திங்கள், 25 டிசம்பர், 2017

எடப்பாடி அரசு கவிழுமா? மூத்த பத்திரிக்கையாளர் ராஜ்தீப் சர்தேசாய்

எடப்பாடி அரசு கவிழுமா?மின்னம்பலம் :ஆர்.கே.நகரில் தினகரன் பெற்றிருக்கும் வெற்றி, தமிழக மற்றும் தேசிய அளவிலான அரசியல் போக்கில் மாற்றம் ஏற்படுத்துமா?’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்.
தமிழக அரசியலில் நிகழும் மாற்றங்களுக்கும் தேசிய அளவிலான அரசியல் போக்குகளுக்கும் தொடர்பில்லை என்ற நிலையே சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தேசிய ஊடகங்களின் கவனம் தமிழகத்தின் மீது அதிகளவில் படியாதது, இதை அடிக்கோடிட்டுக்காட்டி வந்தன. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் நிகழ்ந்துவரும் அரசியல் மாற்றங்கள் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இதை வெளிக்காட்டும்விதமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பற்றி கருத்து தெரிவித்திருக்கிறார் இந்தியாவின் பிரபல பத்திரிகையாளரான ராஜ்தீப் சர்தேசாய். “இந்தியாவின் ஒரு மூலையான தமிழ்நாட்டில் மோடி மற்றும் அமித் ஷாவின் மாயாஜாலம் வேலை செய்யாதெனத் தெரிகிறது. ஆர்.கே.நகரில் நோட்டாவுக்கு 102 வாக்குகளும் பாஜகவுக்கு 66 வாக்குகளும் கிடைத்திருக்கின்றன” என்று நேற்று (டிசம்பர் 24) காலை 11 மணியளவில், தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இது மட்டுமல்லாமல், சுயேச்சையாகப் போட்டியிட்ட தினகரன் பெற்றிருந்த முன்னிலை குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார். “பணம் பாடாது, நடனமாடாது. ஆனால், கண்டிப்பாகப் பணம் பேசும், வாக்களிக்கும். மிதமிஞ்சிய நம்பிக்கையுடன் டி.டி.வி.தினகரன் வெற்றி பெறுவார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் இருந்து ஒரு தகவல் வந்திருக்கிறது. டெல்லி தர்பாரை எதிர்த்து நிற்பவர்களை தெற்கில் உள்ளவர்கள் ஆதரிக்கிறார்கள். ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் திமுக கூட டெல்லியுடன் நேசம் பாராட்டுவதற்கு ஒரு விலை கொடுக்க வேண்டியதாயிருக்கிறது” என்றிருக்கிறார்.

தினகரனின் வெற்றி எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது பற்றி, ராஜ்தீப் சில கேள்விகளையும் முன்வைத்திருக்கிறார். “ஆர்.கே.நகரைப் பற்றி பதில்களைவிட கேள்விகளே அதிகமிருக்கின்றன. எடப்பாடி பழனிசாமியின் அரசு கவிழுமா? திமுக பாஜகவுடன் நெருக்கம் பாராட்டுமா அல்லது காங்கிரஸுடன் கூட்டணியைத் தொடருமா? அம்மாவின் வாரிசாக டி.டி.வி.தினகரன் ஆவாரா? 2019 நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணிக்குத் தமிழ்நாடு வழிவகுக்குமா?” என்று கேள்விகளை அடுக்கியிருக்கிறார்.
தேசிய அரசியலின் போக்கை மாற்றுவதில் தமிழக மக்களும் அரசியல் தலைவர்களும் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, இந்த நிலைமையில் மாற்றமில்லை. ஆனால், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தின் முக்கியத்துவம் பெரிய அளவில் இல்லாமல் இருந்தது. ஆர்.கே.நகரில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தினகரன் பெற்ற வெற்றி, மீண்டும் அப்படியொரு சூழலை உருவாக்கியுள்ளதாகக் கருதுகின்றனர் அரசியல் விமர்சகர்கள் சிலர். மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாயின் ட்வீட்களும் அதையே திரும்பச் சொல்கின்றன.

கருத்துகள் இல்லை: