வெள்ளி, 6 அக்டோபர், 2017

எதிர்கட்சி தலவைர் ஸ்டாலினுக்கு அவமதிப்பு ... ஆளுநர் விழாவில் புரோட்டோகோல் புறக்கணிப்பு

ஸ்டாலினுக்கு  அவமதிப்பு!
மின்னம்பலம் : இன்று (அக்டோபர் 06) நடைபெற்ற ஆளுநர் பதவியேற்பு விழாவில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு உரிய மரியாதை அளிக்கப்படாமல் அவமதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தின் 20ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இன்று (அக்டோபர் 06) பதவிப் பிரமாணம் எடுத்துப் பொறுப்பேற்றுக்கொண்டார். உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி புதிய ஆளுநருக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். ஆளுநர் பதவியேற்பு விழா முடிந்த பின் வாழ்த்து தெரிவிக்க முதல்வர், துணை முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்களுக்கு பின் எதிர்க்கட்சித் தலைவர் அழைக்கப்பட வேண்டும்.

ஆனால் முதல்வர், மூத்த அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்த பின்னர் அமைச்சர் அந்தஸ்தில் உள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்படவில்லை. மற்ற அமைச்சர்களை, வி.ஐ.பி.க்களை அழைத்துக்கொண்டிருந்தனர்.
ஸ்டாலின் ஆளுநரின் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் இது குறித்த தனது அதிருப்தியைத் தெரிவித்தார். அப்போது அவர் ஸ்டாலினிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு, ஸ்டாலினை அழைக்குமாறு அறிவிப்பாளரிடம் சொல்வதற்காகச் சென்றார். ஆனால் அதை எதிர்பார்த்துக்கொண்டிருக்காமல் ஸ்டாலின் மேடையில் ஏறி ஆளுநருக்குப் பொன்னாடை போர்த்தி வாழ்த்துச் சொன்னார். பின்னர் ஆளுநர் பதவியேற்பு விழாவில் கொடுக்கப்பட்ட தேநீர் விருந்தில் பங்கேற்காமல் ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார்.

விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், “ஆளுநர் பதவி ஏற்ற பின்னர் முதலமைச்சர், அமைச்சர்கள் வாழ்த்து சொன்னார்கள் அதன் பின்னர் மரபுப்படி எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற முறையில் நான் சென்றேன். ஆனால் ஓர் அதிகாரி என்னைத் தடுத்து நீதிபதிகள் வாழ்த்து சொன்ன பிறகு நீங்கள் வாழ்த்து சொல்ல வேண்டும் என்றார். அப்படிப் பார்த்தால் அமைச்சர்களும் நீதிபதிகள் வாழ்த்துச் சொன்ன பிறகே வாழ்த்து சொல்லி இருக்க வேண்டும் அதுதான் மரபாக இருக்கும் என்றேன். ஆனால் அமைச்சர்கள் வாழ்த்து சொன்ன பிறகு என்னை ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்டேன்” என்று கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிந்து ஜெயலலிதா பதவி ஏற்கும் விழாவிலும் எதிர்க்கட்சித் தலைவருக்குரிய மரியாதை இல்லாமல் பின்னிருக்கையில் இடம் ஒதுக்கப்பட்டு ஸ்டாலின் அவமானப்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது நடந்த கைகலப்பில் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. இப்படித் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவருக்கு அவமரியாதை இழைக்கப்படுவது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
வெவ்வேறு அணிகளாகப் பிரிந்து பலவீனமாக உள்ள நிலையிலேயே அதிமுகவினர் ஸ்டாலினை மதிப்பதில்லை என்பது குறித்துச் சமூக வலைதளங்களிலும் ஆவேசமாகக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இத்தகைய செயல்பாடுகளுக்கான ஸ்டாலினின் எதிர்வினைகள் மேலும் வலுவாக அமைய வேண்டும் என திமுக ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை: