செவ்வாய், 5 மார்ச், 2019

என்ன அநியாயம் இது? மாக்சிஸ்ட் ரங்கராஜன் எம்பி க்கு மீண்டும் ராஜ்யசபா வேண்டுமாம்?


மார்க்சிஸ்ட் கேட்ட ராஜ்யசபா: மறுத்த திமுக!மின்னம்பலம் : திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்று (மார்ச் 5) ஒருவழியாக முடிந்துவிட்டது. மார்க்சிஸ்ட் கட்சியும், மதிமுகவும்தான் இன்று உடன் படிக்கையில் கையெழுத்திட்டன. மற்ற கட்சிகளுடன் இரண்டு கட்ட பேச்சுவார்த்தையிலேயே உடன்பாடு எட்டிவிட்ட நிலையில், மார்க்சிஸ்ட் கட்சி மட்டும் இன்று மூன்றாவது கட்டமாகவும் பேசிய பிறகே இரு இடங்கள் என உறுதி செய்யப்பட்டது.
இந்த தாமதத்துக்கு காரணமென்ன என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது புதிய தகவல்கள் கிடைத்தன.
“நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் உடன்பாடோடு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் கேட்டுப் பெறும் வழக்கம் இந்தத் தேர்தலில் பரவலாகிவிட்டது. அதிமுக அணியில் பாமக ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியைப் பெற்றது. திமுகவோடு பேச்சு நடத்திய தேமுதிகவும் 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கேட்டது.

இந்த நிலையில் நேற்று இரண்டாம் கட்டப்பேச்சு நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர், தங்கள் கட்சியின் சார்பாக இப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் டி.கே.ரங்கராஜனின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதம் முடிகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைவிட நாங்கள் வலுவாக இருப்பதால் இரண்டு மக்களவை தொகுதி+1 மாநிலங்களவை உறுப்பினர் வேண்டுமென கேட்டிருக்கிறார்கள். இதனை எதிர்பார்க்காத திமுக, உடனடியாக மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே வைகோவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு உறுதியளிக்கப்பட்ட நிலையில், இது சாத்தியமற்றது என்று தெரிவித்துவிட்டனர். இந்த விவகாரத்தில்தான் நேற்றே முடிந்திருக்க வேண்டிய தொகுதி உடன்பாடு இன்றுவரை தாமதமானது” என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை: