வெள்ளி, 22 ஜனவரி, 2016

ரோகித் வெமுலா தற்கொலை: பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் - குமாரி செல்ஜா


தராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த ‘தலித்’ மாணவர்
ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் பற்றி பிரதமர் மோடி வாய் திறந்து பேசவேண்டும் என்று காங்கிரஸின் முக்கிய தலைவர் குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “தலித் குழந்தைகள் கஷ்டப்பட்டு மேலே வருகிறார்கள். ஆனால் அவர்கள் தேச விரோதிகள் என்று அவர்களின் சொந்த அமைச்சராலேயே அழைக்கப்படுகிறார்கள்.
இதன் காரணமாக ஒரு மாணவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். ஆனால் இதை தற்கொலை என்று அழைக்க கூடாது. இது ஒரு கொலை. பா.ஜ.க.-வை சேர்ந்த அமைச்சரே இதற்கு காரணமாக இருக்கிறார் என்றால் வருங்காலத்தில் இந்த நாட்டின் நிலை என்னவாக போகிறது?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இதே கருத்தை பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றும் வெளியிட்டுள்ளது. ” சமூக ஊடகங்களை திறமையாக பயன்படுத்துபவர் என்று பெயரெடுத்தவரான பிரதமர் மோடி, இது போன்ற சம்பவங்களை புறக்கணிப்பது தவறு. ஆம் ஆத்மி பேரணியில் ஒரு விவசாயி தற்கொலை செய்துக்கொண்ட போது உடனடியாக இரங்கல் தெரிவித்தார் பிரதமர். ஆனால் ரோகித் தற்கொலையில் தொடர்ந்து மவுனம் சாதிப்பது அவரை பற்றி தவறான பிம்பத்தை ஏற்படுத்திவிடும். மேலும் இது அவரை ஒட்டுமொத்த நாட்டின் பிரதமர் இல்லை, பா.ஜ.க.-வின் பிரதமர் என்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடும். இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவிப்பதால் அவர் மீது யாரும் பழிப்போட போவது இல்லை.” என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  மாலைமலர்.com

கருத்துகள் இல்லை: