புதன், 4 அக்டோபர், 2017

மனுஷ்ய புத்திரன் :மறுபடியும் பதாகைகளுடன் விரைவில் மெரீனாவுக்கு வருவோம்

சற்று முன் விடுதலையானேன். எட்டுமணி நேரம் சிறுநீர் கழிபதற்கு
வசதியற்ற இடத்தில் இருந்ததில் அடிவயிற்றில் கடும் வலி. மற்றபடி இந்த நாள் என்றும் நினைவில் இருக்கும். உத்தமர் காந்தியின் பிறந்த நாளை நாங்கள்தான் மெய்யான அர்த்தத்தில் மதவாத பாசிசத்தை எதிர்த்துக்கொண்டாடினோம்
இன்று காலை கெளரி லங்கேஷ் படுகொலையை கண்டிக்கும், ‘காந்தியை கொன்றவர்கள்தான் கெளரியைக்கொன்றார்கள் ‘
என்ற பதாகையை ஏந்தியபடி மெரீனாவில் காந்தி சிலைக்கு மாலை அணிவிக்க சென்ற பல்வேறு இளைஞர் அமைப்பினருடன் நானும் சென்றேன்.காலை 10 .30க்கு காவல்துறையினர் எங்களை தடுத்து நிறுத்தினர். ” ஆர்.எஸ்.எஸ்ஸை காந்தி சிலைக்கு மாலை போட அனுமதிப்பீர்கள்..எங்களை தடுப்பீர்களா? என்று குரல் எழுப்பினோம். காவல்துறையினர் இளைஞர்களை பலவந்தமாக வேனில் ஏற்ற முயற்சித்தபோது ” எதற்காக கைது செய்கிறீர்கள்?” என்று காவல்துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டபடி சூழந்துகொண்ட ஊடகங்களிடம் அரசின் அராஜகத்தைக் கண்டித்து பேசத்தொடங்கினேன்.
உடனே என்னையும் கைது செய்து அழைத்துச் சென்றனர். 45 பேர் ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டோம். செய்தி அறிந்த தளபதி உடனே தொலைபேசில் அழைத்து விபரம் கேட்டறிந்தார். சற்று நேரத்தில் மயிலை பகுதி திமுக செயலர் மயிலை வேலு வந்து சேர்ந்தார். கைது செய்யப்பட்ட அனைவருக்கும் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்தார். இளைஞர்களிடம் உணர்சிகரமான ஒரு உரையாற்றினேன். கெளரி லங்கேஷ் பற்றிய என் கவிதையைப் படித்தேன். என்னோடு கைது செய்யப்பட்ட வ.கீதா, அ.மங்கை, வீ .அரசு உள்ளிட்ட பலரும் பேசினர். சிலர் பாடல்கள் பாடினர். நமது மோசமான காலம் பற்றி தொடர்ந்து உரையாடினோம். மாலை 6 மணிக்கு சொந்த ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டோம். காவலர் ஒருவர் கைகுலுக்கி வழியனுப்பினார்.
கெளரி லங்கேஷ் கொலையை கண்டித்து இன்று இந்தியா முழுக்க பல்வேறு இடங்களில் கண்டன ஊர்வலங்கள் நடந்தன.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதவகையில் இந்த கடும் ஒடுக்குமுறையை ஏவியிருக்கிறது.
காலையிலிருந்து தொடர்ந்து அலைபேசி, குறுஞ்செய்திகள் , முகநூல் பதிவுகள் மூலமாக இதைக் கண்டித்த , அக்கறையுடன் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி.
மறுபடியும் விரைவில் பதாகைகளுடன் மெரீனாவுக்கு வருவோம்.
மனுஷ்ய புத்திரன்
2.10.2017
மாலை 7.24

கருத்துகள் இல்லை: