கடந்த மே மாதம் ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், போர் வரும்போது பார்த்துக்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி முதல் மீண்டும் ரசிகர்களை சந்தித்து வருகிறார். தொடக்க நாளில் பேசிய ரஜினி, வரும் 31ஆம் தேதி அரசியல் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்திருந்தார். நேற்றைய பேச்சிலும் இன்னும் நான்கு நாட்கள் காத்திருங்கள் என்றே குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று (டிசம்பர் 28) செய்தியாளர்களை சந்தித்த பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, "அரசியல் என்றாலே பல சித்து விளையாட்டுகள் தெரிய வேண்டும். ரஜினி ஒரு வெகுளி. அவருக்கு அரசியல் சரிப்பட்டு வராது. அவருடைய ரசிகர்கள் அனைத்து இயக்கங்களிலும் உள்ளனர். அனைவரையும் சரிசெய்து அரசியல் செய்யும் நிலையை அவர் தாண்டிவிட்டார்.
இருபது வருடங்களுக்கு முன்பு ரஜினி இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்திருந்தால் அவர் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பிருந்திருக்கும். அவருடைய குணங்களுக்கு தற்போதைய அரசியல் காலகட்டங்கள் சரிப்பட்டு வராது. இது என்னுடைய கருத்து" என்று தெரிவித்தார்.
பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, வரக்கூடிய காலங்களில் பாஜகவுடன் கூட்டணிக்கு அமைக்க வாய்ப்பிருக்கிறது. அதனை இல்லையென்று சொல்ல முடியுமா?. அரசியலில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். யாரும் யாருடனும் கூட்டணி அமைக்கலாம். என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக