சனி, 9 மார்ச், 2019

துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை ..சுமார் பத்து பேர்கள் .?

துரைமுருகன் வீட்டை தேமுதிகவினர் முற்றுகை!மின்னம்பலம் : தேமுதிக கூட்டணி தொடர்பாக துரைமுருகன் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்பாடியிலுள்ள அவரது இல்லத்தை தேமுதிகவினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டணி தொடர்பாக நேற்று முன்தினம் பியூஷ் கோயலுடன் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் பேச்சுவார்த்தை நடத்திவந்த அதே நேரத்தில், சென்னை கோட்டூர்புரத்திலுள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் இல்லத்துக்கு இளங்கோவன், அனகை முருகேசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் வருகை தந்தனர். இருவரும் கூட்டணி தொடர்பாக பேச வந்ததாகவும் ஆனால் எங்களிடம் சீட் இல்லையென கூறிவிட்டதாகவும், இதுதொடர்பாக சுதீஷும் தன்னிடம் போனில் பேசியதாகவும் துரைமுருகன் பேட்டியளித்தார்.

ஒரே நேரத்தில் அதிமுக, திமுக என இரு கட்சிகளுடனும் தேமுதிக கூட்டணி பேசியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தாங்கள் கூட்டணி தொடர்பாக பேசவில்லை என்றும் தனிப்பட்ட முறையிலேயே சந்தித்தோம் என்று தேமுதிக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். ஆனால் கூட்டணி குறித்துதான் பேசினர் என்று துரைமுருகன் மீண்டும் பேட்டியளித்தார்.
இந்த நிலையில் வேலூர் மாவட்டம் காட்பாடியிலுள்ள துரைமுருகன் இல்லத்தை தேமுதிக மாவட்டச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் அக்கட்சியினர் இன்று (மார்ச் 8) ஊர்வலமாகச் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ‘துரைமுருகன் ஒழிக’ என்று முழக்கங்களும் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்ட தேமுதிகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதே நேரத்தில் துரைமுருகனுக்கு ஆதரவாக திமுகவினரும் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. துரைமுருகன் வீட்டை முற்றுகையிட முயன்ற நேரத்தில் அவர் சென்னையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக பேசிய துரைமுருகன், “என் வீட்டை யாரும் முற்றுகையிடவில்லை. யாரோ 10 பேர் முற்றுகையிட முயற்சித்துள்ளனர். அவர்களையும் போலீஸ்காரர்கள் கைது செய்துவிட்டனர்” என்று தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: