திங்கள், 4 மார்ச், 2019

பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை?- விசாரணையில் ..

tamil.thehindu.com/ கோவை பொள்ளாச்சியில் பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட கும்பலால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்தது.
கோவை பொள்ளாச்சியைச் சேர்ந்த 19 வயது மாணவிக்கு, முகநூல் பக்கம் மூலம் பொள்ளாச்சி ஜோதிநகர் எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த சபரிராஜன் (25) என்ற பொறியாளர் அறிமுகம் ஆனார். அந்த மாணவியை, கடந்த மாதம் 12-ம் தேதி தொடர்பு கொண்ட சபரிராஜன் ஊஞ்சவேலாம்பட்டிக்கு வரவழைத்தார். அங்கு சபரிராஜன், அவரது நண்பர்கள் திருநாவுக்கரசு(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27) ஆகியோர் சேர்ந்து, காரில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்து, மாணவியை இறக்கி விட்டனர். அதன்பின்னர், அந்த 4 பேரும் சேர்ந்து அந்த ஆபாச வீடியோவை காட்டி, அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளனர்.
அந்த மாணவி இவ்விவகாரம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரை கடந்த 24-ம் தேதி கைது செய்தனர். முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு இன்னும் பிடிபடவில்லை. புகார் கொடுத்த பெண்ணின் சகோதரரை தாக்கிய செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (26) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பாலியல் தொல்லை வழக்கில் கைது செய்யப்பட்ட கும்பலால், பாதிக்கப்பட்ட பெண்கள், மாணவிகள் போலீஸாரிடம் புகார் அளிக்கலாம். புகார் ரகசியம் காக்கப்படும். இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை தேடி வருகிறோம்.
முகநூல் மூலம் பெண்களை மயக்கி ஆனைமலை அருகேயுள்ள சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசு என்பவரின் பண்ணை வீட்டுக்கு அழைத்து வந்து சில்மிஷத்தில் ஈடுபடுவார். அதை வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் மறைவான இடத்தில் இருந்து வீடியோ எடுத்து, அதைக் காட்டி தங்களது இச்சைக்கும் அவர்கள் பயன்படுத்தி உள்ளனர். வசதியான பெண்கள் என்றால், அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பல லட்சம் வசூலித்துள்ளனர்’’ என்றார்.
பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச வீடியோ எடுத்து பணம், நகை கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவத்தில் புகார் பதிவு செய்யப்பட்டு 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில், முக்கிய குற்றவாளியை போலீஸார் இதுவரை கைது செய்யவில்லை.
கோவை மாவட்ட எஸ்பி பாண்டியராஜன் 3 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், திருநாவுக்கரசு வைத்திருந்த 3 செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்ட நிலையில், திருநாவுக்கரசு பேசுவதாக வாட்ஸ்அப்பில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் இந்த வழக்கில் நகரின் முக்கிய பிரமுகர்கள் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரோடு பகுதி செல்போன் டவரின் சிக்னலை காட்டிய அந்த எண்ணும் சிறிது நேரத்தில் துண்டிக்கப்பட்டதாக போலீஸார் கூறினர். ஆனைமலை அருகே சின்னப்பம்பாளையத்தில் திருநாவுக்கரசுக்கு சொந்தமான வீட்டில் நடத்திய சோதனையில் தடயம் ஏதும் கிடைக்கவில்லை என கூறும் போலீஸார், கடந்த ஒரு வாரமாக திருநாவுக்கரசை நெருங்க முடியாமல் திணறி வருகின்றனர்

கருத்துகள் இல்லை: