ஞாயிறு, 3 மார்ச், 2019

சரத்குமார் விஜயகாந்த் சந்திப்பு ... . சட்டமன்ற தேர்தல் கூட்டணி...

தினகரன் :சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இது தொடர்பாக தேமுதிக-அதிமுக இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால், விஜயகாந்த் பாமகவை  விட அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து வருகிறார். அந்த அளவுக்கு தொகுதி ஒதுக்க முடியாது என்று அதிமுக தரப்பில் கண்டிப்பாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், பாஜவும்  தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால், அவர்களால் கூட்டணியில் சேர்க்க முடியாத நிலை தான் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் 5 மக்களவை தொகுதி, ஒரு மாநிலங்களவை தொகுதியும் அதிமுக தரப்பிலும்  ஒதுக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக, ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் அதிமுக-தேமுதிக உடன்பாடு  கையெழுத்திடுவற்கான ஏற்பாடுகளை அதிமுக செய்தது. ஆனால் கடைசியில் தேமுதிக வரவில்லை.


மேலும், தேமுதிக தரப்பில் 3 நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது, 5 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கப்பட வேண்டும். 21 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிட  வாய்ப்பு அளிக்க வேண்டும். குறிப்பாக, கடந்த முறை தேமுதிக போட்டியிட்ட தொகுதி வழங்க வேண்டும். தேர்தல் செலவுக்கு பணம் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக தரப்பில் நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனை  அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொகுதியையும், பணம் சம்பந்தமான கோரிக்கைக்கு அதிமுக சம்மதம் தெரிவித்தது. இடைத்தேர்தலில் போட்டியிட சீட் தர முடியாது என்று அதிமுக தெரிவித்து விட்டது. இதனால்,  தேமுதிக- அதிமுக கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டது. இதனால், அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது சாலிகிராமம் இல்லத்தில் சமக தலைவர் சரத்குமார் இன்று காலை திடீரென்று சந்தித்துப் பேசினார். அப்போது சரத்குமார் விஜயகாந்த் உடல் நலம் குறித்து  கேட்டறிந்தார். தொடர்ந்து, இரண்டு பேரும் மக்களவை தேர்தல் தொடர்பாக பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் - சரத்குமார் இருவரும்  பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்புக்கு பின்னர் சரத்குமார் கூறுகையில், நான் சட்டப்பேரவையை நோக்கிப் பயணித்து வருகிறேன். தேவைப்படும்போது விஜயகாந்த் உடன் கூட்டணி வைக்கப்படும்’ என்றார். லோக்சபா தேர்தலுக்காக விஜயகாந்தின் தேமுதிக கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது பெரிய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் சரத்குமார் விஜயகாந்தை சென்று நேரில் சந்தித்து பேசியிருப்பது தமிழக  அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: