புதன், 27 டிசம்பர், 2017

புலவர் கலியபெருமாள் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா இன்று.

சிவசங்கர் எஸ்.எஸ்: துளார் அய்யா என்று அன்போடு அழைக்கப்பட்ட புலவர் கலியபெருமாள் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா இன்று.
செந்துறை ஒன்றியம் துளார் கிராமத்தை சேர்ந்தவர் புலவர் கலியபெருமாள். 1930 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிறந்தவர். பொன்பரப்பி அரசு உயர்நிலைப்பள்ளியில் பயின்றவர், பிறகு அதே பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றிப் புகழ் பெற்றார்.
படிக்கும் காலத்திலேயே தமிழ் மீது பற்றுக் கொண்டு வெண்பா எழுதி பரிசுப் பெற்றவர் என அவரது பள்ளி நண்பர் சங்கரசுப்பையன் பாராட்டுகிறார். சங்கரசுப்பையன் ஓய்வுப் பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி, பொன்பரப்பியை சேர்ந்தவர். 1949 முதல் 1953 வரை ஒன்றாகப் படித்தவர்கள்.
பள்ளியில் துவங்கிய தமிழ் காதல், தமிழாசிரியர் ஆனதோடு நிறுத்தவில்லை. பிறகாலத்தில் கவிதை, கட்டுரைகள் எழுதுவது வரை நீண்டது. ஓய்வு பெற்ற பிறகு, நூல்கள் எழுதி தனது 80வது பிறந்தநாளின் போது வெளியிட்டார் அய்யா.
கவிதைப் பூங்கா, கவி சிற்பங்கள், சேற்றில் முளைத்த செந்தாமரை, வேரில் பழுத்த பலா, காதல் தீபம், அவர்கள் அப்படித்தான், குழந்தைப் பாடல்கள், என நூல்களை எழுதி வெளியிட்டவர் 2015 ஆம் ஆண்டு மனச்சுமை ஒரு பாறாங்கல் என்ற நூலையும் வெளியிட்டார்.
இந்த நூல்களை பாராட்டி முன்னாள் துணைவேந்தர் பொற்கோ அவர்களும், செம்மொழி தமிழாய்வு மையத்தின் முன்னாள் பொறுப்பு அலுவலர் செம்மொழி இராமசாமி அவர்களும் அணிந்துரை வழங்கியுள்ளனர்.
அய்யா கலியபெருமாள் ஊரான துளார் உள்ளடங்கிய குக்கிராமம். 1950-களில் அந்தப் பகுதியில் மருத்துவர்கள் கிடையாது. அதனால் பயிற்சிப் பெற்று ஹோமியோபதி மருத்துவராக சேவை செய்தார். ஆசிரியர் பணியோடு கிராம மக்களுக்கான சேவையாக மருத்துவர் பணியும் ஆற்றினார்.
பிறந்த பிள்ளைச் செல்வங்களுக்கு நல்ல தமிழ் பெயர்களை சூட்டினார். தமிழரசி, குலோத்துங்கன், வெற்றிச்செல்வி, குணசீலன், தேன்மொழி, இளவழகன். இவர்களுக்கு நல்ல கல்வியும் அளித்து, ஆளாக்கி சமூகத்தில் அடையாளம் அளித்தார். தலைமையாசிரியர், மருந்தாளுனர், ஆசிரியர் என எல்லோருமே நல்ல நிலையில்.
இத்தோடு நின்றுவிடவில்லை இவர் பணி. பள்ளியில் படிக்கும் போதே, அன்றைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து சிறை சென்றவர். திராவிட இயக்கத்தில் இணைந்து இறுதி மூச்சு வரை உறுதியாக இருந்தார். 1967ல் தி.மு.க பெற்ற வெற்றியை கொண்டாடும் விதமாக மகளுக்கு வைத்த பெயர் தான் வெற்றிச்செல்வி.
கலைஞரின் நினைவில் எப்போதும் நேர்வகிடெடுத்த சிகையழகு. கழுத்தில் கருப்பு, சிவப்பு கம்பளித் துண்டு, அவ்வப்போது கலைஞரை போல் மஞ்சள் சால்வை. கையில் உதயசூரியன், கழகக் கொடி பொறித்த மோதிரம் என்று நெஞ்சில் பதியும் தோற்றத்தோடு தான் வெளியில் கிளம்புவார்.
ஒரு நாளும் இயக்கப் பணியில் விட்டுக் கொடுத்தவர் கிடையாது. ஆசிரியர் பணியில் இருக்கும் போது பெரியார், அண்ணா கொள்கைகளை மாணவர்களுக்கு அளித்தவர், பிறகு முழு நேர கொள்கைப்பரப்பாளர் ஆனார். தேர்தல் காலங்களில் என் தந்தையாருக்கு உறுதுணையாக இருந்தவர். பிற்காலத்தில் எனக்கும் உறுதுணையாக இருந்தார்.
ஆட்சியாளர்களால் தொந்தரவு வந்த நேரங்களிலும் பயந்தவர் அல்ல. வன்னியர் சங்கம் வலுவாக இருந்து, தேர்தல் புறக்கணிப்பில் செய்த நேரத்திலும், அயராமல் ஜனநாயகப் பணியும், கழகப் பணியும் ஆற்றியவர்.
ஆசிரியர் பணி, மருத்துவர் பணி, குடும்பப் பணி, இயக்கப் பணி, இலக்கியப் பணியோடு நிறுத்தி விடவில்லை அய்யா. மற்றோருக்கு உதாரணமாக சொந்தப் பணியும் ஆற்றியுள்ளார். தனது ஊரான துளாரில் சொந்த செலவில் பேருந்து நிறுத்தம் அமைத்துக் கொடுத்தார்.
ஆசிரியராகப் பணியாற்றி, வாழ்வின் பெரும்பகுதியை செலவிட்ட பொன்பரப்பி கிராமத்திலும் ஓர் பேருந்து நிழற்குடையை சொந்த செலவில் அமைத்துக் கொடுத்துள்ளார். தான் வாழ்ந்த பகுதிக்கு பொன்பரப்பியில் அண்ணா நகர் என்று பெயர் சூட்டினார். செந்துறையில் மகள் வெற்றிச்செல்வி வீடிருக்கும் பகுதிக்கு பாரதிதாசன் நகர் என்று பெயர் சூட்டினார்.
வாழ்வின் ஒவ்வொரு நொடித்துளியும் தன் அடையாளத்தை அழுத்தமாகப் பதித்து மறைந்துள்ளார் அய்யா கலியபெருமாள். அந்த அடையாளங்கள் மூலம் தொடர்ந்து வாழ்வார்.
# பற்பல பணிகள் செய்து மக்கள் மனதில் பதிந்தவர் கலியபெருமாள் !

கருத்துகள் இல்லை: