செவ்வாய், 5 மார்ச், 2019

அதிமுக - தேமுதிக இழுபறி .. வறுத்தெடுக்கும் பிரேமலதா ..

டிஜிட்டல் திண்ணை: கூட்டணி: விஜயகாந்த், எடப்பாடி பேசியது என்ன?மின்னம்பலம் : “திமுக கூட்டணி முடிவாகிவிட்டது. 20 தொகுதிகளில் திமுக என அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆக திமுக கூட்டணியில் தேமுதிக இல்லை என்பதும் உறுதியாகிவிட்டது.
தேமுதிகவை அதிமுக கூட்டணிக்குள் கொண்டு வர எடுக்கப்பட்டு வரும் முயற்சிகளை தொடர்ந்து மின்னம்பலத்தில் எழுதி வருகிறோம். எடப்பாடியும், பன்னீரும் கூட்டணி தொடர்பான
பேச்சுவார்த்தைகளில் ரொம்பவே தீவிரம் காட்டி வருகிறார்கள்.
இன்று காலை, தலைமைச் செயலகத்தில் 500 புதிய பேருந்துகள் தொடங்கி வைக்கும் விழா நடந்தது. அந்த விழாவுக்குப் பிறகுதான் அன்புமணி தலைமைச் செயலகத்துக்கு வந்து முதல்வரை பார்த்துவிட்டுப் போனார்.
அதன் பிறகு பன்னீர் மற்றும் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் நீண்ட நேரம் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது, ‘எனக்கு இப்போ வரைக்கும் வந்திருக்கும் ரிப்போர்ட் படி நம்ம கூட்டணி ரொம்பவும் ஸ்டிராங்காதான் இருக்கு. நாம அவங்களைப் பார்த்து பயப்பட தேவை இல்லை. பாமகவை நிறைய விமர்சனம் பண்றாங்க. விமர்சனம் பண்ற யாரும் வன்னியர்கள் கிடையாது. பாமகவுக்கு விழப்போவது வன்னியர்களின் ஓட்டு மட்டும்தான். அது நமக்கு வந்தால் போதும்.

கொங்கு ஈஸ்வரன் அங்கே போய்ட்டதால இன்னும் சில கொங்கு அமைப்புகளில் இருந்து என்கிட்ட பேசினாங்க. அப்படி தனியாக கொங்குக்கு சீட் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். கொங்குக்காக எதுக்கு தனியாக சீட் கொடுக்கணும். கொங்கு என்றால் நான் இருக்கேன். தங்கமணி இருக்காரு. வேலுமணி இருக்காரு. இது போதாதா? கொங்கு சமுதாயத்தின் வாக்குகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை. அது நமக்கு பெருமளவு வந்துடும். அதேபோல தேவர் என்றால் அண்ணன் இருக்காரு. இப்படி எல்லா சமுதாயத்திலும் நமக்கான வாக்குகள் பெரும்பான்மையாக வந்துடும்.
நான் நினைக்கிறதெல்லாம் ஒண்ணுதான். திமுக எத்தனை இடங்களில் போட்டியிடுதோ அதை விட ஒரு இடத்திலாவது அதிமுக அதிகமாக போட்டியிட வேண்டும். எப்படியும் நமக்கு முன்பு அவங்க கூட்டணி முடிவாகிடும். திமுகவை விட நாம அதிக இடத்தில் போட்டியிடுவதுதான் அவங்களுக்கு நாம காட்டும் பயமாக இருக்கும். அம்மா இருந்த போது தனித்து போட்டியிட்டோம் என்பதை விட அம்மா இல்லாத போதும், திமுகவை விட அதிக இடங்களில் நிற்கிறோம் என்பது நமக்கு பெருமைதான்.’ என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு துணை முதல்வர் பன்னீரோ, ‘நீங்க சொல்றது சரிதான்... ஆனால் தேமுதிக நம்ம கூட்டணிக்கு வரும்பட்சத்தில் அவங்களும் 7 சீட் கேட்டுட்டு இருக்காங்க. அந்த கணக்குப்படி பார்த்தால் 7 + 7+ 5+ 1+1 என மொத்தம் 40 தொகுதிகளில் 21 சீட் கூட்டணிக்கே போய்டுது. மிச்சம் நமக்கு இருப்பது 19 தான்’ என கணக்கு சொல்லியிருக்கிறார். அதைக் கேட்டு சிரித்த எடப்பாடி, ‘நானும் அதை யோசிச்சேன். தேமுதிகவுக்கான 7 இல் எதுவும் குறைக்க முடியுமான்னு பார்ப்போம்’ என்று சொன்னாராம்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதைப் படித்து, காப்பி செய்து ஷேர் செய்த ஃபேஸ்புக், “தலைமை செயலகத்தில் கட் பண்றேன். கோயம்பேடு தேமுதிக ஆபீஸ்ல ஓப்பன் பண்றேன். அங்கே நடந்ததை நான் சொல்றேன்.விஜயகாந்த் ஒரு நிலை எடுத்தால் அதைப் பெறும் வரை தன் பிடிவாதத்தை விட்டுக்கொடுக்கவே மாட்டார். அதுதான் இன்றைய கூட்டத்திலும் நடந்திருக்கிறது.
விஜயகாந்த் தலைமையில் இன்று தேமுதிக அலுவலகத்தில் நடந்தக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா, ‘கேப்டனை பொறுத்தவரை தொண்டர்களுக்கு மதிப்பு கொடுத்து, தொண்டர்களின் பலம் அறிந்து சீட் கொடுக்கும் கட்சியோடுதான் கூட்டணி என்பதில் உறுதியாக இருக்காரு. தொண்டர்களுக்கு மரியாதை கொடுக்க கூடிய கட்சியோடுதான் கூட்டணி என்பதுதான் அவர் எண்ணம்.ஏற்கெனவே திமுகவில் பேசினாங்க. இப்போ அதிமுகவிலும் பேசிட்டு இருக்காங்க. யாரு பேசினாலும் நாம எதற்கும் காம்ப்ரமைஸ் செய்துகிட்டு சீட் வாங்கிட்டுப் போக வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. பாமகவுக்கு 7 +1 கொடுத்தாங்க என்றால் நமக்கும் அதுக்கு குறைவில்லாமல் கொடுக்கணும் என்றுதான் கேட்டிருக்கோம்” என்றாராம்.
‘தலைவர் என்ன முடிவெடுக்கிறாரோ அதுக்கு நாங்க கட்டுப்படுறோம்’ என நிர்வாகிகள் வழக்கம் போலவே சொல்லி இருக்கிறார்கள்.
கடைசியாக பேசிய விஜயகாந்த், ‘நம் தொண்டர்களின்பலம் அறிந்து சீட் கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் நம் ஆதரவு. இல்லன்னா நான் வேற மாதிரியான முடிவெடுப்பேன். நான் எந்த முடிவெடுத்தாலும் உங்களை மனதில் வைத்துதான் முடிவெடுப்பேன். தைரியமாக இருங்க...’ என்று முடித்து இருக்கிறார்.” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.

கருத்துகள் இல்லை: