சனி, 2 செப்டம்பர், 2017

ஹரியானா .. வகுப்பறையில் மாணவர்கள் துப்பாக்கி சூடு!


மின்னம்பலம் : ஹரியானாவில் ஐ.டி.ஐ. மாணவரை சக மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானாவின் சோனிப்பட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் பயிலும் இரு மாணவர்களுக்கிடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், (இன்று செப்.1) காலை வகுப்பில் இருந்த சக மாணவரை மற்றொரு மாணவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இரண்டு மாணவர்களுக்குமே 16 அல்லது 17 வயது இருக்கும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவர் உடனடியாக ரொஹ்தக் பகுதியில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து சோனிபட் துணை கண்காணிப்பாளர் ராகுல் செய்தியாளர்களிடம் கூறியதாவது, துப்பாக்கிச்சூடு தொடர்பான சிசிடிவி வீடியோ கிடைத்துள்ளது.

அதில், மாணவர் ஒருவரைப் பின்னால் இருந்து இரண்டு மாணவர்கள் நெருங்குவதும், அதில் ஒருவர் பையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுடுவதும் தெளிவாக பதிவாகியுள்ளது. அந்த இரண்டு மாணவர்களும் தற்போது தலைமறைவாகியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் இரு மாணவர்களைத் தேடி வருகின்றனர். துப்பாக்கி கலாச்சாரம் என்பது அயல் நாடுகளில் மட்டுமே இருந்துவந்த நிலையில், தற்போது இந்தியாவில் அதுவும் பள்ளி மாணவர்கள் இடையே பரவியுள்ளது. இது போலீசார் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை: