தினகரன் வீட்டிலிருந்து கிளம்புவது தொடங்கி கோட்டை வரை, அவர் வரும் வழியெல்லாம் தொண்டர்களை நிறுத்த வேண்டும் என்பதுதான் செந்தில் பாலாஜி திட்டம். அதற்கான ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தவர் அவர்தான். ‘கடலூர் மாவட்டத்துக்காரங்க பட்டினப்பாக்கம் சிக்னலில் இருந்து சங்கீதா ஹோட்டல் வரை நிற்கணும். அடுத்து அப்படியே விழுப்புரம் மாவட்டத்துக்காரங்க நின்றுடுங்க... எல்லோருடைய கையிலும் தினகரன் போட்டோ இருக்கணும். அவர் வண்டி வரும்போது பூவும் தூவுங்க... முடிஞ்ச வரைக்கும் டிராபிக் ஆகணும்.
அப்போதான் எல்லோருடைய கவனமும் நம்ம பக்கம் திரும்பும்..’ என்று மாவட்டப் பொறுப்பாளர்களிடம் செந்தில் பாலாஜியே பேசி இருக்கிறார். ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்தவர்கள் முழுக்க முழுக்கவே பைக்கில் வருமாறு சொல்லியதும் செந்தில் பாலாஜிதானாம். பைக் ஊர்வலமும் தினகரன் வீட்டில் இருந்தே கிளம்ப ப்ளான் போட்டுக் கொடுத்திருக்கிறார். போட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நேற்று இரவே தினகரனிடம் சொல்லி அப்ரூவலும் வாங்கிக்கொண்டாராம். ‘பொதுமக்களுக்கு எதுவும் இடையூறு இல்லாமல் பார்த்துக்கோங்க. யாரும் முகம் சுளிக்கிற மாதிரி ஆகிடக் கூடாது’ என்று மட்டும் சொன்னாராம் தினகரன்.
எல்லாம் திட்டமிட்டபடியே நடந்தது. ஆனால் போக்குவரத்து நெரிசலால், அடையாறில் இருந்து காமராசர் சாலை வரை திணறிவிட்டது. போதிய அளவு காவல் துறையும் இல்லாததால், பொதுமக்கள் நிறையவே சிரமத்துக்குள்ளானார்கள். சபாநாயகர் அறையில் தினகரன் பதவிஏற்றுக் கொண்ட போது, ‘வருங்கால முதல்வர் டிடிவி வாழ்க...’ என்ற கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. என்ன செய்வதெனப் புரியாமல் விழித்த சபாநாயகர் தனபால், ‘இங்கே இப்படியெல்லாம் கத்தக் கூடாதுன்னு சொல்லுங்க...’ என்று சொல்ல.. சிரித்தபடியே அமைதியாக இருக்கச் சொல்லி கையால் சைகை காட்டினார் தினகரன்.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் இருந்தது. சசிகலா சிறையிலிருந்து பரோலில் வெளி வந்த சமயத்திலும் சரி... தினகரன் திகார் சிறையில் இருந்து சென்னைக்கு வந்தபோதும் சரி... ஜெயா டிவியில் நேரலையாக ஒளிபரப்பினார்கள். தினகரன், ஏர்போர்ட்டில் இருந்து வீடு வரும் வரை லைவ் கொடுத்தார்கள். ஆனால், இந்த முறை தினகரன் பதவி ஏற்பு விழாவை ஏதோ சம்பிரதாயத்துக்காகக் காட்டுவதைப் போலக் காட்டிவிட்டு அமைதியாகிவிட்டது ஜெயா டிவி. சிறைக்குள் இருந்து வந்த உத்தரவால் இப்படியான நடவடிக்கையில் இறங்கியிருப்பார் விவேக் என்று சொல்கிறார்கள். ” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.
தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றை போஸ்ட் செய்தது ஃபேஸ்புக். “தினகரனுக்கு இன்று எவ்வளவு கூட்டம் வந்தது என்பதில் தொடங்கி பதவி ஏற்பு விழாவில் யாரெல்லாம் பங்கேற்றார்கள் என்பது வரை எல்லாமே அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தாராம் முதல்வர் பழனிசாமி. அமைச்சர்கள் யாராவது அங்கே போய்விடுவார்களோ என்ற பதட்டம் அவருக்கு இருந்தது என்றும் சொல்கிறார்கள். ‘பணத்தைக் கொடுத்துதான் அவரு ஜெயிச்சாருன்னு நாம சொல்லிட்டு இருந்தாலும், அது மட்டுமே இந்த வெற்றிக்கு வாய்ப்பாக இருக்குமா என்பது எனக்கு இன்னும் சந்தேகமாகத்தான் இருக்கு. மக்கள் எப்போ என்ன நினைக்கிறாங்க என்பதை நாம் இன்னும் புரிஞ்சுக்காம இருக்கோமா என்பதையும் யோசிக்கணும். ஆர்.கே.நகரை மட்டுமே வெச்சு நாம கணக்கு போட வேண்டிய அவசியம் இல்லை என்று சிலர் சொல்றாங்க. அதை தவிர்த்துட்டும் நாம கணக்கு போட முடியாது இல்லையா... நம்மகிட்ட இருக்கும் ஆட்களே தினகரன் சொல்ற மாதிரி அவரோட ஸ்லீப்பர் செல்லாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு இப்ப இருக்கு... அதையும் கண்டுபிடிக்கச் சொல்லணும்.’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் முதல்வர் பழனிசாமி சொல்லிவருகிறாராம்”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக