வெள்ளி, 29 டிசம்பர், 2017

அஞ்சா நெஞ்சன் அழகிரிசாமி ... பலரும் இன்னும் சரியாக அறியாத பட்டுகோட்டை அழகிரி

Image திராவிட அரசியல் வரலாற்றில் அஞ்சாநெஞ்சன், தளபதி இந்த இரண்டு அடைமொழிகளாலும் அழைக்கப்பட்டவர் ஒரே ஒருவர்தான். அவர்தான் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள். திராவிட இயக்கத்தின் முன்னோடி தலைவர்களுள் முக்கியமானவர். பெரியாரின்  அண்ணா உள்ளிட்ட 12 சீடர்களில் வாழ்நாளில் அதிக நாட்களை பெரியாருடன் சுயமரியாதை இயக்கத்திற்காக செலவிட்டவர்.<
பெரியாருக்கு முன்பாகவே சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர். அவரை நேரில் பார்த்து பழகிய முக்கிய ஆளுமைகளில் சம காலத்தில் நம்மிடையே வாழ்பவர்  கலைஞர் கருணாநிதி அவர்கள். கலைஞருடனான அழகிரியாரின் சந்திப்பு மிகவும் தற்செயலானது ஆனால் அது திராவிட அரசியல் வரலாற்றின் கெயொஸ் தியரி.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கருக்காக்குறிச்சி கிராமத்தில் வாசுதேவன் - கண்ணம்மா தம்பதியருக்கு 23.06.1900 அன்று பிறந்தவர். சிறுவயதில் தந்தை இறந்து விட்டதால் தாய் வழிப் பாட்டனாரின் ஊரான மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள வாவிடைமருதூர் கிராமத்தில் வளர்ந்தார். அங்கேயே பத்தாம் வகுப்பு வரை படித்தார்.
துள்ளித்திரியும் இளமை பருவத்திலேயே பிரிட்டன் ராணுவத்தில் சேர்ந்து 1914 முதல் 1918 வரை நடந்த முதலாம் உலகப்போரில் சண்டையிட்டவர்.


இந்திய வீரர்கள் என்ற ஏளனத்தாலும் அக்கறையின்மையாலும் மெசபடோமியாவில் கடும் குளிரில் மற்ற இந்திய வீரர்களோடு பிரிட்டன் ராணுவத்தினால் கைவிடப்பட்டவர். தனது தன் முனைப்பாலும் போராடும் குணத்தாலும் எப்படியோ தப்பிப்பிழைத்து கடல் மார்க்கமாக கல்கத்தாவை அடைந்து தமிழகம் வந்து சேர்ந்தார்.

அத்தோடு ராணுவ வேலையை விட்டு பட்டுக்கோட்டையில் ஒரு சாதாரண எழுத்தர் வேலையில் சேர்ந்தார்.

ஏழாண்டு காலம் ராணுவத்தில் கண்ட அடக்குமுறையும் ஆங்கிலேயர்கள் இந்தியப் படைவீரர் களை பாரபட்சமாக நடத்தியதும் அவரது கடந்தகால வாழ்வில் கண்ட கேட்ட பல சாதி சார்ந்த கொடுமைகளும் அழகிரியை ஒரு சுயமரியாதைக்காரராக சாதிய எதிர்ப்பாளராக நாத்திகராக உருவாக்கியிருந்தது.

பட்டுக்கோட்டையில் காங்கிரசு அரசால் லட்ச ரூபாய் நன்கொடை பெற்று நடத்தப்பட்ட ஒரு பிராமண குருகுலப்பள்ளியில் பிராமனரல்லாதவர்களுக்கு வைக்கப்பட்டிருந்த இரட்டைக் குவளை முறையில் தவறுதலாக தண்ணீர் குடித்ததால் ஒரு கீழ் சாதி மாணவன் தாக்கப்பட அதை எதிர்த்து போராடினார் அழகிரியார். அது தான் தமிழகத்தில் தன்னிச்சையாக அவர் தொடங்கிய முதல் சாதி எதிர்ப்பு சுயமரியாதைப் போராட்டம். அதனைத்தொடர்ந்து தமிழகத்தின் முதல் சுய மரியாதை அமைப்பை தொடங்கியவர் அதன் மூலமாக இளைஞர்களைத் திரட்டி தனது கருத்துக்களை பரப்பத் தொடங்கினார்.

1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தஞ்சையிலிருந்து சென்னை வரை இராமாமிர்தம் அம்மையார் தலைமையில் 45 நாட்கள் தமிழகம் முழுக்க நடைபயணம் செய்தவர் அய்யா அழகிரி அவர்கள். அவர் சென்னை வந்து சேர்ந்தபோது அவரை வரவேற்க பெரியார் உள்பட சுமார் ஒன்றரை லட்சம் பேர் சென்னை கடற்கரையில் குழுமியிருந்தனர். அப்போதுதான் பெரியார் ”தமிழ்நாடு தமிழருக்கே” என்ற முழக்கத்தை ஆரம்பித்து வைத்தார். இதைக் கேட்டதும் உங்களுக்கு ஜல்லிக்கட்டு புரட்சியும் வேறுசில திரிக்கப்பட்ட வரலாறுகளும் நினைவுக்கு வரலாம். அக்காலகட்டத்தில் தகவல்தொடர்புகள் இல்லாத நிலையில் அத்தனை பெரிய கூட்டம் எப்படி நடந்திருக்கும் என எண்ணிப்பாருங்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது மீண்டும் அவருக்கு ராணுவத்தில் வேலை கிடைத்தது. இந்த முறை ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் வேலை.

அங்கும் அவர் தனது சுயமரியாதைக் கருத்துக்களைப் பரப்ப சிலர் அவரைப்பற்றி கவர்னருக்கு மொட்டை கடிதம் எழுதினர்.

அழகிரியாரை கூப்பிட்டனுப்பிய கவர்னர் அவரை  ராணுவப்பணியிலிருந்து கொண்டு அரசியல் கருத்துக்களை பரப்பக்கூடாது என எச்சரிக்க அன்றோடு அரசு வேலைக்கு முழுக்குப் போட்டார்.

அழகிரியார் சுமார் ஆறரை அடி உயரம் இருப்பார். ராணுவத்தில் இருந்ததால் நல்ல கட்டுடலோடும் தோற்றப் பொலிவோடும் இருந்தவரை நேரில் நின்று எதிர்க்கவோ பேசவோ எதிராளிகள் பயந்தனர்.

ஒரு முறை பெரியார் நடத்திய சுயமரியாதை பத்திரிகையான ரிவோல்ட் இதழின் ஆசிரியர் குத்தூசி குருசாமியை ஒரு நாளேடு கடுமையாக விமர்சித்து எழுத பெரியாரின் தளபதி, அஞ்சாநெஞ்சனாக உருமாறிய அந்த சம்பவம் நிகழ்ந்தது.

நேராக பத்திரிகை அலுவலகம் சென்று அதன் ஆசிரியரை இழுத்து போட்டு வெளுத்து விட்டாராம். அந்த வழக்கில் இவருக்காக வாதாடியவர் சிந்தனைச் செல்வர் சிங்காரவேலர்.

சிவகங்கையில் ஒரு திருமணவிழாவில் அந்நாளில் பிரபலமாக அறியப்பட்ட நாதஸ்வர வித்வான் ஒருவரின் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. வெக்கை காரணமாக வியர்வையை துடைக்க ஒரு துண்டை தோளில் போட்டபடி வாசிக்க அங்கிருந்த ஆதிக்க சாதியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம் வெறும் துண்டை தோளில் போட்டதற்குதான் அந்த எதிர்ப்பு. அந்த நாதஸ்வர கலைஞரிடம் அக்கூட்டம் சாதிவெறியுடன் பேசத்தொடங்க கூட்டத்திலிருந்து வெளிப்பட்ட அழகிரியார். நீங்கள் துண்டை எடுக்க வேண்டாம். எவன் என்ன செய்கிறான் என நான் பார்க்கிறேன் நீங்கள் வாசியுங்கள் என குரல் கொடுக்க அவரது தோற்ற மிடுக்கு குரலில் இருந்த உறுதி இவற்றைக்கண்டு சாதி வெறி கும்பல் பம்மிக்கொண்டது.

இப்படி முரட்டுத்தனமான சுயமரியாதைக்காரராக விளங்கியவர் ஆக்ரோஷமான பேச்சாற்றலும் கைவரப்பெற்றிருந்தார்.

”தில்லை நடராஜரையும் ஸ்ரீரங்கநாதனையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் என்றோ”என்று திராவிட மேடைகளில் முதன் முதலில் முழங்கியவர் அழகிரியார்தான். பின்னாளில் அதை கலைஞர் பேசியதாக திரித்து இன்னும் அவரை திட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அவரது பேச்சு அக்கால கட்டத்தில் பல எதிரிகளை அவருக்கு பெற்றுத்தந்தது.. கல்லெறிதல் செருப்பெறிதல் போன்றவை சர்வ சாதாரணம். அழகிரியார் எதற்கும் அச்சமோ பயமோ கொள்பவரல்லர். எறியும் கல் பட்டு மண்டை உடைந்தாலும் ரத்தத்தை துடைத்துக்கொண்டு இன்னும் ஆக்ரோஷமாக பேசக்கூடியவர்.

கடைசியில் கல்லெறிந்தவர்களும் செருப்பெறிந்தவர்களும் வந்து மன்னிப்பு கேட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு.

அந்த காலத்தில் மேடைப் பேச்சு என்பது ஒருவிதமான சங்கீத நடையில் இருக்கும்.

அதை உடைத்து இயல்பான மனதை தொடும் உணர்ச்சிமிக்க பேச்சு நடையை அறிமுகம் செய்தவர் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்கள்தான்.

அவரது பேச்சில் உணர்வும் கவிநயமும் இரண்டர கலந்துவிட்டிருந்தது. அதற்காகவே அவருக்கு சிலர் புலவர் பட்டமும் வழங்கினர். எதுகையும் மோனையும் கலந்த திராவிட சொற்பொழிவின் தந்தை அழகிரியார்தான்.

அவரைப் பின்பற்றி அவரது பாணியில் சில மாறுதல்கள் செய்து பேசிவர்கள் தான் அறிஞரும், கலைஞரும்.

இளம் வயதிலேயே காச நோயால் பாதிக்கப்பட்ட அழகிரியார் அந்த நோயுடனேயே பல கூட்டங்களில் பேசிவந்தார்.

அழகிரியாருக்கும் பெரியாருக்கும் கருத்து வேறுபாடுகளும் பிணக்குகளும் இருந்து வந்தாலும் பெரியாரை அவர் எப்போதும் எங்கும் விட்டுக்கொடுத்ததில்லை. அவர்களது சண்டையும் ஒரு பயணத்திலோ அல்லது ஒரு ஆப்பக்கடை உணவு இடைவேளையிலோ சமாதானத்திற்கு வந்துவிடும்.

ஆனாலும் அழகிரியார் நோயுற்றிருந்த போது பெரியார் அவரை கவனிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு சிலரால் சொல்லப்பட்டு வருகிறது.

ஒருமுறை திருவாரூரில் ஆக்ரோஷமாக பேசிக் கொண்டிருக்கும் போதே நோயின் பாதிப்பால் இருமலுடன் கீழே மயங்கிவிழ அவரை ஆசுவாசப்படுத்திய ஒரு சிறுவன் இப்படி நோயுடன் ஏன் உடலை வருத்திக்கொண்டு பேசுகிறீர்கள் என்று கேட்டான். அதற்கு அழகிரியார் என்னை விட இந்த சமூகம் அதிகம் நோய் வாய்வாய்பட்டிருக்கிறதே தம்பி என திருப்பி கேட்டார் அந்த சிறுவன் சிந்திக்கத்தொடங்கினான். அந்த சிறுவன்தான் கலைஞர் கருணாநிதி.

ஒரு மேடைப் பேச்சின் மூலம் ஒரு மாபெரும் தலைவனை உருவாக்க முடியும் என்பதற்கான உதாரணம் இந்தச் சம்பவம்..

ம்ம்.. மேலே சொன்ன அந்த கெயோஸ் தியரி.

இந்திய சுதந்திரத்திற்கு அண்ணாவுக்கும் பெரியாருக்கும் வலுவாகியிருந்த கருத்து வேறுபாட்டால் அதிகம் ஆத்திரமடைந்தவர் அழகிரிதான். மேடைகளில் அண்ணாவை விளாசித்தள்ளினார்..”அண்ணாதுரை நெஞ்சிலேருந்து மஞ்சாப்பத்தை எடுத்து விடுவேன்” என்று போகிற போக்கில் அவர் பேசி வைக்க அது பிற்காலத்தில் முக்கியமான சென்னை பாஷையாக உருவெடுத்தது.

அத்தனை பேசினாலும் அண்ணா அழகிரியார் மீது கோபம் கொள்ளவில்லை.

அழகிரியாருக்கு ஏதும் நிரந்தர வருமானம் இல்லாத காரணத்தாலும் கொள்கை கூட்டமென்று ஊரெல்லாம் அலைந்து கொண்டிருந்த காரணத்தாலும் கடன் அதிகமாகிவிட உடல் நலத்தைக்கூட சரியாக கவனித்துக்கொள்ள முடியாத நிலைக்கு ஆளானார். 5 பிள்ளைகளைக்கொண்ட அவரது குடும்பம் கடனிலும் வறுமையிலும் வாடியது.

ஒரு முறை கலைவாணரிடம் நான் விரைவில் செத்துவிடுவேன் எனக்கு நிறையக் கடன் இருக்கிறது. உன்னால் அவற்றை தீர்க்கமுடியுமா என கேட்க, கலைவாணர் கடனைப்பற்றி கவலை கொள்ளாதீர்கள் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று தழுதழுத்தாராம் கலைவாணர்.

அண்ணாவும் சந்திரோதயம் போன்ற நாடகங்கள் மூலம் பணம் திரட்டி அவருக்கு உதவி செய்திருக்கிறார். ஒருமுறை சென்னை காசநோய் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு அழகிரியார் ரயிலில் ஊருக்கு புறப்பட்டுவிட்டார். தகவல் தாமதமாகக் கிடைக்க அண்ணா ஒரு மகிழுந்தை எடுத்துக்கொண்டு செங்கல்பட்டு நிலையத்தில் ரயிலை பிடித்து தான் கொண்டு வந்த 600 ரூபாய் பணத்தை அவரிடம் வற்புறுத்தி கொடுக்க.. அண்ணாவை கட்டியணைத்துக்கொண்டவர் உன்னை எத்தனையோமுறை மேடையில் திட்டியிருக்கிறேன் ஆனாலும் அதை பெரிது படுத்தாமல் உதவுகிறாய் என்று நெகிழ்ந்திருக்கிறார்.

அண்ணா தமிழகத்தில் எங்கு கூட்டம் நடத்த விரும்பினாலும் அழகிரி அய்யாவுக்கு 100 மணி ஆர்டர் செய்த ரசீதை எனக்கு அனுப்பினால் தான் கூட்டத்திற்கு ஒப்புக்கொள்வேன் என்று நிபந்தனை போட்டார். ஆனால் அழகிரியார் அவ்வாறு செய்யாதே வேண்டாம் என மறுத்துவிட்டார்.

காசநோயின் தீவிரத்தால் 1949 ஆம் ஆண்டு மார்ச் 28 அன்று அந்த பட்டுக்கோட்டு சிங்கம் மறைந்தது.

வாக்கு கொடுத்தபடி கலைவாணர் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி அழகிரியாரின் கடன்களை அடைத்தார்.

அழகிரியாரால் உருவான தலைவர் கலைஞர் தனது மூத்த மகனுக்கு அவரது பெயரையே வைத்தார்.

பிற்காலத்தில் இரண்டாம் அழகிரியின் பெயருக்கு முன்னும் அஞ்சா நெஞ்சன் என்ற பட்டம் ஒட்டிக்கொண்டுவிட்டது. தளபதி பட்டம் அவரது மற்றொரு மகன் ஸ்டாலினுக்கு அமைந்துவிட்டது.

அவரது நினைவிடத்தில் மணி மண்டபம் கட்ட கலைஞர் ஆட்சியில் (2007) தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது இன்னும் நிறைவேற்றப்படாமல் இருந்து வருகிறது.  தமிழக அரசு அந்த பணியை நிறைவேற்றுமெனில் அதைவிட பெரும் பேறு வேறிருக்க முடியாது.!

கருத்துகள் இல்லை: