செவ்வாய், 19 ஆகஸ்ட், 2014

ஏழைகள் பணத்தில் முதலாளிகளுக்கு மானியம் ! தேநீர் விற்றவரின் கயமை !

நவீன மின்னணு பொருட்களுக்கு வரிவிலக்கு மேட்டுக்குடி பாவனை பொருட்களுக்கு வரிச்சலுகை அரிசிக்கு ஊக்கத்தொகை கோவிந்தா ரயில் கட்டண உயர்வால் அதுவும் கோவிந்தா
மூடி, ஃபிட்ச், ஸ்டாண்டர்ட் அண்ட் புவர் உள்ளிட்ட ஏகாதிபத்திய தர மதிப்பீட்டு நிறுவனங்கள் மோடி அரசின் முதல் பட்ஜெட்டைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, அதில் ஒரேயொரு குறை இருப்பதாக மூக்கைச் சிந்துகின்றன. “இந்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளபடி மோடி அரசால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறையை 4.1 சதவீத அளவிற்கு (மொத்த உள்நாட்டு உற்பத்தியோடு ஒப்பிடும்பொழுது) குறைத்துவிட முடியுமா?” என்பதுதான் அவர்களுக்குள்ள பெருத்த சந்தேகம். இந்த ஏகாதிபத்திய நிறுவனங்கள் மட்டுமல்ல, பெரும்பான்மையான முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களும் ஒரு பட்ஜெட்டின் தன்மையை, அதில் அறிவிக்கப்படும் திட்டங்கள், கொள்கைகள் அடிப்படையில் மதிப்பிடுவது கிடையாது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு பட்ஜெட்டில் அளிக்கப்படும் உறுதிமொழியை வைத்துதான் அளவிடுகிறார்கள்.
பற்றாக்குறையைக் குறைப்பதுதான் சிறந்த நிதி நிர்வாகத்தின் அடையாளமெனக் கூறும் இவர்கள், பட்ஜெட்டில் பற்றாக்குறை அதிகமாகக் காட்டப்பட்டால், அத்தகைய பட்ஜெட்டை கவர்ச்சி பட்ஜெட், வாக்குச்சீட்டு பட்ஜெட் என நையாண்டி செய்யத் தயங்குவதில்லை.
சமையல் எரிவாயு
சமையல் எரிவாயுக்கு மானிய வெட்டு
“வரி மற்றும் பிற வகையான வருவாய்களின் மூலம் அரசுக்கு வருமானமாக 15.7 இலட்சம் கோடி ரூபாய் கிடைக்கும் அதேசமயம், அரசின் செலவுகள் 18 இலட்சம் கோடி ரூபாயாக இருக்கும்” என இந்த பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. வரவைவிட அதிகமான இச்செலவுக்கு உணவுப் பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியும் யூரியா, சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள மானியமும் பழைய மாதிரியே தொடர்வதுதான் காரணமென்று குமுறுகிறார்கள் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள். இந்தக்குமுறலுக்கு ஆறுதல் சொல்வதுபோல, “60 ஆண்டு கால மானிய பாரம்பரியத்தை நான்கே மாதங்களில் ஒழித்துக்கட்டி விட முடியாது” என விளக்கமளித்திருக்கிறார், நிதியமைச்சர் அருண் ஜெட்லி.
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதனை உண்மையாகக் காட்டும் கோயபல்சு பாணியில், பட்ஜெட் பற்றாக்குறைக்கு மானியங்கள்தான் காரணமென தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் நிறுவிவிட முயலுகிறார்கள். இதுவொரு வடிகட்டிய பொய் என்பதை நிரூபிப்பதற்கு வேறெங்கும் செல்ல வேண்டாம். ஒவ்வொரு பட்ஜெட் அறிக்கையிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும் வருமான வரிச் சலுகை மற்றும் சுங்க, உற்பத்தி தீர்வை விலக்குகளால் அரசுக்கு ஏற்படும் வருமான இழப்பு எவ்வளவு எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த வருமான இழப்பையும் பற்றாக்குறையையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே மானியத்தால் பற்றாக்குறை ஏற்படுவதில்லை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும்.
எடுத்துக்காட்டாக, கடந்த ஆண்டு (2013-14) பட்ஜெட்டில் பல்வேறு மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.45 இலட்சம் கோடி ரூபாய்; கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்ட வருமான, சுங்க மற்றும் உற்பத்தித் தீர்வை வரிச்சலுகைகள் 5.72 இலட்சம் கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 5.24 இலட்சம் கோடி ரூபாய். அதற்கு முந்தைய ஆண்டில் (2012-13) மானியத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி 2.47 இலட்சம் கோடி ரூபாய்; முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட மொத்த வரிச்சலுகைகள் 5.66 இலட்சம் கோடி ரூபாய்; அறிவிக்கப்பட்ட பற்றாக்குறை 4.50 இலட்சம் கோடி ரூபாய்.
“பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு முதலாளித்துவ நிறுவனங்களுக்குக் கடந்த சில ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ள 5.50 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கார்ப்பரேட் வருமான வரிச் சலுகைகளை மட்டும் திரும்பப் பெற வேண்டும்” என 2013-14-ம் ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை குறிப்பிடுகிறது.
எனினும், மோடி அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அளிக்கப்பட்ட 5.50 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான கார்ப்பரேட் வருமான வரி விலக்குகள் ரத்து செய்யப்படவில்லை என்பதோடு, மேலும் 22,000 கோடி ரூபாய் பெறுமான வருமான, சுங்க மற்றும் உற்பத்தி தீர்வை வரி விலக்குகள் இந்த பட்ஜெட்டில் அளிக்கப்பட்டுள்ளன.
நவீன மின்னணு பொருட்களுக்கு வரிவிலக்கு
கடந்த 2005-06-ம் ஆண்டு தொடங்கி 2013-14ஆம் ஆண்டு முடிய கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் புதுப் பணக்கார கும்பலுக்கும் அளிக்கப்பட்டுள்ள மொத்த வரிச் சலுகைகள் 36 இலட்சம் கோடி ரூபாயாகும் எனக் குறிப்பிடுகிறார் பத்திரிகையாளர் பி.சாய்நாத். இந்தத் தொகை மைய அரசு தனது பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக உள்நாட்டில் வாங்கியிருக்கும் கடனுக்குச் சமமானது.
இந்தப் புள்ளிவிவரங்கள் கோடிக்கணக்கான மக்களின் அடிப்படை தேவைகளை அரைகுறையாக ஈடுசெய்யும் விதத்தில் வழங்கப்படும் மானியங்களைவிட, கையளவேயான கார்ப்பரேட் முதலாளிகள் மற்றும் புதுப் பணக்கார கும்பலின் நலனை முன்னிறுத்தி அறிவிக்கப்படும் வரிச்சலுகைகளால்தான் பற்றாக்குறை ஏற்படுவதை நிறுவுகின்றன.
ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டிலும் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வரிச் சலுகைகள் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மானியம் அளிக்கப்படும்பொழுது, பற்றாக்குறை குறைவதற்கு எந்தவொரு வாய்ப்பும் கிடையாது. எனில், “ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைக்க வேண்டும்” எனத் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள் கூப்பாடு போட்டு வருவதன் உண்மையான நோக்கமென்ன? அது மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களைப் படிப்படியாக வெட்டுவதுதான். தமது இந்த தீயநோக்கத்தை நியாயப்படுத்திக் கொள்ளவே, மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை நாட்டின் வில்லனாகவும், தரகு முதலாளிகளுக்கு அளிக்கப்படும் வரிச் சலுகைகளைப் பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கைகளாகவும் காட்டுகிறார்கள், தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.
முதலாளிகளுக்கு வரிச் சலுகைகள் அளித்தால், அவர்கள் பொருட்களை விலை மலிவாகத் தயாரித்து சந்தையில் விற்க முன்வருவார்கள். இதனால் நுகர்வு அதிகரிக்கும். அதனால் உற்பத்தி பெருகும். அதன் விளைவாக வேலை வாய்ப்புகள் கூடும் என்றொரு பயாஸ்கோப்பு படத்தைச் சித்தரித்து வருகிறார்கள் இவர்கள்.
பொருளாதார நெருக்கடி நீடித்துவரும் இந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கும் அவர்களின் எஜமானர்களான பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஏறத்தாழ 30 இலட்சம் கோடி ரூபாய் பல்வேறு இனங்களில் வரிச் சலுகையாக அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கடந்த ஆறு ஆண்டுகளில் விலைவாசி குறைந்துவிட்டதா? வேலைவாய்ப்பு பெருகிவிட்டதா? தமிழகத்திற்கு வந்த நோக்கியாவிற்கு அளிக்கப்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகள் அக்கம்பெனி தொழிலாளர்களின் வேலைக்கு உத்தரவாதமளித்ததா? இந்தச் சலுகைகளால் அம்பானியும் அதானியும் உலகக் கோடீசுவரர்களானதைத் தாண்டி மக்களுக்கு என்ன பலன் கிடைத்துவிட்டது?
06-1-captionமுதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை, செல்வங்களை விநியோகிப்பதில் உள்ளார்ந்த முறையிலேயே பெரும் ஏற்றத்தாழ்வுகள் நிலவி வருகின்றன. இந்த ஏற்றத்தாழ்வை எதிர்த்து சமத்துவமான விநியோக முறைக்காக உழைக்கும் மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகத்தான் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், சேவைகளையும் மானிய விலையில் மக்களுக்கு வழங்கும் உரிமை சட்டபூர்வமாக உத்தரவாதப்படுத்தப்பட்டது. எனவே, மானியம் என்பது உழைக்கும் மக்களின் அரசியல் பொருளாதார உரிமையேயன்றி, அம்மா உணவகம் போல ஆளுங்கும்பல் கருணை உள்ளத்தோடு போடும் பிச்சையல்ல. மேலும், முதலாளித்துவ ஆளுங்கும்பலுக்குத் தம்மை சேமநல அரசாகக் காட்டிக் கொள்வதற்கும் மானியங்கள் அளிப்பது தவிர்க்கமுடியாத தேவையாகியது.
ஆனால், தனியார்மயம்-தாராளமயத்தின் விளைவாகக் கல்வி, மருத்துவம் தொடங்கி குடிதண்ணீர் வரை அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நுழைந்த பின், அச்சேவைகளை அரசு மானிய விலையில் அளிப்பதைத் தமது இலாபத்திற்கு குறுக்கே நிற்கும் இடையூறாகத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் கருதுகின்றன. வெளிச் சந்தையில் ஓரளவு தரமான அரிசிகூட கிலோ நாற்பது ரூபாய்க்கு விற்கப்படும்பொழுது, ரேசன் கடையில் இலவசமாகவோ, குறைந்த விலையிலோ அரிசி விநியோகிக்கப்படுவதை முதலாளித்துவக் கும்பலால் சகித்துக் கொள்ள முடியுமா? அதனால்தான் மானியங்களை வெட்ட வேண்டும் என்பதை நிபந்தனையாகவே விதிக்கின்றன உலக வங்கி உள்ளிட்ட ஏகாதிபத்திய நிறுவனங்கள்.
சுதந்திரமும் இறையாண்மையும் கொண்டதாகக் கூறப்படும் இந்திய அரசு ஏகாதிபத்திய நிறுவனங்களின் இந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டிருப்பதோடு, அதனை பட்ஜெட் தயாரிப்புக்கான வழிகாட்டும் சட்டமாகவும் இயற்றி வைத்திருக்கிறது. வாஜ்பாயி தலைமையிலிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில்தான் உலக வங்கியின் நிபந்தனை, நிதி பொறுப்பு மற்றும் பட்ஜெட் மேலாண்மைச் சட்டமாக உருமாற்றம் பெற்றது. அதற்கடுத்து வந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி தனது வருடாந்திர வரவு-செலவு அறிக்கைகள் அனைத்தையும் இந்தச் சட்டத்திற்கு ஏற்பவே தயாரித்தது.
பற்றாக்குறை பட்ஜெட் போடுவது சீர்கெட்ட நிதி நிர்வாகத்தைக் குறிக்கிறது என்றால், உலக நாடுகளிலேயே அமெரிக்காதான் இந்த சீர்கெட்ட நிர்வாகத்திற்கு எடுப்பான உதாரணமாகும். ஆனால், உலக வங்கியோ, ஏகாதிபத்திய தர நிர்ணய நிறுவனங்களோ பற்றாக்குறையைக் குறைக்கும்படி அமெரிக்காவை ஒருக்காலும் நிர்பந்திப்பது கிடையாது. மாறாக, தனியார்மயம்-தாராளமயத்தை ஏற்றுக் கொண்ட ஏழை நாடுகள் மீதுதான் இந்த நிர்பந்தம் திணிக்கப்படுகிறது. எனவே, பட்ஜெட் பற்றாக்குறையைக் குறைப்பதை நாட்டு நலன் சார்ந்து எடுக்கப்படும் நடவடிக்கையாகப் பார்க்க முடியாது. உணவுப் பொருள், மருத்துவம், கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் விற்பனைச் சரக்காக மாற்றி, அவற்றின் உற்பத்தியை, விநியோகத்தை, விலையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை கார்ப்பரேட் முதலாளிகளிடம் ஒப்படைக்கும் மறுகாலனியாதிக்க நடவடிக்கையாகும்.
புதிதாகப் பதவியேற்ற மோடி அரசு, இம்மறுகாலனிய தாக்குதலைத் தீவிரப்படுத்தும் முகமாக இந்த நிதியாண்டில் பற்றாக்குறையை 4.1 சதவீதமாகவும்; அடுத்த (2015-16) ஆண்டில் பற்றாக்குறையை 3.6 சதவீதமாகவும், அதற்கடுத்த ஆண்டில் 3 சதவீதமாகவும் குறைத்துவிடுவோம் எனத் தனது ஏகாதிபத்திய எஜமானர்களுக்கு உறுதியளித்திருக்கிறது. ரயில் கட்டணங்களும் டீசல் விலையும் உயர்த்தப்பட்டிருப்பதையும், நெல்லுக்கும் கோதுமைக்கும் மாநில அரசுகள் ஊக்கத் தொகை கொடுக்கக்கூடாதென மைய அரசு கட்டளையிட்டிருப்பதையும், மானியங்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செலவு மேலாண்மை கமிட்டியை அமைக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளதையும் இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நெடுகிலும், தேநீர் விற்று பிழைப்பு நடத்திய சாதாரண குடும்பத்தில் பிறந்த எளிய மனிதனாகத் தன்னைக் காட்டி வந்தார் நரேந்திர மோடி. ஆனால், அவர் மன்மோகன் சிங்கையே விஞ்சக்கூடிய உலக வங்கியின் கைக்கூலி என்பதை இக்கட்டணக் கொள்ளை நடவடிக்கைகளும் பட்ஜெட்டும் எடுத்துக் காட்டிவிட்டன.
- குப்பன் vinavu.com

கருத்துகள் இல்லை: