வியாழன், 28 டிசம்பர், 2017

நடந்ததை விளக்கி பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட முனிசேகர்

கண்ணீருடன் நடந்ததை விளக்கி பெரியபாண்டியன் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட முனிசேகர்மாலைமலர் :ராஜஸ்தானில் நடந்த சம்பவத்தை கண்ணீருடன் விளக்கி இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் மனைவியின் காலில் விழுந்து சக இன்ஸ்பெக்டர் முனிசேகர் மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னை: மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர் பெரியபாண்டி(48). கொளத்தூரில் ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை போன வழக்கில் வட மாநில கொள்ளையர்களை பிடிப்பதற்காக ராஜஸ்தான் மாநிலம் பாலி மாவட்டத்துக்கு சென்றார். அவருடன் அவரது நண்பரான இன்ஸ்பெக்டர் முனி சேகர் மற்றும் 5 போலீசாரும் சென்றனர்.
அங்கு நாதுராம் என்ற பிரபல கொள்ளையனை சுற்றி வளைத்து பிடிக்க முயன்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி துப்பாக்கி குண்டுக்கு இரையானார். முதலில் கொள்ளையர்களுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பலியானார் என்று கூறப்பட்டது. அதன் பிறகு வந்த தகவலில் இன்ஸ்பெக்டர் முனிசேகரின் துப்பாக்கி தவறி விழுந்ததில் கொள்ளையர்கள் அதை எடுத்து சுட்டு விட்டதாக கூறப்பட்டது. வடக்கில் இருந்து வந்த ஒவ்வொரு தகவலும் முன்னுக்குப்பின் முரணாகவே வந்தது. ராஜஸ்தான் போலீஸ் விசாரணையில் தமிழக போலீசார் சுட்டிருக்கின்றனர் என்று கூறப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.


இது தொடர்பாக சென்னையில் உயர் போலீஸ் அதிகாரிகளும் முனிசேகரிடம் விசாரணை நடத்தினார்கள்.

முனிசேகரின் துப்பாக்கி குண்டு தான் பெரியபாண்டியின் உடலை துளைத்து இருக்கிறது என்று ராஜஸ்தான் போலீசார் கூறிய போதும் முனிசேகர் என் கணவரின் நெருங்கிய நண்பர். அவர் சுட்டு இருக்க வாய்ப்பு இல்லை என்று நம்ப மறுத்தார் பெரியபாண்டியின் மனைவி பானுரேகா.


இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பெரியபாண்டிக்கு அவரது சொந்த ஊரான சங்கரன் கோவில் அருகில் உள்ள மூவிருந்தாளியில் 16-ம் நாள் காரியம் நடத்தப்பட்டது.

இதில் கலந்து கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் முனிசேகர் சென்றுள்ளார். அப்போது ராஜஸ்தானில் நடந்த சம்பவங்களை விளக்கி கூறி பானுரேகா காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு கண்ணீர் விட்டுள்ளார்.

மேலும், அங்கிருந்த பானுரேகாவின் தந்தை வெள்ளைபாண்டியன் காலில் விழுந்தும் மன்னிப்பு கேட்டுள்ளார். சுமார் 30 நிமிடங்கள் அங்கு கண்ணீர் மல்க இருந்ததாக பானு ரேகாவின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

முனிசேகர் துப்பாக்கியால் சுட்ட போது குறி தவறி பெரியபாண்டி உயிரை பறித்துள்ளது. நடந்த சம்பவங்களை அறிந்து உயர் அதிகாரிகளே முனி சேகரை பெரியபாண்டி குடும்பத்தினரை சந்திக்க அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

பெரியபாண்டி இறந்ததும் அவரது குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஆனால், இதுவரை அந்த நிதியும் வழங்கவில்லை. ஒரு நேர்மையான அதிகாரியின் இழப்பும், நிவாரண நிதியை வழங்குவதில் ஏற்பட்டுள்ள இழுத்தடிப்பும் வேதனையானது

கருத்துகள் இல்லை: