை. மதமும் வியாபாரமுமே இடைவெளி தரக் கூடிய விடயங்களாக இருந்தன. வேறு அனைத்து விடயங்களிலும் இணைந்து பயணிப்பதே வழியாக இருந்துள்ளன.
சில காலத்துக்கு முன் (6 மாதங்கள் என நினைவு) இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள Thowheeth Jama'ath அமைப்பில் ஒருவரை கைது செய்த தமிழ் நாட்டு காவல்துறைக்கு இலங்கையில் உள்ள National Thowheeth Jama'ath சர்வதேச இஸ்லாமிய ISIS அமைப்போடு இணைந்து இலங்கையில் ஒரு தாக்குதல் நடத்தவுள்ள தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை இந்திய புலனாய்வுத் துறை இலங்கை அரசுக்கு உடனடியாக வழங்கியுள்ளது. ஆனால் இலங்கை அரசு அதை கண்டு கொள்ளவில்லை. புலிகளையே இல்லாமல் செய்த எங்களுக்கு இது சொசிறு எனும் அலட்சி மனோபாவமேயாகும்.
கண்டி மற்றும் மாவனெல்லை ஆகிய பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் ஒரே இரவில் நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் அடித்து சேதமாக்கப்பட்ட சம்பவங்களுடன் இஸ்லாமிய இளைஞர்கள் சிலர் கைதான போது புத்தளம் வனாத்தவில்லு எனும் பகுதியில் 75 ஏக்கர் காணி கொண்ட ஒதுக்கு புற தோட்டத்தில் ஆயுத பயிற்சி நடைபெறும் தகவலை காவல்துறை தெரிந்து கொள்கிறது. அந்த இடத்தை சுற்றி வளைத்த போது புத்தர் சிலை உடைப்பு விவகாரத்தில் நேரடியாக தொடர்புபட்டதாக கருதப்பட்டு தேடப்பட்டு வரும் சாதிக் அப்துல்லா, சாஹித் அப்துல்லா ஆகிய சகோதரர்களுக்கு மேலதிகமாக பலராலும் அறியப்படும் மெளலவி ஒருவர் உள்ளிட்ட மேலும் பலர் அந்த விசாரணை வலயத்துக்குள் கொண்டு வரப்பட்டனர்.
பின்னர் மேலிட உத்தரவு ஒன்றின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அந்த மேலிடம் யார் என வெளிபடையாக சொல்லாவிடினும் அது நாட்டின் முதன்மை மகன் என்பதை அனைவரும் புரிந்து கொள்கின்றனர். அவர்களில் ஒருவர் இம்முறை நடத்திய தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு இறந்துள்ளார்.
ஆரம்பத்தில் இந்தியா அறிவித்தது போலவே மீண்டும் இந்திய உளவுத் துறை இப்படியான ஒரு தாக்குதலுக்கு National Thowheeth Jama'ath தாயாராகிறது எனும் அறிவிப்பை விடுத்துள்ளது. அதையும் அரசு கண்டு கொள்ளவில்லை. மீண்டும் ஒரு மாதத்துக்குள் இரு முறை இந்திய புலனாய்வு துறை இந்த தாக்குதல் குறித்து இலங்கை புலனாய்வு துறைக்கு அறிவித்துள்ளது. தவிர 2 மணி நேரத்துக்கு முன்னும் கடைசி 5 நிமிடங்களுக்கு முன்னும் கூட அலர்ட் பண்ணியும் இவர்கள் அதை கண்டு கொள்ளவில்லை என்பது துர்பாக்கியமானது. இதன் ஒரு தாக்குதல் இலக்கு இந்திய தூதரகமாக இருந்துள்ளது.
இதனடிப்படையில் கடந்த ஏப்ரல் 11ம் திகதி புலனாய்வு துறை காவல்துறை சிரேஸ்ட்ட அத்தியேட்சகர் பிரியலால் தசநாயக்க 3 பக்க ஒரு அறிக்கையை சம்பந்தப்பட்ட உயர் மட்டங்களுக்கு அனுப்பியுள்ளார். இந்த அறிக்கையின் பிரதி நாட்டின் தலைவரான சிரிசேனவுக்கு நிச்சயமாக அனுப்பப்பட்டிருக்கும். அப்படி இல்லாது போனால் அது பாதுகாப்பு கவுன்சிலிலாவது பேசப்பட்டிருக்கும். மைத்ரி தனக்கு தெரியாது என கையை விரிக்கிறார். ஆனால் அது பொய் என்பது சிறு குழந்தைக்கு கூடத் தெரியும். அதேபோல இந்த அறிக்கை இணையங்களில் கசிந்த போது பாதுகாப்பு தரப்பு இது பொய்யான ஒரு தகவல் என்றே சொன்னது. ஆனால் பிரியலால் திசாநாயக்க அது உண்மையான ஆவணம் என சொல்லி இவர்களது முகமூடியை கிழித்து தொங்கப் போட்டார்.
தவிர காவல் துறையினரால் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருக்கும் அனைத்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதை அனைவரது தற்போதைய பேச்சுகளிருந்தும் தெரிய வருகிறது.
மகிந்த தனக்கு தெரியாது. ஆனால் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது. எனக்கு இப்போதுதான் சொன்னார்கள் என்கிறார். வாசுதேவ நாணயக்கார தனக்கு ஆபத்து ஒன்று நடந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தனது பாதுகாவலர்கள் பயிற்சியளித்தார்கள் என தெரண சந்திப்பில் தெரிவித்தார். ஹரின் தனது அப்பா சொன்னார் என்கிறார். பாதுகாப்பு செயலர் தங்களுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு மோசமாக இருக்கும் என நினைக்கவில்லை என சொல்லகிறார். ரணில் தனக்கு தெரியாதென்கிறார். ஆனால் அவருக்கு அவரது பாதுகாப்பு தரப்பினூடாக தெரிய வந்திருக்கும். இல்லை என்பது அரசியல். அடுத்தது அந்த நாளில் எந்தவொரு கிறிஸ்தவ பாராளுமன்ற உறுப்பினர்களும் தேவாலயம் போவதை தவிர்த்துள்ளார்கள்.
இதிலிருந்து தெரிவதென்ன சுயநல அரசியலுக்காக அப்பாவி மக்களை பலியாக விட்டு தமது அரசியல் காய்களை பறிக்கக் இவர்கள் அனைவரும் காத்திருந்துள்ளார்கள் என்பதேயாகும்.
மைத்ரி இந்த சம்பவம் நடக்கும் போது திருப்பதி சென்று சிங்கப்பூர் சென்று விட்டார். அவர் போகும் போது பாதுகாப்பு அமைச்சு அல்லது சட்டம் ஒழுங்கு பொறுப்பைக் கூட இன்னொருவரிடம் வழங்காமல் சென்றுள்ளார். அவர் சொல்லும் கதை ஒரு மணி நேரத்தில் வரக் கூடிய தூரத்துக்கு சென்றதால் அது தேவைப்படவில்லை என்பதாகும். ஆனால் தாக்குதல் நடந்து பின் டியுட்டர் மூலமே மக்களுக்கு ஒரு செய்தியை விடுத்தார். பின்னர் இலங்கையிலிருந்து தனி விமானம் ஒன்றை பெற்று நடு இரவில் பூனை போல நாடு திரும்பினார். இவரது நோக்கம் தான் இல்லாத போது நடந்த தாக்குதலுக்கு ரணில் அரசு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்பதேயாகும். இதனால் நடக்கும் தாக்குதலை கண்டு கொள்ளாமல் நடக்கட்டும் என வழி செய்து உள்ளார் என்பதே பலரது அபிப்பிராயமாக உள்ளது. இவர் ஒருமுறை நான் போகும் போது நாட்டை எரித்து விட்டே செல்வேன் என்று சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போகின்றன. புது வருடத்துக்கு பின் ஒரு பிரளயமே வெடிக்கும் என்றார். அது இதுதானா?
மகிந்த கூட தெரிந்து கொள்ளாமல் இருக்க மாட்டார். அவர் வெளியே செல்லு முன் தனது பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரிகளோடு பேசாமல் இருக்க மாட்டார். அவர்கள் அது குறித்து சொல்லியிருப்பார்கள். ஆட்சி கவிழ்ப்பு ஒன்றுக்காக எதையும் செய்யக் கூடியவர்கள் மகிந்த தரப்பினர். எனவே இந்த தாக்குதலை வைத்து இந்த அரசை கவிழ்க்கலாம் என அமைதி காத்திருந்ததாகவே உணரவே முடிகிறது. மொட்டு கட்சி நடத்திய ஊடகவியளாளர் சந்திப்பில் இது பொத்துக் கொண்டு வெளியே வந்தது. விமல் வீரவங்ச " மகிந்தவுக்கும் அவரது பாதுகாப்பு தரப்புக்கும் இந்த அறிவுறுத்தல் வந்திருக்கிறது. எனக்கு வரவில்லை" எனச் சொன்னார். அப்போது மகிந்த இடைமறித்து எனக்கு வரவில்லை என் பாதுகாப்பு தரப்புக்கு இந்த அறிவுறுத்தல் கிடைத்திருந்தது என்றார். இதிலிருந்து அவரும் அறிந்திருந்துள்ளார் என ஊகிக்க முடிந்தது.
ரணில் தன்னை பாதுகாப்பு கவுண்சிலுக்கு 6 மாதங்களாக அழைக்கவில்லை என்கிறார். எனவே எனக்கு தெரியாது என்கிறார். ஆனால் அதை அவர் இது குறித்து பாராளுமன்றத்திலோ அல்லது ஊடகம் ஒன்றிலோ கூட சொன்னதில்லை. அதுவே ஒரு பிழை. நாட்டின் பிரமருக்கு நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியளம் உண்டு.
ஆனாலும் அவர் பிரதமர் என்ற வகையில் அவருக்கு தனிப்பட்ட ஒரு சில தொடர்புகள் உள்ளன. இவையூடாக அல்லது அவரது பாதுகாப்பு தரப்பு ஊடாக இந்த வியடம் தெரியாமல் இருந்திருக்காது. ஆனால் ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் அதை வைத்து மைத்ரி வசம் பாதுகாப்பு முழுவதும் மட்டுமல்ல சட்டம் ஒழுங்கு அமைச்சும் இருக்கிறது. அவர் வெளிநாடு போகும் போது கூட யாருக்கும் அவரது பொறுப்பை கொடுத்து விட்டு போகவில்லை. எனவே இந்த தாக்குதல் பொறுப்பை மைத்ரி மேல் பழி போட்டு அவரை மாட்டி வைக்க அமைதியாக இருந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இதைத் தவிர வேறில்லை. அவர் அரசியல் கத்துக்குட்டியும் இல்லை.
பாதுகாப்பு செயலரோ தங்களுக்கு தெரியும் ஆனால் இவ்வளவு பெரிய ஒன்று நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என அலட்சியமாக பதில் சொன்னார். எத்தனை ஆலயங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க? விடுதிகளுக்கு அவர்களே பாதுகாப்பு தேடிக் கொள்ள வேண்டும். நாங்கள் அறிவுறித்தினோம் என்றார். எப்போது? யாருக்கு? ஒரு செப்புக்கு பிரயோசனமற்ற பாதுகாப்பு செயலர். போலீஸ் மா அதிபரோ வாயே திறக்கவில்லை.
இந்த அத்தனை சுயநலவாதிகளும் ஏதோ ஒரு பேரூந்து குண்டு அல்லது கிரினெட் வெடிக்கும் அல்லது ஒரு சிறு கலவரம் ஒன்று உருவாக இருக்கிறது என நினைத்திருக்கலாம் .
ஆனால் இவர்களின் பலகீனங்களை பயன்படுத்தி சில அரசியல்வாதிகளின் ஆதரவோடு National Thowheeth Jama'ath சர்வதேச ISIS விருப்பத்தையும் நிறைவேற்றி முழு நாட்டையும் அதிர வைத்து விட்டனர். அதன் பின்னரே எல்லோரும் ஓடி வந்து ஒப்பாரி வைத்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இலங்கையின் அத்தனை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து ஒருவரும் கை கழுவி சென்று விட முடியாது. அத்தனை பாவங்களும் கொலையாளிகளுக்கு மட்டுமல்ல இவர்களுக்கும் சாரும்.
கொள்ளிவாய் பிசாசுகள் 😥😥
- ஜீவன்

கருத்துகள் இல்லை: