செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

காவியா மாதவன் : திலீப் கூறியதால் 25 ரூபா ஆயிரம் குற்றவாளி சுனிலுக்கு கொடுத்தேன்

விகடன் : நடிகை பாவனா  துன்புறுத்தல் வழக்கில், கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப், ஓணம் பண்டிகை கொண்டாட ஜாமீன் வேண்டி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த ஓணத்தை திலீப் சிறை நண்பர்களுடன் கொண்டாடும் சூழல். திலீப்புக்கு எப்படியும் ஜாமீன் கிடைத்துவிடும் என நம்பியிருந்த அவரின் குடும்பத்தினர் ஏமாற்றத்திற்குள்ளானார்கள். திலீப்புக்கு ஜாமீன்  கிடைக்காமல் போனதற்கு அவரின் மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவன் அளித்த வாக்குமூலமே காரணம் என்று கூறப்படுகிறது. நடிகையை கடத்தியதாக கூறப்படும் பல்சர் சுனிலை முதலில் யாரென்று தனக்குத் தெரியாது என விசாரணையில் காவ்யா மாதவன் கூறியிருந்தார். போலீஸின் கிடுக்கிப்பிடி விசாரணையில், "தன் போனில் இருந்து ஒரு முறை பல்சர் சுனிலுக்கு  திலீப் போன் செய்ததாகவும் அவர் சொன்னதன் பேரில், சுனிலுக்கு 25 ஆயிரம் பணம் கொடுத்தேன்'' என வாக்குமூலம் அளித்துள்ளார்.

காவ்யா மாதவனின் வாக்குமூலத்தை முன் வைத்து, திலீப்பை வெளியே விட்டால் சாட்சிகளை கலைக்க வாய்ப்பிருப்பதாக போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. தொடர்ந்து நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மூன்றாவது முறையாக நிராகரிக்கப்பட்டது. நடிகை காவ்யா மாதவனின் வாக்குமூலம் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படுகிறது.
இதற்கிடையே, கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் லோக்நாத் பெகேரா கூறுகையில், '' விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதில் திலீப்புக்கு எதிரான ஆதாரங்கள் அனைத்தும் இணைக்கப்படும். வழக்கில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படுபவர் மீதுள்ள ஆதாரங்களைக் கருத்தில் கொண்டுதான் நீதிமன்றம் ஒருவரின் ஜாமீன் மனுவைத் தொடர்ந்து நிராகரிக்கும்'' எனத் தெரிவித்துள்ளார். நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு 50 நாள்களுக்கு மேலாக ஆலுவா சிறையில் உள்ளார். 90 நாள்களுக்குள் போலீஸார்  குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்யாவிடில் நீதிமன்றம் ஜாமீன் வழங்க வாய்ப்பிருக்கிறது.

கருத்துகள் இல்லை: