சனி, 23 ஆகஸ்ட், 2014

ஜெயலலிதா : முல்லை பெரியாறு வெற்றியின் ரகசியம் திருக்குறள் ?

மதுரை பாராட்டு விழாவில் ஜெ., பேச்சு முல்லைப் பெரியாறு அணை மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக திகழ்கிறது.இந்த அணையின் நீர்மட்டத்தை முதல் கட்டமாக 142 அடியாக உயர்த்துவதற்கான வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உள்ளது.இந்த தீர்ப்பை பெற்று அதை நடை முறைப்படுத்திய முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்தம்மா கலைஞர் பாணியில திருக்குறளை மேற்கோள் காட்டுராக , ஸ்டாலின் என்னடான்னா ஜெயலலிதா பாணியிலேயே அரசியல் பண்ணுராக ! முடியல்ல ?
இதற்காக, மதுரை உள்வட்ட சாலை (ரிங்ரோடு) பாண்டிகோவில் அருகில் 7 லட்சம் பேர் அமரும் வகையில் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. கோட்டை வடிவிலான முகப்பு அமைக்கப்பட்டு, பெரியாறு அணை போன்று மாதிரி வடிவமும் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டு இருந்தது.இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக, லட்சக்கணக்கில் பொதுமக்களும், விவசாயிகளும் நேற்று காலையில் இருந்தே வந்து குவிந்தனர்.
விழாவில் பங்கேற்பதற்காக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் நேற்று மாலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் தளத்துக்கு ஹெலிகாப்டரில் வந்தார். விமான நிலையத்திலும், ஹெலிகாப்டர் தளத்திலும் ஜெயலலிதாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பை ஏற்றுக்கொண்ட அவர் அங்கிருந்து காரில் விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார். வரும் வழியில் இருபுறமும் முளைப்பாரிகளுடன் திரண்டு நின்ற பெண்கள் அவரை வரவேற்றனர். விழா பந்தலை அடைந்ததும் அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட அவர் விழா மேடைக்கு வந்தார். சரியாக மாலை 5 மணிக்கு விழா தொடங்கியது.
விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதா பேசுகையில்,   ‘’37 ஆண்டு கால போராட்டத்திற்கு பிறகு முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட்டு; தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளதற்காக, விவசாயப் பெருங்குடி மக்களாகிய உங்கள் சார்பில் எனக்கு நன்றி தெரிவிக்கும் விழா இங்கே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
என்னைப் பொறுத்தவரையில், தமிழகத்திற்கு வழங்கப்பட்ட நீதியை கொண்டாடும் விழா, தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டதற்கான வெற்றி விழா என்றே இதனைச் சொல்ல வேண்டும். இந்த வெற்றி விழாவிலே பங்கேற்கும் வாய்ப்பினை எனக்கு நல்கிய உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றி வேளாண் பெருங்குடி மக்களாகிய உங்களுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்வதில் நான் பெருமிதம் கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது தமிழகத்தின் முதல்- அமைச்சராக இருந்த நான், ஒவ்வொரு விசாரணைக்கு முன்பும், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும், பொறியியல் வல்லுநர்களையும், சட்ட வல்லுநர்களையும் அழைத்துப் பேசி, தமிழகத்தின் சார்பில் எடுத்து வைக்கப்பட வேண்டிய வாதங்கள் குறித்து விரிவாக விவாதிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தேன். தமிழக அரசின் சார்பில் அப்போது உச்ச நீதிமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட வலுவான வாதங்களின் அடிப்படையில், 2006-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கியது.
அந்த தீர்ப்பில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து முதற்கட்டமாக 142 அடிக்கு நீரை தேக்கி வைத்துக்கொள்ளலாம் என்றும்; அணையினை பலப்படுத்தும் மீதமுள்ள பணிகளை மேற்கொள்ளலாம் எனவும், இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழ்நாடு அரசிற்கு கேரளா அரசு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. மேலும், மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட உடன், தனிப்பட்ட நிபுணர்கள் ஆய்வு நடத்தி அணையின் முழு நீர்தேக்க மட்டமான 152 அடிக்கு உயர்த்துவது குறித்து முடிவு செய்வார்கள் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை அவமதிக்கும் வகையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடி என நிர்ணயம் செய்து ஒரு சட்ட திருத்தத்தை கேரளா அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத் திருத்தம் செல்லத்தக்கதல்ல என உத்தரவிட வேண்டும் என்று கோரி 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் எனது தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்கான பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வந்தன. சட்டமன்ற தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்தால், அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று மக்களிடம் தி.மு.க. கூட்டணியினர் பிரசாரம் செய்தனர்.
இது போன்ற பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டதன் விளைவாக, 2006-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மைனாரிட்டி ஆட்சி அமைந்தது. ஆனால், அண்டை மாநிலங்கள் உடனான நதிநீர்ப் பிரச்சினையில் எந்த தீர்வும் காணப்படவில்லை. முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சினையில் கருணாநிதிக்கு அக்கறை இருந்திருக்குமானால், மத்திய அரசில் அப்போது தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அப்போதே அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி இருக்கலாம். ஆனால், இதை கருணாநிதி செய்தாரா? இல்லையே! அதற்கான அக்கறை கருணாநிதிக்கு இல்லை.
நான் அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்தாலும், காவிரி நதிநீர்ப் பிரச்சினை, முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பிரச்சினை, பாலாறு நதிநீர் பிரச்சினை ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து, அறிக்கைகளை வெளியிட்டதோடு, பல போராட்டங்களையும் நடத்தி, தமிழர் நலன் காக்கும் நடவடிக்கைகளை அப்போதைய  தி.மு.க. அரசு எடுக்க காரணமாக இருந்தேன்.
மீண்டும் நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின்னர், இதன் தொடர்ச்சியாக, உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு முன்பு தமிழகத்தின் சார்பில் வலுவான, நியாயமான, சட்டப்பூர்வமான வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன. தமிழக அரசின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்களின் அடிப்படையிலும், ஆய்வுகளின் அடிப்படையிலும், குழு தனது அறிக்கையினை உச்ச நீதிமன்றத்தில் 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சமர்ப்பித்தது.
இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்ற விசாரணைகளின் போது, கேரளா அரசின் சட்ட திருத்தம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும் என்றும், அணையின் நீர்மட்டம் முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்றும், முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளதால் புதிய அணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும், தமிழகத்தின் சார்பில் ஆணித்தரமாக தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வாதங்களின் உண்மை நிலையையும், ஆய்வு அறிக்கையி னையும் அடிப்படையாக கொண்டு, ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நமக்கு கடந்த மே மாதம் வழங்கியது.
அந்த தீர்ப்பில், கேரளா அரசின் திருத்தச் சட்டம், முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்தவரையில், அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்றும், 2006-ம் ஆண்டைய உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும், இதற்கு கேரளா அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; தமிழ்நாடு அரசு அணையின் பராமரிப்பு மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறி உள்ளது. மேலும், மத்திய நீர்வளக் குழுமம், தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களின் சார்பில் நியமிக்கப்படும் மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படுவதை மேற்பார்வையிட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பினை தொடர்ந்து, மூவர் குழுவினை அமைக்குமாறு மத்திய அரசை நான் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக மூவர் குழு அமைக்கப்பட்டது. இந்த மூவர் குழுவின் மேற்பார்வையில், கடந்த 17.7.2014 அன்று, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கும் வகையில், அணையின் அடைப்பான்கள் கீழே இறக்கப்பட்டன.
இதன் மூலம் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட்டு உள்ளது.
“சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழா துஞற்று பவர்க்கு,”
என்றார் வள்ளுவர்.
அதாவது, தம்மைச் சார்ந்த குடிகளின் உயர்வுக்காக காலம் தாழ்த்தாமல் முயற்சிகளை தளராது செய்து கொண்டு இருப்பவர்களுக்கு வெற்றிகள் தாமாகவே கைகூடி வரும் என்பது இதன் பொருள்.
என்னைப் பொறுத்தவரை, தமிழக மக்கள் தான் என் மக்கள். அதனால் தான், உங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முல்லைப் பெரியாறு அணையில் காலம் தாழ்த்தாமல், அதை என்னுடைய சொந்தப் பிரச்சினையாக கருதி நான் செயல்பட்டேன். நீங்களும் எனக்கு முழு ஒத்துழைப்பு நல்கினீர்கள். இது தான் வெற்றியின் ரகசியம். இந்த வெற்றி நமது வெற்றி.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி முல்லைப் பெரியாறு அணையில் மீதமுள்ள பலப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்ட பின்னர், அணையின் முழு நீர்த்தேக்க மட்டமான 152 அடி வரையில், உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை இந்த தருணத்தில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உங்கள் வாழ்வு உயர, விவசாயிகள் வாழ்வு வளர, அனைத்து தமிழர்கள் வாழ்வு உயர இடையறாது உழைத்துக்கொண்டே இருப்பேன். இன்று எப்படி மழை பொழிந்ததோ அதுபோல் இந்த மேடையில் பாராட்டு மொழிகளும் பொழிந்தன என்பதை தெரிவித்து, அதற்காக எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பாராட்டு மொழிகளுக்கு ஏற்றவளாக இருப்பேன் என்றும், நான் தொடர்ந்து பாடுபடுவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்’’என்று கூறினார். nakkheeran,in

கருத்துகள் இல்லை: