
இந்த நுாலகத்தின் பராமரிப்பு பணிகளில், 2016 வரை, தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. இது குறித்து, நமது நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.இதை தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தின் பராமரிப்பு பணிகளில், அரசு கவனம் செலுத்தியது. நுாலகம் சீரமைக்கப்பட்டது. நுாலக கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டு, கல்வி, கலை, கலாசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு, வாடகைக்கு அனுமதிக்கப்படுகிறது. அதேபோல், நுாலகத்தின் இரண்டாம் மாடியில், நுால் வெளியீட்டு விழாவுக்கு, தனியாக சிறிய கலையரங்கம் உள்ளது. இங்கு, புத்தக வெளியீடு மற்றும் புத்தக மதிப்புரை தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், தனியார் நிறுவனம் நடத்திய, தேர்தல் பிரசார அரசியல் கூட்டத்துக்கு, பள்ளி கல்வித்துறை அனுமதி வழங்கி உள்ளது. இதில், அ.தி.மு.க., சார்பில், அமைச்சர் பாண்டியராஜன், தி.மு.க., சார்பில், தியாகராஜன், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில், ஒவ்வொரு கட்சியும், தங்களுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும் என, விவாதம் நடத்தினர். பொதுமக்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.இந்த நிகழ்வால், நுாலகத்துக்கு வந்த வாசிப்பாளர்கள், கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இளம் தலைமுறையின் உயர்கல்வியைஊக்குவிக்கும் வகையில் கட்டப்பட்ட நுாலகத்தில், இதுவரை அரசியல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதில்லை.
அங்குள்ள கலையரங்கத்தில், திருமண நிகழ்ச்சிக்கு கூட அனுமதி வழங்கக் கூடாது என, விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.ஆனால், இவற்றை மீறும் வகையில், அரசியல் கூட்டத்துக்கும், தேர்தல் பிரசாரத்துக்கும், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.அரசு நிறுவனத்தை, அரசியல் விவகாரங்களுக்கு பயன்படுத்தக் கூடாது என்ற விதியும் இதில் மீறப்பட்டுள்ளதாக, கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக