வெள்ளி, 1 செப்டம்பர், 2017

அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்: அதிர்ச்சியில் எடப்பாடி , ஓபிஎஸ்!

அமித் ஷாவைச் சந்தித்த செங்கோட்டையன்: அதிர்ச்சியில் எடப்பாடி , ஓபிஎஸ்!முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்று அதிமுகவில் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் சுமார் இருபத்தைந்து பேர் போர்க்கொடி தூக்கியிருக்கும் நிலையில் யாரும் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் அதிமுகவில் நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்கு அச்சாரம் போடும்விதமாக பள்ளிக் கல்வித்துறை செங்கோட்டையன் நேற்று ஆகஸ்ட் 31ஆம் தேதி டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவை நிர்மலா சீதாராமனுடன் இணைந்துச் சந்தித்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நயினார் போட்ட விதை!
மிகச் சமீபத்தில் பாஜகவில் சேர்ந்த நயினார் நாகேந்திரனிடம் அதிமுகவின் கடந்த கால வரலாறு பற்றி விரிவாகவே பேசித் தெரிந்துகொண்டிருக்கிறார் அமித் ஷா. அப்போது நயினார் அமித் ஷாவிடம், ‘நீங்கள் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்தை அகற்றுவதற்காக முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் தமிழகம் முழுதும் மக்களிடையே பேச்சாக இருக்கிறது.
ஆனால், அதை யாரை வைத்து செயல்படுத்துகிறீர்கள் என்பதைத்தான் முரண்பாடாகப் பார்க்கிறார்கள் தமிழக மக்கள். இப்போது சசிகலா குடும்பத்தை எதிர்ப்பதாக சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் ஆகியோர் முழுக்க முழுக்க சசிகலாவால் வளர்ந்தவர்கள். ஜெயலலிதா 2002 ஆம் ஆண்டு... சட்டப்படி முதல்வராக தொடர இயலாத நிலை ஏற்பட்டபோது ஒரு சுற்றுப் பயணத்தில் இருந்த தினகரனிடத்தில் கார்டனில் இருந்து சசிகலா, ‘அக்காவுக்கு பிரச்னைன்னா யாரை முதல்வராக நியமிப்பது? விசுவாசமான ஆள் யார் இருக்காங்க’என்று கேட்டார். அப்போது தினகரன் டிக் அடித்தவர்தான் ஓ.பன்னீர். இன்று அவர்தான் தினகரனை எதிர்ப்பதாக சொல்கிறார்.
அந்த ஓ.பன்னீர் மீதே அவர்களுக்கு சந்தேகம் வந்தபோதுதான் அவரை விட தங்களுக்கு விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதல்வராகக் கொண்டுவந்தார் சசிகலா. இவர்கள் இருவரும் இன்று சசிகலாவை எதிர்ப்பது தங்கள் பதவிக்காகதான்’ என்பதை நயினார் சொன்ன விஷயங்கள் மூலமாக அமித் ஷா அறிந்து கொண்டிருக்கிறார்.

செங்கோட்டையன் பற்றி விசாரித்த அமித் ஷா!
இதன்பிறகுதான் செங்கோட்டையன் பற்றி நிர்மலா சீதாராமன் மூலமாக தனக்கு வந்திருந்த ரிப்போர்ட்டுகள் பற்றியும் கேட்டு சில விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டார் அமித் ஷா. அதாவது பன்னீர், பழனிசாமி இருவரும் முழுக்க முழுக்க சசிகலாவால் வளர்ந்தவர்கள். ஆனால் செங்கோட்டையனோ நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தன் செல்வாக்கால் ஜெயலலிதாவை முன்னிறுத்தியவர். எம் ஜி ஆருக்குப் பிறகு அதிமுகவில் ஜெயலலிதாவை முன்னிறுத்திய முக்கியஸ்தர்களில் செங்கோட்டையன் மட்டுமே இன்று அதிமுகவில் இருக்கிறார். கே.கே.எஸ்.எஸ். ஆர். ராமச்சந்திரன் சசி தரப்பால் அன்றே கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார், இன்று திமுகவில் இருக்கிறார். திருநாவுக்கரசரும் சசி தரப்பால்தான் மெல்ல மெல்ல அதிமுகவை விட்டு வெளியேற்றப்பட்டார். ஆனால் சசிகலா தரப்பின் அனைத்து தடைகளையும் சமாளித்து இன்றுவரை அதிமுகவில் இருப்பது செங்கோட்டையன் தான் என்பதுதான் நிர்மலா சீதாராமன் டெல்லிக்கு கொடுத்த ரிப்போர்ட்.
’தமிழகத்தில் முடிவெடுக்க தகுதி படைத்த தலைமை இப்போது பொறுப்பில் இல்லை’ என்று சில மாதங்களுக்கு முன் நிர்மலா சீதாராமன் சொன்னாரே, அப்போதுதான் பன்னீர், பழனிசாமி பற்றியும் செங்கோட்டையன் பற்றியும் அவர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருந்தார்.
ஒதுக்கப்பட்ட செங்கோட்டையன்!
சமீப மாதங்களாக அமைச்சர் என்ற கோதாவில் சகட்டுமேனிக்கு பலரும் கருத்து தெரிவித்துக் கொண்டிருக்க, அரசியல் பற்றி எதுவுமே பேசாமல் மௌனம் காத்தவர் செங்கோட்டையன். காரணம், தன்னால் கட்சி ஒன்றுபட வேண்டுமே தவிர, பிளவுபடக் கூடாது என்று கூறிவந்தார். தனக்கு எதிராக சசிகலவால் கொங்கு பகுதியில் வளர்க்கப்பட்டவர்தான் எடப்பாடி பழனிசாமி என்பதை அறிந்தும்... மிகவும் சீனியரான செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமியின் அமைச்சரவையின் கீழ் பணியாற்ற சம்மதித்தார். இப்போது இரு அணிகளும் சேர்ந்ததும் ஜெயலலிதா நியமித்த பதவிகள் செல்லும் என்ற நிலையில் அவைத் தலைவர் பதவியை இழந்தார் செங்கோட்டையன்.
அமைச்சரவை மாற்றத்திலும் செங்கோட்டையனிடம் இருந்தே கணிசமான துறைகள் உருவப்பட்டன. மேலும் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டது பற்றி துறை அமைச்சரான செங்கோட்டையனிடம் ஆலோசிக்கவில்லையாம் முதல்வர். இந்த விவகாரத்தில் செங்கோட்டையனை விமர்சித்து காரசாரமாக அறிக்கை விட்டது பாமக. ஆனால் விஷயம் அறிந்ததும் அன்புமணி செங்கோட்டையனின் நண்பர் ஒருவரைப் பிடித்து, ‘தப்பா எடுத்துக்க வேணாம்னு அவர் கிட்ட சொல்லுங்க’ என்றி தெரிவித்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் விரக்தியான செங்கோட்டையன் , முதல்வரிடமே சென்று, ‘எனக்கு எந்த பதவியும் வேண்டாம்.நான் பாட்டுக்கு பேசாம எம் எல் வாக கௌரவத்தோட இருந்துடறேன். என்னை விட்ருங்க’ என்று சொல்லியிருக்கிறார். தினகரன் அணியில் இருந்த தோப்பு வெங்கடாசலத்தையும் அழைத்து, ‘நான் இருக்கிறதால உங்களுக்கு பிரச்னை வேணாம், நீங்க இங்க வந்துடுங்க. அமைச்சர் ஆகிக்கங்க’என்று அழைத்து அவரும் இந்தப் பக்கம் வந்துவிட்டார்.

திடீர் அழைப்பு
இந்த நிலையில்தான் இதுவரை டெல்லி சார்பாக எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளப்படாத செங்கோட்டையனை முதன் முறையாக அழைத்திருக்கிறார்கள் பாஜக மேலிடத்தினர். வரும் நாடாளுமன்றத் தேர்தல், அடுத்த சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் அதிமுகவுடன் கூட்டணி வைக்கவே ஆசைப்படுகிறது பாஜக. ஆனால் மத்திய உளவுத்துறை ரிப்போர்ட்டின்படி கடந்த பிப்ரவரி மாதம் சசிகலாவுக்கு தமிழக மக்களிடையே இருந்த எதிர்ப்பு அலை இப்போது ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிக்கு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. அதேநேரம் தமிழக அரசிலும், அரசியலிலும் பாஜகவின் தலையீட்டையும் மக்கள் ரசிக்கவில்லை என்றும் ரிப்போர்ட் போயிருக்கிறது. தவிர எடப்பாடி பழனிசாமி டெல்லி மேலிடத்துக்குக் கொடுத்த சில வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லையாம். இந்நிலையில்... வரும் நாடாளுமன்றத் தேர்தலோடு சேர்த்து சட்டமன்றத் தேர்தல் நடத்தினாலும் கூட அதற்குள், அதிமுகவில் தொண்டர்களும் ஏற்றுக் கொள்ளும் ஒருவரை அடையாளப்படுத்த வேண்டும் என்று கருதுகிறது பாஜக. அப்போதுதான் அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடியும்.
அதற்காக இப்போது அவர்கள் செலக்ட் செய்திருக்கும் நபர்தான் செங்கோட்டையன். இதற்காக அவரைக் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து டெல்லி மேலிடம் அழைத்துக் கொண்டிருக்க, பலமுறை தவிர்த்தவர் நேற்று ஆகஸ்டு 31 அதிகாலைதான் டெல்லிப் புறப்பட்டுப் போனார். அதுவும் தனது துறை ரீதியான சில வேலைகளை வைத்துக் கொண்டுதான் போனார்.

யானைக்குத் தீனி இல்லை!
பன்னீரையும் பழனிசாமியையும் நம்பாத நிலையில் பாஜக மேலிடம் தனது எதிர்கால அரசியல் நலன்களுக்காக அதிமுகவை சற்றே நலமாக வைத்திருக்க விரும்புகிறது. அந்த வகையில்தான் செங்கோட்டையனை அவர்கள் அணுகுகிறார்கள். நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், செங்கோட்டையன் ஆகிய இருவரும் டெல்லியில் அமித் ஷாவை சந்தித்துள்ளனர். அப்போது டெல்லியின் எண்ணத்தை செங்கோட்டையனிடம் சொல்லியிருக்கிறார் அமித் ஷா.
ஆனால் இதெல்லாம் புரிந்துகொண்டவர், ‘எனக்கு இப்போது எந்த ஆசையும் இல்லை. ஜெயலலிதா இருக்கும்போதே நான் ஆட்சியில் இருந்தும் கட்சியில் இருந்தும் ஒதுக்கப்பட்டேன். அப்போதே நான் விரக்தி அடைந்துவிட்டேன். கடந்த பிப்ரவரி மாதம் எனக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டபோது கூட நான் ஏற்கவில்லை. ஆனால் ஏற்காவிட்டால் கட்சியில் பிளவு என்று ஆகிவிடுமே என்பதற்காகவே ஏற்றுக் கொண்டேன். இப்போதும் எனக்கு எந்த ஆசையும் இல்லை. தவிர, முதல்வர் பதவி என்பது தமிழகத்தில் இப்போதைய சூழலில் யானை கட்டி தீனிபோடும் வேலை. அதற்காக தீனி என்னிடம் இல்லை’ என்று மறுத்திருக்கிறார். அதாவது தன்னிடம் பல்லாயிரம் கோடிகள் இல்லை என்பதைதான் அப்படி சொல்லியிருக்கிறார் செங்கோட்டையன். ஆனால் அவரை சம்மதிக்க வைக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறது பாஜக.
கவனிக்கும் தினகரன்!
இந்த நிலையில் எப்பாடுபட்டாவது எடப்பாடி பழனிசாமியை முதல்வர் பொறுப்பில் இருந்து நீக்கியே தீருவது என்று கங்கணம் கட்டும் தினகரன், டெல்லியின் இந்த நகர்வை ரசித்துக் கொண்டிருக்கிறாராம். எடப்பாடியை நீக்கிவிட்டு செங்கோட்டையனை டெல்லி மேலிடம் முதல்வர் பதவிக்கு சிபாரிசு செய்தால் அடுத்து வரும் மீதி ஆட்சிக் காலத்தை எந்த வித எதிர்ப்பும் இன்றி அனுமதிப்பதாக டெல்லிக்கு தகவல் தெரிவித்திருக்கிறார் தினகரன்.
தினகரன் - திமுக இணைந்து ஒருவேளை தங்களுக்குத் ’தொடர்பில்லாத’ ஆட்சியைக் கொண்டுவந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் பாஜகவுக்கு இருக்கிறது. அதனால்தான் இப்போது அது செங்கோட்டையனை முன்னிறுத்த முயல்கிறது.
அதிர்ச்சியில் எடப்பாடி, ஓபிஎஸ்
இரு அணிகளும் இணைவதற்கு ஆயிரம் முட்டுக் கட்டைகள் இருந்த நிலையிலும்... எடப்பாடி பழனிசாமியும் பன்னீரும் தனிப்பட்ட முறையில் பேசி அவசரமாக இணைந்ததற்குக் காரணமே,செங்கோட்டையன் விஷயம்தானாம். பிரிந்தே இருந்தால் செங்கோட்டையனை முதல்வர் பதவிக்குக் கொண்டு வந்துவிடுவார்கள் என்று கணக்குப் போட்டுதான் இருவரும் இணைந்துவிட்டார்கள் என்றும் அதிமுகவிலேயே பேசப்படுகிறது. செங்கோட்டையனுக்கு டெல்லியில் கிடைத்த ரெஸ்பான்ஸை கேள்விப்பட்டுதான், நேற்று மதியம் ஓ.பன்னீருடன் நீண்ட நேரம் ஆலோசித்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. முதல்வரும், துணை முதல்வரும் டெல்லி செல்கிறார்கள் என்று தகவல்கள் வந்தபடி இருக்க, அவர்கள் போகாமல் செங்கோட்டையன் டெல்லியால் அழைக்கப்பட்டிருக்கிறார்.
வேண்டாம் வேண்டாம் என்று ஒதுங்கிச் செல்கிறார் செங்கோட்டையன். வாருங்கள் வாருங்கள் என்று இழுக்கிறார்கள் டெல்லி வாலாக்கள்! இதை எடப்பாடி- ஓபிஎஸ் கூட்டணி எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறது? இந்த நகர்வின் அடுத்த கட்டம் சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்!
- ஆரா  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: