வெள்ளி, 1 செப்டம்பர், 2017

ரகசிய எம்.எல்.ஏக்கள் கூட்டம்: வாக்குறுதி பெற்ற முதல்வர் பழனிசாமி

tamilthehindu :எம்.எல்.ஏக்களை முதல்வர் சந்திப்பதாக இருந்த கூட்டம் தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் இல்லத்துக்கு மாற்றப்பட்டது. கூட்டத்தில் அனைத்து எம்.எல்.ஏக்களிடமும் ஆட்சிக்கு எதிராக போகக் கூடாது என்று வாக்குறுதி பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
அதிமுக அணிகள் இணைப்பு, 22 அதிருப்தி எம்.எல்.ஏக்களுடன் தினகரன் அணி ஆட்சிக்கு எதிராக செயல்படுவது, எதிர்க்கட்சிகள் சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுப்பது உள்ளிட்ட பரபரப்பான சுழ்நிலையில் தமிழக அரசு நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவிர மேலும் பலர் தங்கள் அணிக்கு வர உள்ளனர் என டிடிவி தினகரன் பேட்டி அளித்தார்.

மறுபுறம் திவாகரன் அளித்த பேட்டியில் எடப்பாடி, ஓபிஎஸ், 5 மூத்த அமைச்சர்கள் இல்லாத ஒரு அரசு அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி இன்று அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்களது மாவட்ட அமைச்சர்களுடன் தன்னை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
தலைமைச்செயலகத்தில் காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடப்பதாக இருந்தது. இந்நிலையில் இந்த சந்திப்பு கூட்டத்தை திடீரென தலைமைச் செயலகத்திலிருந்து தனது வீட்டுக்கு எடப்பாடி மாற்றினார்.
இந்தக் கூட்டத்தின் நோக்கம் ஸ்லீப்பர் செல் என்று தினகரனால் கூறப்படும் எம்.எல்.ஏக்களை திருப்திப்படுத்தவே என்கின்றனர் தினகரன் ஆதரவாளர்கள். இன்று எடப்பாடி வீட்டில் நடந்த கூட்டத்தில் ஐந்து அமைச்சர்கள் மட்டுமே எம்.எல்.ஏக்களை அழைத்து வந்தனர்.
அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, ராஜலட்சுமி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் தலைமையில் அந்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அரசு கொறடா ராஜேந்திரன் தலைமையில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வரை சந்தித்தனர். வரும் செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு செயற்குழு கூட்டத்திற்கு உறுப்பினர்களை அழைத்து வருவது குறித்தும், எவ்வாறு செயல்படுவது பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னைக்கு அழைத்து வந்து எவ்வாறு தங்க வைப்பது, கையெழுத்து வாங்குவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
தினகரன், தனக்கு ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை விரைவில் 40-ஐ தாண்டும் என்று கூறியுள்ளதை அடுத்து, ஸ்லீப்பர் செல் எம்.எல்.ஏக்களை கண்டறிவது குறித்தும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.
நாளை ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏக்களை முதல்வர் சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார்..
இந்த ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் எம்.எல்.ஏக்கள் குறித்த விபரம் தெரியாமல் ரகசியம் காக்கப்படவே கூட்டத்தை தனது இல்லத்தில் முதல்வர் நடத்தியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
வரும் 5 ஆம் தேதி தினகரன் போட்டி பொதுக்குழு நடத்தினால் அதற்கு பொதுக்குழு உறுப்பினர்கள் செல்லாமல் பாதுகாத்து 12 ஆம் தேதி பொதுக்குழு கூட்டத்தில் ஒட்டு மொத்தமாக கலந்துகொள்ள செய்ய வேண்டும் என அனைத்து எம்.எல்.ஏக்களிடம் வலியுறுத்தப்பட்டதாம்.
5 ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடத்தி கட்சிக்குள் மேலும் குழப்பத்தை தினகரன் தரப்பு ஏற்படுத்தும் என்பதால் தனது ஆதரவு நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக்கொள்வதில் முதல்வர் எடப்பாடி தீவிரமாக இருப்பதாக கூறுகிறார்கள்.

கருத்துகள் இல்லை: