மோடி, பச்சமுத்துலகமயமாக்க காலத்தில் பொதுத்துறையை போட்டி போட்டு அழிப்பதில் காங்கிரசும், பாஜகவும் சளைத்தவர்கள் அல்ல. தனியார் கூரியர்களை வளர்க்கும் விதமாக ஏற்கனவே தபால்துறையை பெருமளவு அழித்து விட்டார்கள்.
நாடு முழுவதும் 1,55,015 தபால் நிலையங்களை மாபெரும் வலைப்பின்னலாக வைத்திருக்கும் தபால் துறையின் சொத்துக்கள் மீது முதலாளிகளுக்கு எப்போதும் பெரும் கண் உண்டு. அதற்கு தோதாகவே மத்திய அரசும் தபால் துறையை மாற்றி வருகிறது.

தபால் துறை
மலைமுழுங்கி மகாதேவன் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம் நிறுவனத்தித்தின் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யும் வசதியை தமிழகத்தில் 94 தபால் நிலையங்களில் அளித்திருக்கிறார்கள்.
இப்படித்தான் கடிதம், தந்தி சேவை ஓய்ந்த பிறகு சேமிப்புக் கணக்கு, ஏடிஎம் என்று ஆரம்பித்தார்கள். பிறகு தொலைபேசி கட்டண வசூல், விமான டிக்கெட் விற்பனை, பல்கலைக்கழக விண்ணப்பம் விற்பனை, பாஸ்போர்ட் விண்ணப்ப விற்பனை, தங்க நாணயங்கள் விற்பனை, சிம் கார்டு விற்பனை, ரயில்வே முன்பதிவு என்று பில் வசூல் செய்யும் ஏஜண்டாக மாற்றி விட்டார்கள். அதிலும் கூட அரசுத்துறைகளுக்கு மட்டும் இந்த வசதி இருந்தால் பிரச்சினை இல்லை.
தற்போது மலைமுழுங்கி மகாதேவன் பாரிவேந்தர் பச்சமுத்துவுக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம் நிறுவனத்தித்தின் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு செய்யும் வசதியை தமிழகத்தில் 94 தபால் நிலையங்களில் அளித்திருக்கிறார்கள். விரைவில் இது மேலும் பல தபால் நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படுமாம்.
தற்போது இணையம் மூலம் பல்வேறு நிறுவனங்கள் ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு சேவை வழங்கி கட்டணம் வசூலிக்கின்றன. அவர்கள் பயணிகள், நிறுவனம் இருவரிடமிருந்தும் வசூலிக்கிறார்கள். தபால் துறை அதே சேவையை மக்களிடமிருந்து வசூலிக்காமல், பச்சமுத்து தரும் கமிஷனை மட்டும் பெற்றுக் கொள்ளுமாம்.
1999-ம் ஆண்டு 2 பேருந்துகளுடன் துவங்கப்பட்ட எஸ்.ஆர்.எம் போக்குவரத்து நிறுவனம் தற்போது 500 பேருந்துகளுடன் பிரம்மாண்டமாக வளர்ந்திருக்கிறது, அடுத்த 3 வருடங்களில் இது இன்னும் பிரம்மாண்டமாகும் என்று எஸ்.ஆர்.எம் குழும தலைவர் ரவி பச்சமுத்து கூறியிருக்கிறார். தபால் துறையில் இவர்களது முன்பதிவு வசதி ஆரம்பிக்கும் விழாவில் தபால் துறையின் தமிழ்நாடு கோட்டம் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் எஸ்.சி.பிரம்மா கலந்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் உள்ள 2,500 தபால் நிலையங்களையும் இப்படி தனியாருக்கு தாரைவார்த்து வசூலை மேற்கொள்ளப் போவதாக பெருமையுடன் கூறியிருக்கிறார்.
பாஜகவிற்கு புரவலர் வசதி மூலம் கூட்டணி வைத்து அதன் ஆதாயங்களை தற்போது அறுவடை செய்து வருகிறார்.
இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகள், புதிய தலைமுறை பெயரில் இரண்டு பத்திரிகைகள், நான்கைந்து சேனல்கள் (உள்ளதும், ஆரம்பிக்கப் போவதையும் சேர்த்து), இது போக மருத்துவமனைகள், சினிமா தயாரிப்பு, போக்குவரத்து, எலக்ட்ரிகல்ஸ், போதாக்குறையாக கட்சி என்று இந்தியா அம்பானி சாம்ராஜ்ஜியமாவது போல தமிழகம் பச்சமுத்துவின் பேட்டையாக மாறி வருகிறது.
தற்போது வட இந்திய மாநிலங்களிலும் எஸ்.ஆர்.எம் நிறுவன கல்லூரிகள் திறக்கப்பட முயற்சிகள் நடக்கின்றன. இவ்வளவு பெரிய சொத்துக்களை பச்சமுத்து எப்படி சுருட்டினார் என்பது ஊரறிந்த விசயம். நடுத்தர வர்க்கத்தின் ஆசையை நன்கொடை என்ற பெயரில் பல இலட்சங்களில் பெற்றுக் கொண்டு தமிழகத்திலேயே நம்பர் ஒன் கல்வி முதலாளியாக மாறியிருக்கிறார் பச்சமுத்து. அதை வைத்து இன்னும் பல துறைகளிலும் கால்பதித்து விட்டார்.
தமிழக அரசியலில் அனாதையாக இருந்த பாஜகவிற்கு புரவலர் வசதி மூலம் கூட்டணி வைத்து அதன் ஆதாயங்களை தற்போது அறுவடை செய்து வருகிறார். எஸ்.ஆர்.எம் நிறுவனம் எந்த முதலீடும் செய்யாமலேயே தமிழக தபால்துறை அலுவலகங்களை தனது முன்பதிவு வசதிகளுக்கான நிலையமாக பயன்படுத்தும். இதையே முறையாக அலுவகம், ஊழியர் போட்டு செய்தால் எத்தனை கோடி ஆகும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
இப்படி அடிமாட்டு விலைக்கு தபால்துறையை பச்சமுத்து பயன்படுத்துவது பாஜக கூட்டணியின் பலமே அன்றி வேறல்ல. இது ஏதோ தமிழக தபால்துறை மட்டும் தனித்து முடிவு செய்யும் விசயம் என்று சில அப்பாவிகள் கருதினால், அந்த வசதி ஏன் முதலில் பச்சமுத்து கம்பெனிக்கு கிடைத்தது என்று பதில் சொல்ல வேண்டும். தபால் துறை மத்திய அரசைச் சார்ந்தது, மத்திய அரசு மோடியின் தலைமையில் நடக்கிறது என்பதையும் அவர்கள் மறுக்க மாட்டார்கள்.
வைகோ-பச்சமுத்து
உழைப்பால் உயர்ந்த உத்தமர் பாரிவேந்தர் பச்சமுத்துவின் அருமை பெருமைகளை அவரது தோழர் வைகோவிடம் கேட்டுப் பெறலாம்
காங்கிரசு காலத்தில் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல்லை பயன்படுத்தியது போல பாஜக காலத்தில் பச்சமுத்து தபால் அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்கிறார். தபால்துறை அலுவலகங்களை இப்படி கூறு போட்டு தனியாருக்கு விற்பது என்று முடிவான பிறகு அது இன்னும் கூடுதல் வேகத்துடன் செயல்படுகிறது. கூட்டணி கூட்டாளிகளுக்கு முன்னுரிமை எனும் பெயரில் பச்சமுத்து அன் கோ சாதித்து விட்டது.
தபால்துறையை இப்படி வசூலுக்காக நடத்த வேண்டுமென்றால் அரசு துறைகளின் வசூல் மையமாக நடத்தலாம். அரசு போக்குவரத்து கழகங்களின் முன் பதிவு, அனைத்து தபால் நிலையங்களிலும் ரயில்வே முன்பதிவு போன்றவற்றை செய்யாமல் எஸ்.ஆர்.எம் போக்குவரத்திற்காக திறந்து விடுவது அயோக்கியத்தனமில்லையா? ஏற்கனவே தனியார் ஆம்னி பேருந்துகள் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை திவாலாக்கி வருகின்றன. ஜெயா தலைமையிலான தமிழக அரசோ இல்லை கருணாநிதி தலைமையிலான திமுக அரசோ அனைவரும் அரசுப் பொதுப் போக்குவரத்தை திட்டமிட்டு ஒழிப்பதை அமல்படுத்தியே வந்திருக்கின்றனர். இதைத்தான் உலக வங்கி முதல், பன்னாட்டு முதலாளிகள் வரை நிபந்தனைகளாக போட்டு செய்யச் சொன்னார்கள்.
இப்போது அந்த அழிவில் இந்திய தபால்துறையையும் சேர்த்து விட்டார்கள். அந்த வகையில் லேடியும், மோடியும் இணைந்து முன்னர் திருவள்ளுவர் என்று அழைக்கப்பட்ட அரசு விரைவுப் பேருந்து போக்குவரத்து கழகத்தின் மூடுவிழாவை விரைவில் நடத்துவார்கள். அதை கொண்டாடும் முகமாக பச்சமுத்து அனைவருக்கும் பார்ட்டி கொடுப்பார்.
அந்த பார்ட்டியின் மகிமையை மாலன் கவர் ஸ்டோரியாக புதிய தலைமுறையில் எழுதுவார். தொலைக்காட்சியில் ஜென்ராம் தொகுத்து அளிப்பார். கல்விக்கு கடன்பட்ட நடுத்தர வர்க்கம் இனி ஊர் போக வேண்டுமென்றாலும் கடன்பட வேண்டியிருக்கும். சாதாரண மக்களுக்கோ போக்குவரத்தே கிடையாது.
இதற்கு மேல் உங்களுக்கு கேள்விகள் இருந்தால் உழைப்பால் உயர்ந்த உத்தமர் பாரிவேந்தர் பச்சமுத்துவின் அருமை பெருமைகளை அவரது தோழர் வைகோவிடம் கேட்டுப் பெறலாம். vinavu.com