செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

சிறிய முதலீட்டில் நிச்சயமான பெரிய லாபம் ! ஆன்மீக சேவை கண்காட்சி ஸ்டால் வலம்

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிஇந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 4

ந்து ஆன்மீக கண்காட்சியில் உதவி பலகை மேசையில் இருந்தவரை அணுகினோம்.
“இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நோக்கம் என்ன சார்?” என்றோம்.
இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்
“நமது நாடு பழம்பெருமைமிக்க நாடுஜி. இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள இயற்கை வழிபாடு, ஜீவராசிகளை வழிபடுவது, நதிகளை வழிபடுவது, பெற்றோர்கள், ஆசிரியர்களை தெய்வமாக போற்றுவது, பெண்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் கன்னி பூஜை, சநாதன தர்மத்தை பின்பற்றுவது, நாட்டுப் பற்றை அதிகரிக்கும் விதத்தில் பாரதமாதாவையும், பரம்வீர் சக்கரா விருது பெற்றவர்களையும் ஆராதனை செய்வது இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்” என்று ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் வரும் சீரியல் ஆக்டர் போலவே விளக்கம் அளித்தார்.

காவிரி நதியை பூஜை போடும் உரிமை கர்நாடக ஜிக்கு மட்டும்தானே என்று கேட்ட போது அரசியல் செய்யதீர்கள் என்றார் அந்த ஜி.
ஹலோ எஃப்.எம் 106.4-ன் கடைக்குப் போனோம். ரேடியோவிற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? “நீங்க எதுக்கு பாஸ் இங்கே ஸ்டால் போட்டிருக்கீங்க” ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்ட போது,
“நாங்க இதுக்கு ஸ்பான்சர் பன்னியிருக்கோம் பாஸ் அதனால எங்களுக்கும் ஒரு ஸ்டால் கொடுத்திருக்காங்க” என்றார்.
“சரிங்க ஆனா உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றோம்.
ஹலோ எஃப்எம்
“ஒரு சம்பந்தமும் இல்லைங்க”
“ஒரு சம்பந்தமும் இல்லைங்க” என்றார்.
“சரி இங்கே மக்கள் வர்றாங்களா” என்றோம்.
“வர்றாங்க, பேசுறாங்க.”
“எதுக்கு வர்றாங்க, என்ன சொல்றாங்க?”
“எங்க எஃப்எம் மின் நிகழ்ச்சிகளை பத்தி கருத்து சொல்றாங்க. என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தலாம்னு ஆலோசனை சொல்றாங்க” என்றார். இந்து தர்மத்துக்கு காசு, ரேடியோ தர்மத்துக்கு கருத்துக் கேட்பு என்று பரஸ்பர ஆதாயத்தோடு பட்டையைக் கிளப்பினார்கள்.
இஷேத்ரா பன்னாட்டு உறைவிடப் பள்ளி சார்பாக ஒரு கடை போட்டிருந்தார்கள். “பாரத தருமத்தை இயற்கையான முறையில் சொல்லிக் கொடுக்கிறோம். படிப்பு என்றால் பாடப் புத்தகத்தில் மட்டும் கிடைப்பதில்லை. அதற்கேற்ற சூழல், முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பள்ளிதான் எங்களுடையது. 60 ஏக்கர் நிலத்தில் அமைந்த பள்ளியில் நமது பாரம்பரிய சூழலில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். சுத்த சைவ உணவுதான் போடுகிறோம்; யோகா, தியானம் சொல்லித் தருகிறோம்” என்றார்.
“இதற்கெல்லாம் எவ்வளவு ஃபீஸ்?”
“சராசரியா வருஷத்துக்கு ரூ 1.25 லட்சம் வரும்”
ishetra
பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா
“என்னங்க இது பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா. நம்ம நாட்டோட எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி இலவச கல்வி எல்லாம் இல்லையா?”
“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. அங்க நிக்கிறாங்களே அவங்கதான் இதுக்கு நிர்வாகி, போய் கேட்டுக்கோங்க” என்று நழுவி விட்டார். பாரம்பரிய இந்து ஞானமரபின் கல்விக்கு ஒன்றேகால லட்சமெல்லாம் ஒரு விசயமே இல்லை.
வழியில் இரு பள்ளி மாணவர்கள் தட்டில் டம்ளரோடு தண்ணீரை நீட்டினர். அப்போது தாகம் இல்லாததால் வேண்டாம் என்று கூறிவிட்டு நடந்தோம்.
“தம்பி இங்கே வாங்க தண்ணியை எடுத்து குடிங்க” என்றார் ஒரு அந்த ஸ்டாலில் இருந்த பெண்மணி.
சரி குடித்துவிடுவோம் என்று எடுத்து குடிக்கப்போகும் போது ‘ஓம் நமச்சிவாயா’ன்னு சொல்லிட்டு குடிங்க என்றார். எதிரில் ஒரு பள்ளி மாணவர் கூட்டம் வந்துகொண்டிருந்தது, அதில் ஒரு மாணவன் தண்ணீரை குடிப்பதற்கு முன்பு ஓம் நமச்சிவாயாவுக்கு பதிலாக ‘ஜெய் ஆஞ்சநேயா’ என்றான்.
அது என்ன டயலாக் என்று அவனிடமே கேட்டோம்.
“சும்மா ஒரு தமாஷுக்கு தான்”
“அது என்ன ஜெய் ஆஞ்சநேயா.”
“அது ஒரு தெலுங்கு பட டயலாக்ண்ணா”.
“என்ன டயலாக்”
“ஒரு தெலுங்கு படத்துல டிரெய்ன் மேல ஏறி பாலகிருஷ்ணா ஃபைட் பண்ணிட்ருப்பாரு. அப்ப எதிர்ல இன்னொரு ட்ரெய்ன் வரும் அது பக்கத்துல வரும் போது அதை தடுத்து நிறுத்துறதுக்காக கையை நீட்டி ஜெய் ஆஞ்சநேயான்னு சொல்லுவாரு டிரெய்ன் அப்படியே நின்னுடும், செம்ம காமெடி அது, அந்த டயலாகை தான் சொன்னேன்” என்றான்.
அடுத்து ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ என்கிற ஸ்டால். ஸ்டால்காரர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.
“எப்ப பார்த்தாலும் எனக்கு சின்ன ஸ்டாலா தான் தர்றா, வர்றவங்கள் எல்லாம் என்ன இவ்வளவு சின்னதா இருக்குன்னு கேக்குறாங்க நிர்வாகத்திடம் கொஞ்சம் சொல்லுங்கோ, அடுத்த முறையாவது கொஞ்சம் பெருசா வேணும்” என்று தனக்கு சின்ன கடை ஒதுக்கப்பட்டது குறித்து புலம்பிக் கொண்டிருந்தார்.
பக்கத்து ஸ்டாலில் ஒருவர் தினசரி நாம் எப்படி எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தார். அது என்ன ஸ்டால் என்று பார்த்தால் அதன் பெயர் ‘ஸனாதன் ஸன்ஸ்தா’ நாமும் அருகில் போய் நின்று கொண்டோம்.
  • எப்படி குளிக்க வேண்டும்
  • பெண்கள் முடியை அவிழ்த்து விடக்கூடாது, முடிந்து வைக்க வேண்டும், அதை எப்படி முடிய வேண்டும்.
  • எந்த திறப்பு விழாவாக இருந்தாலும் அதை ரிப்பன் வெட்டி திறக்காமல் இந்து முறைப்படி தேங்காய் உடைத்து திறக்க வேண்டும்.
  • ஒரு விழாவில் விளக்கேற்றும் போது மெழுகுவர்த்தியை பயன்படுத்தாமல் திரி விளக்கை பயன்படுத்தி விளக்கேற்ற வேண்டும்
  • குழந்தைகளின் பிறந்த நாட்களை கொண்டாடும் போது கேக் வெட்டி கொண்டாடாமல் பலகையில் உட்காரவைத்து இந்து முறைப்படி கொண்டாட வேண்டும்.
  • பேண்ட், ஷர்ட் போன்ற வெளிநாட்டு உடைகளை அணியாமல் நமது பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்
என்றெல்லாம் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவரே ஜீன்ஸ் பேண்ட் தான் அணிந்திருந்தார்.

கருத்துகள் இல்லை: