சனி, 23 ஜனவரி, 2016

சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு


இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று வெளியிட்டார்.சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்று தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டன.
சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சுபாஷ் சந்திரபோஸின் குடும்ப உறுப்பினர்களை நரேந்திர மோதி சந்தித்துப் பேசினார். அதற்குப் பிறகு, சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ரகசிய ஆவணங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.>இந்திய சுதந்திரத்திற்காகப் போரிடும் நோக்கில் இந்திய தேசிய ராணுவம் என்ற பெயரில் படை ஒன்றை உருவாக்கிய போஸ், 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி தைபெய்யில் நடந்த ஒரு விமான விபத்தில் மரணமடைந்தார் என கூறப்படுகிறது.

இது தொடர்பாக அமைக்கப்பட்ட இரு கமிஷன்களும் அவர் அந்த விமான விபத்தில் மரணமடைந்துவிட்டதாகக் கூறின. ஆனால், மூன்றாவதாக அமைக்கப்பட்ட நீதியரசர் எம்.கே. முகர்ஜி தலைமையிலான கமிஷன், அவர் அந்த விபத்திற்குப் பிறகும் உயிருடன் இருந்திருக்கலாம் எனக் கூறியது.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 100 கோப்புகளில் 33 கோப்புகள் பிரதமர் அலுவலகத்திலிருந்து கடந்த டிசம்பர் 4ஆம் தேதியன்று தேசிய ஆவணக் காப்பகத்திற்கு கையளிக்கப்பட்டவை.
இதற்குப் பிறகு உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம் ஆகியவையும் தங்கள் வசம் இருந்த சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான ஆவணங்களை தேசிய ஆவணக் காப்பகத்திடம் கையளிக்கும் பணிகளைத் துவக்கின.
பிரதமரின் இந்த முயற்சியை வரவேற்பதாக சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தின் செய்தித் தொடர்பாளரான சந்திர குமார் போஸ் தெரிவித்திருக்கிறார்.
தற்போது வெளியிடப்பட்டிருக்கும் 100 கோப்புகளில் பிரமதர் அலுவலகத்திலிருந்தவை தவிர பிற கோப்புகள், இந்திய அரசுக்கும் ஜப்பான், ரஷ்ய அரசுகளுக்கும் இடையில் சுபாஷ் சந்திர போஸ் தொடர்பாக நடந்த கடிதப் போக்குவரத்து தொடர்பானவையாகும்.  bbc.tamil.com

கருத்துகள் இல்லை: